Credit:  BBC Tamil

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிச்சாமி அணிகளுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்த பின்னர், மதுரையில் அதிமுகவினர் ஏற்பாடு செய்த முப்பெரும்விழாவுக்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை முதல்வரான ஓ.பன்னீர்செல்வத்தை அழைக்கவில்லை என்று சர்ச்சை எழுந்துள்ளது.

இரட்டை இலை சின்னம் கிடைத்ததை கொண்டாடும் விழா, எம்ஜிஆர் நுற்றாண்டு விழா மற்றும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா ஆகியவற்றை ஒன்றாக கொண்டாடும் இந்த முப்பெரும் விழாவில் ஓபிஎஸ் அழைக்கப்படவில்லை என்றும் ஓபிஸ் அணியினர் நிராகரிக்கப்படுகின்றனர் என்றும் கருத்துகள் வெளியாகியுள்ளன.

ஓபிஎஸ் அணியின் வெளிப்பாடு

ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த ஆஸ்பயர் சுவாமிநாதன் தனது டிவிட்டர் பக்கத்தில் சனிக்கிழமை (நவம்பர் 25) அன்று ”இரட்டை இலை மீட்பு….* மாபெரும் கொண்டாட்டமாம்…. முப்பெரும் விழாவாம்….. கட்சிக் கொடி ஏற்றுவார்களாம்…… *மாண்புமிகு அமைச்சர் அறிவிப்பு…..* “யாருக்கும் அழைப்பும் இல்லை, தகவலும் இல்லை, தலைவர்கள் உட்பட…..” …..மனங்கள் உருண்டுகொண்டு தான் இருக்கும் போல….” என பதிவிட்டுள்ளார்.

ஆஸ்பயர் சுவாமிநாதன்படத்தின் காப்புரிமைTWITTER/@ASPIRESWAMI

சுவாமிநாதனிடம் அவர் பதிவிட்டிருந்த கருத்தைப்பற்றி விளக்கம் கேட்டபோது கட்சிக்குள் பிளவு இல்லை என்றும் தலைவர்கள் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கவேண்டும் என்பதையே வலியுறுத்தியதாகவும் கூறினார்.

”இரட்டை இலை சின்னம் கிடைத்த பிறகு எடுக்கப்படும் ஒரு பெரியவிழா. இதற்கு ஓபிஎஸ்சை அழைக்கவில்லை. அவர் மதுரையில் இருந்தபோதும் அவரை அழைக்கவில்லை என்பது எங்களுக்கு வருத்தமாக உள்ளது. எங்களது மனக்குமுறலை வெளிப்படுத்தினேன்,” என சுவாமிநாதன் பிபிசிதமிழிடம் தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக, கடந்த திங்களன்று (நவம்பர் 20) “ஓபிஎஸ்- இபிஎஸ் அணி இணைந்து இன்றோடு மூன்று மாதங்கள் நிறைவுற்று நான்காவது மாதம் தொடங்குகிறது. மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்?,” என்று தனது முகநூலில் பதிவிட்டிருந்தார் மைத்ரேயன்.

ஓபிஎஸ் அணியைச் சேர்ந்தவர்கள் சமூகவலைத் தளங்களில் வெளியிட்டுவரும் இந்த கருத்துகள் இரண்டு குழுவுக்கும் இடையில் பிளவு இருப்பதை உறுதிசெய்கின்றன என்று கருத்துகள் எழுந்துள்ளன.

பிளவு இல்லை என்கிறது இபிஎஸ் அணி

இபிஎஸ் அணியில் உள்ள கோவை செல்வராஜ், அதிமுகவின் தகவல்தொழில்நுட்ப பிரிவு செயலரான ராமச்சந்திரன் ஆகியோர், மதுரை விழாவில் ஏற்பட்ட சிக்கல்கள் எந்த விதத்திலும் ஓபிஎஸ்-இபிஎஸ் அணிகளுக்கு இடையில் பிளவை ஏற்படுத்தாது என்று ஊடகங்களிடம் கூறிவருகின்றனர்.

சிறுகருத்து வேறுபாடும் எங்கள் இரு அணியில் உள்ளவர்களுக்கு இடையில் இல்லை. கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளை இரண்டு தலைவர்களுக்கும் கலந்து பேசியே நடக்கின்றது. எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் இருவரும் ஒன்றாகவே கலந்துகொள்வதை பலமுறை எல்லோரும் பார்த்திருப்பார்கள் என்று கூறியுள்ளனர்.

ஓபிஎஸ் அவர்கள் கட்சியின் பிற நிகழ்சிகளில் மதுரையில் கலந்துகொண்டுள்ளார். யாரும் தங்களது சொந்தக் கருத்துகளை சொல்லக்கூடாது. கட்சி தலைமை சொல்லவதை மட்டுமே அனைவரும் ஏற்றுசெயல்படவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து, அமைச்சர் ஜெயகுமாரிடம் பிபிசி பேசிய போது, “தேர்தல் நேரத்தில் எதிரிகள் ஆதாயம் தேட இது போன்ற குற்றச்சாட்டுகள் வழிவகுக்கும். எனவே கட்சியினர் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். இது ஒரு சாதாரண நிகழ்ச்சி. அழைப்பிதழில் ஓ. பன்னீர் செல்வத்தின் பெயர் இருந்தது. அதனால், அவர் திட்டமிட்டு புறக்கணிக்கப்படவில்லை.” என்று தெரிவித்தார்.

ஓபிஎஸ்-இபிஎஸ்-டிடிவி

டிடிவி அணி சொல்வது என்ன?

இதற்கிடையில், ஓபிஎஸ்-இபிஎஸ் அணிகளுக்கு இடையில் மனதளவில் ஒற்றுமை ஏற்படவில்லை என்பதைதான் மதுரை நிகழ்ச்சி காட்டுகிறது என்கிறார் டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த எம்எல்ஏ தங்கத்தமிழ்செல்வன் கூறினார்.

பிபிசிதமிழிடம் பேசிய தங்கத்தமிழ்செல்வன், ”இரட்டை இலை சின்னம் கிடைத்துவிட்டால் போதுமா? இந்த இரு அணிகளுக்கும் உள்ள போட்டியே கட்சிக்கு சருக்கலாக அமையும். உண்மையான அதிமுக டிடிவி அணியினர்தான்.கட்சி சின்னமான இரட்டை இலை அதன் மதிப்பை தற்போது இழந்துவருகிறது,” என்றார் அவர்.

மனதளவில் ஓபிஎஸ்-இபிஎஸ் அணியினர் இணையவில்லை என்றும் அவர்களுக்கும் இருக்கும் வேறுபாடு மேலும் வெளிப்படும் என்றும் தங்கத்தமிழ்செல்வன் குறிப்பிட்டார்.

டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெறவுள்ள ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவிஅணி சார்பாக ஒரு வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்றும் தங்கத் தமிழ்செல்வன் கூறினார்.

ஓபிஎஸ்-இபிஎஸ்

நீண்டநாள் நீடிக்குமா பந்தம்?

இபிஎஸ் அணியினர் ஓபிஎஸ் அணியுடன் தற்போதுவரை சுமூகமாக இல்லை என்பதை காட்டுவதாக மதுரை நிகழ்ச்சி உள்ளது என்கிறார் பத்திரிக்கையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன்.

”இபிஎஸ்சுக்கு இன்னும் கட்சியை நடத்துவதில் அனுபவம் இல்லாமல் இருப்பது மற்றும் ஓபிஎஸ்சுக்கு டெல்லியில் உள்ள செல்வாக்கு ஆகியவை இபிஎஸ்சுக்கு ஓபிஎஸ்சுடன் சுமூகமாக இருக்கமுடியாத நிலையை உருவாக்குகிறது,” என்றார்.

அவர் மேலும், தமிழக அரசியலை கவனித்துவரும் பலரும் ஓபிஎஸ்-இபிஎஸ் என இரண்டு அணிகளின் தலைமையில் கட்சியும் ஆட்சியையும் செயல்படும் இந்த நடைமுறை நெடுநாட்களுக்கு நீடிக்காது என்று நம்புகிறார்கள்.

”அதிமுக என்ற கட்சிக்கு ஒரே ஒரு நபர் தலைமை வகிக்கவேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது. அதற்கான போட்டிதான் ஒரே கட்சியாக இருந்தாலும் ஓபிஎஸ்-இபிஎஸ் அணி என இரண்டு பிரிவாக கட்சி செயல்படக்காரணம்,” என்றார் ராதாகிருஷ்ணன்.

பகிர்