Credit: Vikatan
தேர்தல் நேரத்தில் பழைய குப்பைகள் கிளறப்படும். அவதூறான குற்றச்சாட்டுகள் அள்ளி வீசப்படும். நாடாளுமன்றத் தேர்தலைவிட கடும் அனலோடு குஜராத் சட்டமன்றத் தேர்தலை காங்கிரஸ் கட்சியும் பி.ஜே.பி-யும் சந்திக்கின்றன. இந்தச் சூழலில் பி.ஜே.பி தேசியத் தலைவர் அமித் ஷா பற்றிய ஏராளமான கேள்விகளோடு வெளியாகியிருக்கும் இந்தத் தகவலை வெறும் அவதூறு என ஒதுக்கிவிட முடியாது. இந்த தேசத்தின் உச்சபட்ச நம்பிக்கையாக இருக்கும் நீதிமன்றம், சி.பி.ஐ என எல்லா அமைப்புகளையும் கேள்விக்குள்ளாக்குகிறது இந்தச் செய்தி.
இந்த விவகாரத்துக்குள் போவதற்கு முன்பாக ஒரு சின்ன ஃபிளாஷ்பேக்… குஜராத்தில் சொராபுதீன் என்பவரைத் தீவிரவாதி எனப் போலியாக 2005-ம் ஆண்டு என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றதாக எழுந்த புகாரை சி.பி.ஐ விசாரித்தது. அப்போது மத்தியில் காங்கிரஸ் அரசு இருந்தது. சொராபுதீன் வழக்கை எடுத்த சி.பி.ஐ., அப்போதைய குஜராத் உள்துறை இணை அமைச்சர் அமித் ஷாவைக் கைது செய்தது. ‘இந்த வழக்கு குஜராத் மாநிலத்தில் நடத்தப்பட்டால் சாட்சிகள் உள்பட அனைவருமே மிரட்டப்படுவார்கள்’ என சி.பி.ஐ சொன்னதால், மும்பைக்கு வழக்கை மாற்றி உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், ‘ஆரம்பம் முதல் கடைசிவரை ஒரே நீதிபதியே இதை விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும்’ என்றும் கூறியது. இந்தச் சூழலில், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பி.ஜே.பி மூத்த தலைவர் அருண் ஜெட்லி ஒரு கடிதம் எழுதினார். ‘அமித் ஷாவைக் கைது செய்து அதன்மூலம் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு சி.பி.ஐ குறி வைக்கிறது’ என அதில் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்தச் சூழலில் பி.ஜே.பி தேசியத் தலைவராக அமித் ஷா தேர்வானார். 2014 மே மாதம், மோடி தலைமையில் மத்தியில் பி.ஜே.பி அரசு அமைகிறது. அதே ஆண்டு டிசம்பரில், ‘அமித் ஷா மீதான வழக்குக்கு அரசியல் காரணங்களே அடிப்படை. அவர் மீதான குற்றச்சாட்டுகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன’ என அவரை விடுவித்தது, மும்பை சி.பி.ஐ நீதிமன்றம். வெற்றி வீரராக வெளிப்பட்டார் அமித் ஷா.
அமித் ஷாமீதான இந்த வழக்கை விசாரித்து, இடையில் இறந்துவிட்ட பிரிஜ்கோபால் ஹர்கிஷன் லோயா என்ற நீதிபதியின் குடும்பத்தினருடன் ‘தி கேரவன்’ இதழின் செய்தியாளர் நிரஞ்சன் ராக்லே கடந்த ஓராண்டு காலமாகப் பேசி பல திடுக்கிடும் உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளார். திரைப்படங்களை மிஞ்சும் திருப்பங்களோடு நடை பெற்ற இந்த வழக்கு விசாரணையின் ஒவ்வொரு கட்டத்தையும் கேள்விக் குள்ளாக்குகிறார் அவர்.
‘அமித் ஷா வழக்கை ஒரே நீதிபதி ஆரம்பத்திலிருந்து இறுதிவரை விசாரித்துத் தீர்ப்பு கூற வேண்டும்’ என்றது உச்ச நீதிமன்றம். ஆனால், இதை விசாரித்தது மூன்று நீதிபதிகள்.
முதலில் வந்தவர், ஜே.டி.உட்பட். உடல்நிலையைக் காரணம் காட்டி விசாரணைக்கு ஆஜராகாமல் அமித் ஷா தவிர்த்ததைக் கடுமையாகக் கண்டித்தார் அவர். 2014 ஜூன் ஆரம்பத்தில் நடந்த விசாரணையில், ‘ஜூன் 26-ம் தேதி அமித் ஷா கண்டிப்பாக ஆஜராக வேண்டும்’ என உத்தரவு போட்டார். ஆனால், ஜூன் 25-ம் தேதி அவர் திடீரென புனே நீதிமன்றத்துக்கு டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டார்.
அடுத்து வந்தவர் பிரிஜ்கோபால் ஹர்கிஷன் லோயா. அவரும் அமித் ஷாவிடம் கண்டிப்பு காட்டினார். விசாரணை நீதிபதியாக இருந்தபோதே, 2014 டிசம்பர் 1-ம் தேதி அதிகாலை அவர் மரணமடைந்தார்.
அதைத் தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்க எம்.பி.கோசாவி என்ற நீதிபதி வந்தார். ‘என்னை இந்தப் பொய்யான வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும்’ என அமித் ஷா தாக்கல் செய்த மனுவை அவர் டிசம்பர் 15 மற்றும் 17-ம் தேதிகளில் விசாரித்தார். அமித் ஷாவின் வழக்கறிஞர்கள் நாள்முழுக்க வாதிட, இறுதியாக சி.பி.ஐ தரப்பு 15 நிமிடங்கள் மட்டுமே வாதிட்டது. இரண்டே வாரங்களில் வழக்கை விசாரித்து முடித்த கோசாவி, டிசம்பர் 30-ம் தேதி அமித் ஷாவை வழக்கிலிருந்து விடுவித்தார்.
அமித் ஷாவை விடுவித்ததை எதிர்த்து, சி.பி.ஐ அப்பீல் செய்யவில்லை. சமூக ஆர்வலர் ஹர்ஷ் மந்தர், இந்தத் தீர்ப்பை எதிர்த்துப் பொதுநல வழக்கு போட்டார். ஆனால், ‘இந்த வழக்கில் நீங்கள் பாதிக்கப்பட்டவர் இல்லை’ என்று சொல்லி, வழக்கை மீண்டும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
‘எல்லாம் சுபம்’ என அமித் ஷா நினைத்திருக்கும் நிலையில், ‘நீதிபதி லோயா மரணத்தில் மர்மம் உள்ளது’ என்று அவரின் குடும்பம் சொல்கிறது. லோயாவின் தந்தை ஹர்கிஷன், சகோதரி டாக்டர் அனுராதா பியானி, லோயாவின் மனைவி ஷர்மிளா, மகன் அனுஜ் எனப் பலரும் மூன்று ஆண்டுகள் கழித்து இப்போது மனம் திறந்திருக்கிறார்கள். திடுக்கிடவைக்கும் பல தகவல்களை அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
‘‘அமித் ஷாவுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கினால் 100 கோடி ரூபாய் தருவதாக என்னிடம் பேரம் பேசுகிறார்கள். எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது’’ எனக் குடும்பத்தினரிடம் லோயா சொல்லியிருக்கிறார். பேரம் பேசியதாக அவர் குற்றம்சாட்டியது, அப்போதைய பம்பாய் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி மோஹித் ஷாவை. குஜராத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் மோஹித் ஷா.
குறிப்பாக ‘டிசம்பர் 30-ம் தேதி இந்தத் தீர்ப்பை வழங்குங்கள். அன்றைய தினத்தில் வேறொரு முக்கியமான விஷயம், பரபரப்பான செய்தியாகும். இந்தத் தீர்ப்பை யாரும் கவனிக்க மாட்டார்கள்’ என மோஹித் ஷா சொன்னாராம். லோயா இறந்த பிறகு வேறு நீதிபதி வந்தும், அதே நாளில்தான் தீர்ப்பு வெளியானது. அன்றுதான் மகேந்திர சிங் டோனி, டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். செய்தி சேனல்கள் டோனி பற்றிய செய்தியைக் கதறிக் கதறி சொல்லிக் கொண்டிருக்க, திரைக்குக் கீழே சின்னதாக ‘அமித் ஷா குற்றமற்றவர் என விடுதலை’ என்று ஸ்க்ரோல் ஓடிக்கொண்டிருந்தது. குஜராத் கிரிக்கெட் சங்கத் தலைவராக அமித் ஷாவுக்கு இருக்கும் தொடர்புகள் உலகறிந்தன.
மோஹித் ஷாவின் பேரத்துக்கு மசியாத லோயா எப்படி இறந்தார்? ‘ஹார்ட் அட்டாக்கில் இறந்தார்’ என போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் கூறுகிறது. 2014 நவம்பர் 30-ம் தேதி, சக நீதிபதி ஒருவரின் மகள் திருமணத்துக்காக நாக்பூர் சென்றார் லோயா. அன்று இரவு அரசு கெஸ்ட் ஹவுஸில் சக நீதிபதிகளோடு தங்கியிருந்தார். இரவில் திடீரென அவருக்கு நெஞ்சுவலி வந்ததால், ஒரு தனியார் மருத்துவமனைக்குஅழைத்துச் சென்றிருக்கிறார்கள். ஈ.சி.ஜி என்ற அடிப்படையான சோதனையைச் செய்யும் கருவிகூட ரிப்பேராகிக் கிடந்த மருத்துவமனை அது.
வி.ஐ.பி-க்கள் தங்கியிருந்த அந்த கெஸ்ட் ஹவுஸில் ஒரே ஒரு கார்கூடவா இருந்திருக்காது? லோயாவை ஆட்டோவில்தான் அழைத்துச் சென்றார்கள். பகலிலேயே அந்த கெஸ்ட் ஹவுஸ் அருகே ஆட்டோ கிடைக்காது. ஆட்டோ ஸ்டாண்ட் அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தள்ளியிருக்கிறது. நள்ளிரவில் எப்படி ஆட்டோ கிடைத்தது?
பொதுவாக உறவினர்களின் சம்மதம் பெற்றே போஸ்ட்மார்ட்டம் செய்வார்கள். ஆனால், லோயா விவகாரத்தில் எல்லாமே மர்மமாக நடந்தன. நள்ளிரவிலோ, மறுநாள் அதிகாலையிலோ அவர் இறந்ததாகச் சொன்னாலும், காலையில்தான் குடும்பத்துக்குத் தகவல் சொன்னார்கள். போலீஸார் அவர்களாகவே பிரேதத்தை எடுத்துச் சென்று விரைவாக போஸ்ட்மார்ட்டம் முடித்துவிட்டு, லோயா உடலை மும்பைக்கு அனுப்பாமல், அவரின் பூர்வீகக் கிராமத்துக்கு அனுப்பிவிட்டார்கள். உடலோடு சக நீதிபதிகளோ, ஊழியர்களோ யாரும் செல்லவில்லை. மரண ஊர்தியின் டிரைவர் மட்டுமே எடுத்துச் சென்றார்.
போஸ்ட்மார்ட்டம் முடிந்தபிறகே லோயா குடும்பத்துக்கு போலீஸ் தகவல் தெரிவித்தது. ‘இறந்தவரின் ஒன்றுவிட்ட சகோதரர்’ கையெழுத்து பெற்று போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டதாக போலீஸ் சொல்கிறது. ஆனால், நாக்பூரில் லோயாவுக்கு அப்படி யாரும் உறவுகள் இல்லை.
லோயா ஹார்ட் அட்டாக்கில் இறந்ததாகச் சொல்லப்பட்டாலும், அவரின் தலையில் காயம் இருந்ததையும், பின் கழுத்திலும் சட்டையிலும் ரத்தக்கறை இருந்ததையும் பார்த்து உறவினர்கள் அதிர்ந்தார்கள். மற்றவர்களைவிட லோயாவின் சகோதரியான டாக்டர் அனுராதா பியானிக்குக் கூடுதல் அதிர்ச்சி. ‘மரணத்தில் சந்தேகம் இருக்கிறது, மறுபடியும் போஸ்ட்மார்ட்டம் செய்ய வேண்டும்’ என அவர்கள் சொன்ன வாதங்களை நிராகரித்து, வற்புறுத்தி இறுதிச்சடங்கு செய்ய வைக்கப்பட்டார்கள்.
கடைசி நிமிடங்களில் லோயா வைத்திருந்த உடைமைகளை அவர் குடும்பத்திடம் போலீஸ்தான் ஒப்படைக்க வேண்டும். ஆனால், லோயாவின் போனை நான்கு நாள்கள் கழித்து ஓர் ஆர்.எஸ்.எஸ் பிரசாரகர் கொண்டுவந்து கொடுத்தார். அதிலிருந்த எல்லா தகவல்களும் அழிக்கப்பட்டிருந்தன. ‘இவர்களிடமிருந்து விலகி, பாதுகாப்பாக இருங்கள்’ என்று யாரோ அனுப்பிய ஒரே ஒரு எஸ்.எம்.எஸ் மட்டுமே மிஞ்சியிருந்தது.
உண்மைகளை நிரந்தரமாகப் புதைத்து வைத்துவிட முடியாது.
Credit: Vikatan