ரஜினிக்கு விருப்பமான கடவுள் ஶ்ரீராகவேந்திரர். தனது தனிப்பட்ட, சினிமா வாழ்க்கையில் ராகவேந்திரர் நிகழ்த்திய பல்வேறு அற்புதங்களைப் பலமுறை விவரித்துச் சொல்லியிருக்கிறார் ரஜினி.

ரஜினி திடீரெனக் கிளம்பி, ஆந்திராவில் உள்ள மந்த்ராலயத்துக்குச் சென்றார். ராகவேந்திரர் பிருந்தாவனத்தை வணங்கினார். வழக்கமாக, அங்கு வருவதாக இருந்தால், ராகவேந்திரர் மடத்துக்கு முன் கூட்டியே தெரிவிக்கப்படும் என்றும் ஆனால் இந்த முறை எதுவும் சொல்லவில்லை. தடாலென்று வந்து நிற்கிறார் என்றும் மடத்து ஊழியர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

பொதுவாக, ராகவேந்திரர் முதலான குருமார்களை தரிசிக்கவும் வணங்கவும் வியாழக்கிழமையைத்தான் தேர்வு செய்வார்கள் எல்லோரும். ரஜினியும் இதற்கு விதிவலக்கல்ல. ஆனால் செவ்வாய்க்கிழமை நாளில், திடீரென மந்திராலயத்துக்குச் சென்று தரிசித்தது ஏன் என்று புரியாமல் குழம்புகிறார்கள் ரசிகர்கள்.

ரஜினியும் ஷங்கரும் இணையும் படமாகட்டும், ரஞ்சித்துடன் இணையும் காலா படமாகட்டும். அடுத்தடுத்து வெளிவர இருக்கிறது. அதற்காகத்தான் இந்த பூஜையும் வழிபாடும் என்கிறார்கள் சிலர். அப்படிப் பார்த்தால், இன்னும் நான்கைந்து மாதங்கள் கழித்து படங்கள் ரிலீஸாகும் என்று சொல்லப்படுகிறது.

’’ரஜினியிடம் எந்தப் பதட்டமோ குழப்பமோ இல்லை. அவர் தீவிர ராகவேந்திர பக்தர். அப்படியொரு பக்தராகத்தான் இன்றைக்கு இங்கே வந்தார். இதில் எந்தக் கேள்விகளுக்கும் கிசுகிசுக்களுக்கும் இடமே இல்லை” என்கிறார்கள் ரஜினிக்கு நெருங்கிய வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.

அதேசமயம், மடத்தின் முக்கியப் பொறுப்பில் உள்ள ஆச்சார்யர் ஒருவரின் மகளுக்குத் திருமணம் என்றும் அதற்கு ரஜினி அழைப்பு அனுப்பப்பட்டதாகவும் அந்த விழாவில் கலந்துகொண்டால், கூட்டம் கூடிவிடும் என்பதால், அதற்கு முன்பே சென்றுவிடலாம் என்று ரஜினி வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

அமாவாசை முடிந்து இது வளர்பிறை காலம். இப்படியான காலத்தில் வளர்பிறை சமயத்தில் மந்திராலய மகானைத் தரிசித்துவிடலாம். பிறகு பிறந்தநாள் பெளர்ணமிக்குப் பிறகான தேய்பிறைக் காலத்தில் வருகிறது. எனவே அதற்குள் சுவாமி தரிசனம் செய்துவிடலாம் என்பதாக ரஜினி நினைத்திருக்கலாம் என யூகம் கிளப்புகிறவர்களும் உண்டு.

‘’கடந்த 93ம் வருடம், ரஜினி மந்திராலயத்துக்கு வந்திருக்கிறார். பிறகு 2002ம் ஆண்டு வந்து சுவாமி தரிசனம் செய்தார். இப்போது, கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழித்து மந்த்ராலயம் சென்று மகானை வணங்கியிருக்கிறார். இதில் இருந்தே ஏதோவொரு திட்டத்துடன் ரஜினி இருப்பது தெரிகிறதுதானே!’’ என்கிறார்கள் மடத்தில் பணியாற்றும் ஊழியர்கள்.

இந்நிலையில் இன்று திடீரென மந்த்ராலயத்துக்கு வந்த ரஜினிகாந்த், அங்குள்ள ராகவேந்திரரை வழிபட்டார். பின்னர் அவர் மடாதிபதியிடம் ஆசி பெற்றார். அப்போது மடாதிபதி ரஜினியிடம் பேசும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதில் மடாதிபதி ரஜினியிடம், நீங்கள் இங்கு வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அப்படியே இந்த மடத்தில் செய்யப்படும் நற்பணிகளையும், சம்ஸ்கிருத பள்ளி, கோசாலை, பாடசாலை ஆகியவற்றை பார்வையிட்டால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும், பணி நிமித்தமாக அவசரமாக எங்காவது செல்கிறீர்களா என்கிறார். அதற்கு ரஜினி , அவசரம் எல்லாம் இல்லை. நான் வேறு ஒரு இடத்துக்கு போக வேண்டும். பொதுமக்கள் கூடுவதற்குள் நான் செல்ல வேண்டும் என்றார். அதற்கு மடாதிபதியோ சரி, நீங்கள் ஃப்ரீயாக இருக்கும் போது இங்கு வந்து நற்பணிகளை பார்வையிடுங்கள் என்கிறார்.

பகிர்