மதுரை அன்பு என்று அழைக்கப்படும் அன்புச்செழியனுக்குச் சொந்தமான மேலமாசி வீதியில் உள்ள கோபுரம் பிலிம்ஸ் அலுவலகம் பட விநியோகம், வசூல் தொடர்பான வேலைகளுக்கானது. சென்னை அலுவலகம், மதுரை வீடு ஆகியவற்றில்தான் சினிமா பிரமுகர்களைச் சந்திப்பார் அன்புச்செழியன். தயாரிப்பாளர்கள் நேரடியாக அவரிடம்தான் பேசுவர். தயாரிப்பாளரின் நிறுவனம், பின்னணி ஆகியவற்றை அறிந்தே கடன் வழங்க முடிவெடுப்பார். ரூ.5 கோடிக்குள் கடன்பெற்றால் 4 சதவீத வட்டியும், அதற்கு மேல் கடன் பெற்றால் 3 சதவீத வட்டியும் விதிப்பது வழக்கம் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

ஆரம்ப காலத்தில், அன்புச்செழியனுடன் அவரது தம்பி அழகரும் இணைந்து தொழில் செய்தார். மதுரையில் வேறு சில சினிமா பைனான்சியர்கள் இருந்தாலும் பெரிய தயாரிப்பாளர்களின் தேர்வு அன்புச்செழியன்தான். காரணம், 5 கோடி வரையிலான பணத்தை ஆர்டிஜிஎஸ் எனப்படும் வங்கிப் பரிமாற்ற முறையில் நொடியில் செய்து முடிப்பவர் அவர். 2015-ல் வருமான வரித் துறை ரெய்டில் சிக்கிய பிறகு, சூப்பர் டேக்ஸ் பேயராக மாறிவிட்டார் அன்பு. ஆண்டுக்கு ரூ.5 கோடி வரை வருமான வரி செலுத்துகிறார் என்கிறார்கள்.

அவரிடம் பெரும் அரசியல் புள்ளிகளின் பணம் இருப்பதாகக் கூறுகிறார்கள். தங்கள் பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதால், அன்புச்செழியனையும் பாதுகாக்கிறார்கள் அரசியல்வாதிகள். அன்புச்செழியன் மீது சினிமா தயாரிப்பாளர் தங்க ராசு புகார் கொடுத்தபோது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று நெருக்கடிகள் வந்தன. அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த அஸ்ரா கர்க், 30.11.2011-ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு அன்புச்செழியனை அழைத்துச் சென்று அதிகாலை 6 மணிக்கே மாஜிஸ்திரேட் வீட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார். அவர் மீது ஆயுதங்களைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தல், கந்துவட்டி தடைச்சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்கு பதியப்பட்டது. அஸ்ரா கர்க் பணியிட மாற்றம் செய்யப்பட்ட பிறகு, அன்புச்செழியன் மீதான நடவடிக்கை தொய்வடைந்தது.

மேலிட தலையீடு காரணமாகவும், புகார் கொடுத்த தயாரிப்பாளருடன் அன்புச்செழியன் சமரசம் செய்துகொண்டதாலும் 23.10.13 அன்று அந்த வழக்கை ஊத்தி மூடியது காவல் துறை. தற்போதும் அசோக்குமார் குடும்பத்தினருடன் அதுபோன்ற பேச்சுகள் நடப்பதாக கூறப்படுகிறது. அன்புச்செழியனால் பாதிக்கப்பட்டவர்கள் நிறைய பேர் இருந்தாலும் சசிகுமார் துணிந்து புகார் கொடுத்துள்ளதற்கு அவரது குடும்பப் பின்னணியே காரணம் என்கிறார்கள். புதுதாமரைப்பட்டியில் ஏராளமான சொத்துகள், ஒத்தக்கடையில் தியேட்டர், மதுரையிலும் வீடு என்று வசதியாகவும், பலமான நட்பு வட்டாரமும் அவருக்கு இருக்கிறது. இறந்த அசோக்குமார், சசிகுமாரின் சொந்த அத்தை மகன் மட்டுமல்ல, சசிகுமாரின் தங்கை வனிதாவைத்தான் திருமணம் செய்துள்ளார். மதுரை முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ தெய்வநாயகத்தின் சொந்த தம்பி பாலகிருஷ்ணனின் மகன்தான் அசோக்குமார்.

எனவே, சசிகுமாரின் தரப்பில் இந்த வழக்கை தீவிரமாக முன்னெடுக்கும் முயற்சிகள் நடக்கின்றன. ஆனால், அசோக்குமாருக்கும் அன்புச்செழியனுக்கும் இடையே நேரடியாக பணப் பரிமாற்றம் நடந்ததற்கான ஆதாரங்களோ, பதிவு செய்யப்பட்ட செல்போன் உரையாடலோ இல்லை என்று கூறப்படுகிறது. சென்னையில் இருந்து வந்த தனிப்படை போலீஸார் விசாரணை மட்டும் நடத்திச் சென்றுள்ளனர். அன்புச்செழியன் வெளிநாட்டுக்கோ, வெளிமாநிலத்துக்கோ தப்பிவிட்டதாகவும் தெரிகிறது. கைது நடவடிக்கைக்கு முன்பாகவே அவர் முன்ஜாமீன் பெற்றுவிடுவார் என்றும் கூறுகிறார்கள்.

காவல்துறையினரும் அன்புச்செழியனுக்கே ஆதரவாக இருப்பதாக குமுறுகிறார்கள் அசோக்குமாரின் குடும்பத்தினர். முதல்வர் நேரடியாகத் தலையிட்டு உத்தரவிட்டால் ஒழிய, அன்புச்செழியன் கைது செய்யப்படும் வாய்ப்பு குறைவு என்கிறார்கள் அவர்கள்.

பகிர்