நான் ஜெயலலிதாவின் மகள் என்பது தற்போது துணை முதல்- அமைச்சராக உள்ள ஒ.பன்னீர்செல்வத்துக்கும் தெரியும் என பெங்களூரை சேர்ந்த அம்ருதா கூறி உள்ளார். பெங்களூரை சேர்ந்த அம்ருதா என்ற மஞ்சுளா (வயது 37) சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் தன்னை மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மகள் என்று அறிவிக்க வேண்டும் என்றும் டி.என்.ஏ. பரி சோதனை நடத்த வேண்டும் என்றும் கூறி உள்ளார். இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மதன்.பி.லோகூர், தீபக் குப்தா ஆகியோர் தள்ளுபடி செய்தனர். என்றாலும் கர்நாடக ஐகோர்ட்டை அணுகி கோரிக்கையை முறையிடலாம் என்றும் நீதிபதிகள் கூறினர். இதைத் தொடர்ந்து கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்போவதாக அம்ருதா கூறினார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:- நான் ஜெயலலிதாவின் மகள் என்பது கடந்த மார்ச் மாதம் தான் தெரியவந்தது. என் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் நான் மறைத்து வளர்க்கப்பட்டேன். ஜெயலலிதாவை என் பெரியம்மா என்றுதான் நான் நினைத்திருந்தேன். ஆனால் அவர் தான் என் தாயார் என்று உறவினர்கள் கூறினர். கடந்த 1980-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 14ந்தேதி ஜெயலலிதாவின் மகளாக பெங்களூருவில் பிறந்தேன். ஜெயலலிதாவின் அத்தையான ஜெயலட்சுமி தான் பிரசவம் பார்த்தார். எனக்கு அம்ருதா என்று பெயர் சூட்டினார்கள். என்னை உறவினர்கள் செல்லமாக மஞ்சுளா என்றும் அழைப்பார்கள். 3 மாத குழந்தையாக இருந்த போதே ஜெயலலிதாவின் தாயார் சந்தியா எனது தாயார் சைலஜாவிடம் என்னை தத்து கொடுத்து விட்டார். எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று யாருக்கும் தெரியாமல் மறைத்து வளர்த்தனர்.

சைலஜாதான் என் தாயார் என்று நான் நினைத்துக் கொண்டு இருந்தேன். இதற்கு முன்பு எனது தாயார் சைலஜா பல அ.தி.மு.க. பிரமுகர்களை சந்தித்து தான் (சைலஜா) ஜெயலலிதாவின் தங்கை என்று அவர்களிடம் கூறி இருக்கிறார். ஆனால் யாரும் நம்பவில்லை. என்னை வளர்த்த தந்தை சாரதியும், கடந்த ஆண்டு இறந்து விட்டார். நான் ஜெயலலிதா மகள் என்பதை அமெரிக்காவில் உள்ள என் உறவினர் ஜெயலட்சுமி, பெங்களூருவில் உள்ள இன்னொரு உறவினர் லலிதா ஆகியோர் உறுதிப்படுத்தி விட்டனர். ஜெயலலிதா தான் என் தாய் என்பதை நிரூபிக்கவே டி.என்.ஏ. பரிசோதனை செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தேன். கர்நாடக ஐகோர்ட்டை முறையிடுமாறு கூறி விட்டனர். விரைவில் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்வேன். நான் ஜெயலலிதாவின் மகள் என்பது தற்போது துணை முதல்-அமைச்சராக உள்ள ஒ.பன்னீர்செல்வத்துக்கும் தெரியும். ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது போயஸ் கார்டன் வீட்டில் பல முறை அவரை சந்தித்து இருக்கிறேன். அப்போது அவர் என்னை ஆரத்தழுவி தாய் ஸ்தானத்தில் இருந்து முத்தம் கொடுப்பார். இங்கிருந்து நீ சென்று விடு, நீ உயிரோடு இருந்தால் போதும் என்று அவர் பல முறை என்னிடம் கூறினார். இப்போதுதான் அவர் என் தாய் என்பதை அவர் இல்லாதபோது உணருகிறேன். ஜெயலலிதா பெயருக்கு அவப்பெயர் ஏற்படக் கூடாது என்பதற்காக அவர் உயிரோடு இருந்தவரை அவர் தான் என் தாய் என்று நான் கூறவில்லை.

இப்போதுதான் அவர் என் தாய் என்பதை பகிரங்கமாக கூறுகிறேன். இதனால் தான் அவரது உடலை தோண்டி எடுத்து எனக்கும் அவருக்கும் டி.என்.ஏ. பரிசோதனை செய்ய வேண்டும் என்று கோர்ட்டில் மனு செய்தேன். இவ்வாறு அவர் கூறினார். அமெரிக்காவில் உள்ள என் உறவினர் ஜெயலட்சுமி, ஜெயலலிதாவின் ஒரே மகள் நான் தான் என்பதை என்னிடம் கூறினார். பசவனகுடியில் வசிக்கும் மற்றொரு உறவினர் லலிதாவும், இவ்வி‌ஷயத்தை உறுதிபடுத்தினார் என அம்ருதா கூறியிருந்தார். ஜெயலலிதாவின் உறவினர்கள் எனக்கூறி எல்.எஸ். லலிதா மற்றும் ரஞ்சனி ரவீந்திரநாத் ஆகியோர் இணைப்பு மனுக்களையும் அம்ருதா சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்து இருந்தார். இவ்விவகாரம் தொடர்பாக அம்ருதா சுப்ரீம் கோர்ட்டு சென்றது தொடர்பாக அதிர்ச்சியை தெரிவித்து உள்ள லலிதா, “ஜெயலலிதாவிற்கு மகள் இருந்தாள் என என்னுடைய தாயார் கூறியதைதான் அவளிடம் நான் பேசினேன். ஆனால் அம்ருதாதான் ஜெயலலிதாவின் மகள் என கூறவில்லை” என உயிருக்கு அஞ்சி ‘ஜகா’ வாங்கிக் கொண்டார். ஜெயலலிதாவின் ஜெயில் தண்டனைக்கு காரணமான வி.என். சுதாகரன் 100 செலவில் திருமணம் செய்தார். இப்போது எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. ஏற்கனவே ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஜெயக்குமார் பேரவை தொடங்கி முதல் அமைச்சராகும் முயற்சியில் உள்ளார்.

போயஸ் தோட்ட இல்லத்தையும் கைப்பற்ற முயற்சித்து அவ்விடத்தை நினைவிடமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். முன்னதாக ஜெயலலிதா மறைந்த பின் அவரது மகள் என கூறி ஒரு புகைப்படம் வைரலாகி வந்தது. அவர் உண்மையில் யார் என பின்னணி பாடகி சின்மயி விளக்கம் அளித்தார். உண்மையில் அவர் ஜெயலலிதாவின் மகளே இல்லை. அவர் பாரம்பரியமாக இசைக்குடும்பத்தை சேர்ந்தவர். அவர் இந்தியாவிலேயே இல்லை. பல வருடங்களாக வெளிநாட்டில் வசித்து வருகின்றார். புகைப்படத்தில் அந்த பெண்ணின் அருகில் இருப்பவர் அவரது கணவர் ராமநாதன். அவர் திருவணந்தபுரத்தை சேர்ந்த பிரபல மிருந்தங்க வித்வான் பாலாஜியின் சகோதரர். என்று ட்விட்டரில் தெளிவுபடுத்த் அந்த அலை ஓய்ந்தது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகன் என்று கூறி போலி ஆவணங்களை தாக்கல் செய்த கிருஷ்ணமூர்த்தி என்பவரை போலீசார் கைது செய்த நிகழ்வும் அரங்கேறியது. ஈரோடு மாவட்டம், காஞ்சி கோவில் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி,32. மனுதாரர் கிருஷ்ணமூர்த்தி, டிராபிக் ராமசாமியுடன் நீதிமன்றத்தில் ஆஜரானார். அன்றைய தினமே நீதிபதி கடும் எச்சரிக்கை விடுத்தார். காவல்துறையினர் விசாரிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

பின்னர் பெயர் தெரியாத ஒருவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்கு வந்து தான் ஜெயலலிதாவின் மகன் என்றார், மறுநாள் அவரது தாயார் வந்து தனது மகன் ஒரு மனநோயாளி என்று அழைத்துச் சென்ற கதையும் தமிழகம் கண்டது. தற்போது ஜெயா மறைந்து ஓராண்டு கழிந்த நிலையில் இந்த புதுமகள் பூத்துள்ளார். வாரிசு இல்லாத எம்ஜியார் மறைந்த போது அவரது சொத்துக்களை பங்கு போட்டுக் கொண்ட அவரது பினாமிகள் ஐசரி வேலன், ஜேப்பியார், ஆர்.எம் வீரப்பன் போன்றோர் கல்வித்தந்தைகளாக வலம் வந்து தங்கள் வாரிசுகளை பில்லியனர்களாக்கி மறைந்தனர். இப்போது, ஜெயாவின் சொத்துக்களுக்காக அடித்துக் கொள்ளும் அமைச்சர்களுக்கு போட்டியாக சாமானியரும், மனநோயாளிகளும் தொடர்ந்து ஜெயாவின் வாரிசு என உருவெடுக்கும் பித்தலாட்ட நிகழ்வுகள் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. என்று உங்கள் சிறப்பு நிருபர் வருத்தத்துடன் தெரிவிக்கிறார்.

பகிர்