சென்னை: இரட்டை இலை இருந்தால் படுத்துக் கொண்டே ஜெயித்துவிடலாம் என பேசுவது மேடைப் பேச்சுக்கு சூப்பராக இருக்கலாம்.. விசிலடிப்பதற்கு ஏற்றதாக இருக்கலாம். ஆனால் இதே இரட்டை இலை எம்ஜிஆரையும் ஜெயலலிதாவையும் படாதபாடுபடுத்திய பெரும் வரலாறுகளும் தமிழகத்தில் அரங்கேறியிருக்கிறது.

1973-ம் ஆண்டு திண்டுக்கல் லோக்சபா தொகுதிக்கான இடைத் தேர்தலில் மாயத்தேவரால் அதிமுகவின் சின்னமாக தேர்வு செய்யப்பட்டதுதான் இரட்டை இலை. இதன்பின்னர் அதிமுகவின் அதிகாரபூர்வ சின்னமானது இரட்டை இலை சின்னம்

அதிமுக தொண்டர்கள் இரட்டை இலையை உயிரினும் மேலானதாக கருதினார்கள். ஆனால் இதே இரட்டை இலை எம்ஜிஆரை சோதனைக்குள்ளாக்கிய சம்பவமும் நடந்தது. 1977 லோக்சபா மற்றும் சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் தாராபுரம் சட்டசபை தொகுதியில் எம்ஜிஆர் அதிகாரப்பூர்வமாக அறிவித்த வேட்பாளர் அலங்கியம் பாலகிருஷ்ணன். ஆனால் அய்யாசாமி என்பவருக்கே இரட்டை இலை சின்னத்துக்கான அதிகாரப்பூர்வ கடிதம் சென்றது.

இதனால் அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டது.அப்போது வேறுவழியில்லாமல் அலங்கியம் பாலகிருஷ்ணனுக்கு சிங்கம் சின்னத்தை வாங்கிக் கொடுத்தார் எம்ஜிஆர். அத்துடன் இரட்டை இலை வாக்களிக்காதீர்கள் என தாராபுரத்தில் பிரசாரம் செய்தார் என கூறப்படுவது உண்டு. ஆனால் கடைசியில் இரட்டை இலை வைத்திருந்த அய்யாசாமி அமோக வெற்றி பெற எம்ஜிஆர் அறிவித்த வேட்பாளர் படுதோல்வியைத்தான் தழுவினார். அதேபோல 1996-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட போதும் சுகவனம் என்கிற திமுக வேட்பாளரிடம் படுதோல்வியைத்தான் தழுவினார்.அதே போல் எல்லா தேர்தல்களிலும் எல்லா தொகுதிகளிலும் வெல்லக் கூடியதும் இரட்டை இலை. உதாரணமாக 1980 சட்டசபை தேர்தலில் அதிமுக வென்றாலும் லோக்சபா தேர்தலில் படுதோல்வியைத்தான் சந்தித்தது. இது ஜெயலலிதா காலத்திலும் நடந்திருக்கிறது என்பதுதான் யதார்த்தம்

பகிர்