சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட மதுசூதனனுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. அவருக்கு போட்டியாக பாலகங்கா, கோகுல இந்திரா உள்பட 27 பேர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். இன்று வேட்பாளரை அறிவிக்க அதிமுக திட்டமிட்டுள்ளது. சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு அடுத்த மாதம் 21ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. திமுக சார்பில் மருதுகணேஷ் மீண்டும் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் யார் போட்டியிட போகிறார்கள் என்ற பரபரப்பு நிலவி வருகிறது. மீண்டும் மதுசூதனனை ஆர்.கே.நகரில் நிறுத்த வேண்டும் என்று ஓ.பி.எஸ். தரப்பினர் கூறி வருகின்றனர். இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்று முன்தினம், நேற்றும் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் வாங்கப்பட்டன. நேற்று அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் விருப்ப மனு தாக்கல் செய்தார்.
வடசென்னை தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்பியுமான பாலகங்கா, ஆட்சி மன்ற குழு உறுப்பினர் தமிழ்மகன் உசேன், முன்னாள் மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் உள்பட 26 பேர் விருப்ப மனு தாக்கல் செய்தனர். முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா சார்பில் அவரது உதவியாளர் விருப்ப மனுவை வாங்கி சென்றார். ஆனால், அவர் விருப்ப மனுவை வாங்க வரவில்லை. கடைசி நேரத்தில் அவரும் விருப்ப மனு தாக்கல் செய்தார். இதையடுத்து விருப்ப மனு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்தது. ஒரே நாளில் மதுசூதனனை எதிர்த்து 26 பேர் விருப்ப மனு தாக்கல் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவு பேர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளதை பார்த்து அதிமுக தலைமை அதிர்ச்சியடைந்துள்ளது. அது மட்டுமல்லாமல் மதுசூதனனும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
இந்த நிலையில் இந்த விருப்ப மனுக்கள் இன்று நடைபெறும் ஆட்சி மன்றக்குழுவில் பரிசீலனை செய்யப்பட உள்ளது. அதில் யாருக்கு செல்வாக்கு அதிகமாக உள்ளது, யாரை நிறுத்தினால் வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்ற அடிப்படையில் வேட்பாளர் உறுதி செய்யப்படுவார். அதன் பிறகு வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும். மதுசூதனுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் பாலகங்கா, கோகுல இந்திரா ஆகிய இரண்டு ேபரில் ஒருவருக்கு வழங்கப்படலாம் என்ற பரபரப்பும் தற்போது உருவாகியுள்ளது.
ஜெயக்குமார் தூண்டுதலா?
ஆர்.ேக.நகர் தொகுதிக்கு ஆரம்பத்தில் இருந்தே மதுசூதனனை வேட்பாளராக அறிவிக்க கூடாது என்று அமைச்சர் ஜெயக்குமார் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் எதிர்ப்பாலேயே விருப்ப மனுக்கள் வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இதில் மதுசூதனன், பாலகங்கா, கோகுல இந்திரா, ஆதிராஜாராம் உள்ளிட்ட சிலர் மட்டுமே விருப்ப மனுக்கள் தாக்கல் செய்வார்கள் என்று முதலில் எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பாராத விதமாக ஒரே நாளில் மதுசூதனை எதிர்த்து 26 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். விருப்ப மனு தாக்கல் செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் ஜெயக்குமாரின் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது. இதனால் அதிமுகவில் மீண்டும் உட்கட்சி பூசல் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. கடைசியில் யார் வேட்பாளராக போகிறார் என்ற பரபரப்பு தற்போது தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.