முப்பெரும் விழா நடத்தி அதில் இரட்டை இலை வெற்றி விழா நடத்தும் போது அதை பெற்று தந்ததில் எங்களுக்கு பங்கில்லையா? கொடியேற்று விழாவிற்கு அழைக்காத காரணம் என்ன என்று மைத்ரேயன் கேள்வி எழுப்பினார்.
அதிமுகவில் அணிகள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை என்ற வார்த்தைக்கு சொந்தக்காரரான மைத்ரேயன் எடப்பாடி அணியினரால் ஓபிஎஸ் அணி புறக்கணிக்கப்படுவதை முகநூலில் மைத்ரேயன் பதிவு செய்ய அது பரபரப்பானது.
அதிமுகவில் எடப்பாடி, ஒபிஎஸ் அணிகள் தனித்தனியாகத்தான் செயல்படுகின்றனர் என்பதற்கு பல சம்பவங்களை காரணமாக கூறினாலும் இன்று அது வெளிப்படையாக வெடித்துள்ளது.
மதுரை தோப்பூரில் முப்பெரும் விழா அதிமுகவினரால் கொண்டாடப்பட்டது. அதில் எம்ஜிஆர் நூற்றாண்டு நூறடி உயர கொடி ஏற்றப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர்ராஜு, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துக்கொண்டனர்.
இந்த கூட்டத்திற்கு ஓபிஎஸ், கே.பி.முனுசாமி உள்ளிட்ட ஓபிஎஸ் அணியை சேர்ந்த யாரும் அழைக்கப்படவில்லை. உள்ளூர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மாவட்ட எம்பி கோபால கிருஷ்ணன், எம்.எல்.ஏ சரவணனையும் அழைக்கவில்லை. கல்வெட்டிலும் பெயர் இல்லை.
இதை இன்று மீண்டும் மைத்ரேயன் விமர்சித்திருந்தார். இந்நிலையில் இன்று மாலை ஆளுநரை சந்திக்க வந்த மைத்ரேயன் செய்தியாளர்களை சந்தித்தார். காலையில் நடந்த சம்பவம் குறித்து மைத்ரேயனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது அவர் கூறியதாவது:
“அப்படிப்பட்ட சம்பவம் இனி நடக்ககூடாது என்று கூறுகிறேன், ஆனால் மனதுக்கு சற்று நெருடலாகத்தான் இருக்கிறது. மதுரை விழா குறித்து தகவல் முறைப்படி தெரிவிக்கவில்லை. இது ஏதோ முதலமைச்சர் ராமநாதபுரம் செல்லும் வழியில் நடந்த கொடியேற்று விழா என்றால் அதைப்பற்றி பேச மாட்டேன்.
ஆனால் இரட்டை இலை சின்னம் கிடைத்தபின்னர் அந்த வெற்றியை கொண்டாடும் முதற்கூட்டம். முப்பெரும் விழா என்று அறிவித்து இரட்டை இலை சின்னம் கிடைத்த விழா, எம்ஜிஆர் பிறந்த நாள் விழா, ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை கொண்டாடுகின்றனர்.
கடந்த 6, 7 மாதங்களாக வாராவாரம் சீசன் டிக்கெட் எடுப்பது போல் நானும், கே.பி.முனுசாமியும், கே.சி.பழனிசாமியும், மனோஜ் பாண்டியனும், சிவி.சண்முகமும் டெல்லிக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் நடையாக நடக்கவில்லையா. இரட்டை இலையை பெற்றதில் எங்களுக்கு பங்கில்லையா?
இதை ஓபிஎஸ்ஸும், எடப்பாடியும் விவாதித்து இது பற்றி உரிய முடிவு எடுப்பார்கள் என்று நம்புகிறேன். ஓபிஎஸ்சை அழைத்தார்களா அல்லது அவருக்கு வேறு நிகழ்ச்சி இருந்ததா எனக்கு தெரியாது. ஆனால் தொகுதி எம்பி கோபால கிருஷ்ணன், தொகுதி எம்.எல்.ஏ சரவணன் இவர்களையும் அழைக்கவில்லை.
இத்தகைய குளறுபடிகள் இல்லாமல் இருக்கவேண்டும். கடந்த காலம் கசந்த காலமாக இருக்கட்டும், வருங்காலம் வசந்த காலமாக அமையட்டும். ஆர்.கே.நகர் தேர்தலில் அனைத்தையும் மறந்து வெற்றிக்காக பாடுபடுவோம்.
தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்று விட்டோம், இரண்டாம் இடத்திற்கு திமுகவா? தினகரனா? என்று அவர்கள் தான் போட்டியிடணும். பாஜக ஆதரவை ஏன் கேட்க வேண்டும் அவர்களை பற்றி கவலைப்படவில்லை.” இவ்வாறு மைத்ரேயன் கூறினார்.
மாண்புமிகு அம்மா அவர்கள் வகுத்த கட்சியின் கோட்பாடுகளை யார் மீறினாலும் குற்றமே,எந்த அடிப்படை தொண்டனும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அது அமைச்சராக இருந்தாலும் சரி. அரசியல் நாகரீகத்தோடு ஒற்றுமையாக செயல்படுவதே பெருந்தன்மை. தொண்டர்களை எதிர்த்து வென்றவர்கள் இருந்ததாக சரித்திரம் இல்லை
— Singai GRamachandran (@RamaAIADMK) November 25, 2017
இதேபோல ஒபிஎஸ் ஆதரவாளரான சிங்கை ராமச்சந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் மாண்புமிகு அம்மா அவர்கள் வகுத்த கட்சியின் கோட்பாடுகளை யார் மீறினாலும் குற்றமே,எந்த அடிப்படை தொண்டனும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அது அமைச்சராக இருந்தாலும் சரி. அரசியல் நாகரீகத்தோடு ஒற்றுமையாக செயல்படுவதே பெருந்தன்மை. தொண்டர்களை எதிர்த்து வென்றவர்கள் இருந்ததாக சரித்திரம் இல்லை என்று பதிவிட்டார்
மற்றோரு ஓபிஎஸ் ஆதரவாளரான ஆஸ்பயர் சுவாமிநாதன் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முகநூலில் பதிவிட்ட அவர், ” இரட்டை இலை மீட்பு மாபெரும் கொண்டாட்டமாம். முப்பெரும் விழாவாம். கட்சி கொடி ஏற்றுவார்களாம். யாருக்கும் அழைப்பு இல்லை. தகவலும் இல்லை. தலைவர்கள் உட்பட. மனங்கள் உருண்டுகொண்டுதான் இருக்கும் போல” என கூறியுள்ளார். இது இரட்டை இலை சின்னம் கிடைத்திருந்தாலும் கூட அதிமுகவில் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பு இடையே மனக்கசப்பு இருப்பதை காட்டுவதாக உள்ளது என்று சலசலப்பை பற்ற வைத்தார்.