தமிழக அமைச்சர்களின் பேச்சுகள் சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் கேலிக்கு உள்ளாகிவரும் நிலையில், தற்போது அந்த வரிசையில் முதலமைச்சரின் பெயரும் இடம்பெற்றுள்ளது. தஞ்சை எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் ஊரின் சிறப்புகளைப் பட்டியலிட்ட முதல்வர் ஈபிஎஸ், ‘கம்பராமாயணம் தந்த சேக்கிழார்’ என்று கூறியது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்த நாள் நூற்றாண்டு விழா இந்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக தமிழக அரசு சார்பில் மாவட்டந்தோறும் பெரிய அளவில் மாநாடு நடத்தப்படுகிறது. இறுதியாக சென்னையில் பிரம்மாண்ட மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று (புதன்கிழமை) தஞ்சாவூரில் இவ்விழா கோலாகலமாக நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய முதல்வரின் உரை மிகவும் நேர்த்தியாக பக்கம் பக்கமாய் யாரோ ஒருவரால் தயாரிக்கப்பட்டிருந்தது. தஞ்சாவூரைக் குறித்த பல்வேறு சிறப்புகளெல்லாம் அதில் இடம்பெற்றிருந்தன. எனினும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றும்போது ‘கம்பராமாயணம் தந்த சேக்கிழார்’ என்று கூறியது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
அரசு விழாவில் முதல்வருக்காகத் தயாரிக்கப்பட்ட உரையை அதிகாரிகள் முன்கூட்டியே சரிபார்க்கவில்லையா என்ற கேள்வியும் பொதுவெளியில் எழுந்துள்ளது. ‘கம்பராமாயணம் தந்த சேக்கிழார்’ என்று எடப்பாடி பழனிசாமி வாய் தவறி சொல்லியிருந்தாலும் கூட பேசும்போதே அதை உணர்ந்து அதைத் திருத்தியிருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யாதது, முதல்வர் பதவியின்மீது அவருக்குள்ள பொறுப்பின்மையையும் உதாசீனத்தையும் காட்டுகிறது. கம்பராமாயணத்தை எழுதியது யார் என்று கேட்டால் பள்ளிக்குழந்தைகள் கூட ‘கம்பர்’ என்ற விடையை சரியாக கூறிவிடும். ஏனெனில் அந்த கேள்வியிலேயே கம்பர் என்ற விடை உள்ளது. எட்டுக்க்கால் பூச்சிக்கு எத்தனை கால் என்ற பழைய எஸ்.வி.சேகர் நாடக வசனத்தை நினைவில் கொண்டிருந்தால் கூட கம்பராமாயணம் என்ற சொல்லில் இருக்கும் கம்பர் நினைவிற்கு வந்திருப்பார். பாவம் ஒன்றும் தெரியாத எடப்பாடி. என்ன செய்வார்? ஏற்கனவே, “மக்கள் சோப்பு உபயோகித்து குளிப்பதால் தான் நொய்யல் ஆற்றில் நுரை வருகிறது”, என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணனும், “பிரதமர் மன்மோகன் சிங்”, என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதையும், நெட்டிசன்கள் கேலி செய்தனர்.
செல்லூர் ராஜூ என்ற ஜந்துவை பற்றி சொல்லவே தேவை இல்லை. நியாய விலைக்கடைகளில் சர்க்கரை விலை இருமடங்காக ஆனபோது, அதனால் ஏழைகளுக்கு பாதிப்பில்லை என்றவர் தெர்மாகோல் ராஜூ. முன்னாட்களில் முதல்வராக இருந்த ராஜாஜி, அண்ணா, கருணாநிதி ஆகியோர் இலக்கியவாதிகளாகவும் அறிஞர்களாகவும் இருந்தார்கள். ஜெயலலிதா பொது அறிவு உடையவராக இருந்தார். ஆனால் அத்தகைய முதல்வர் பொறுப்பின் மீதான குறைந்தபட்ச மரியாதைகூட இல்லாமல் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டிருப்பது ஒன்றை உணர்த்துகிறது. இதே போன்று நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குடியரசு தின தேதியை மாற்றிக் கூறினார். குடியரசு தின தேதியை ஜனவரி 25, டிசம்பர் 25 என்று மாற்றி மாற்றி பேசிய ஸ்டாலின், கூட்டத்தில் சலசலப்பு ஏற்படவே தனது தவறை உணர்ந்து அருகில் இருந்தவரிடம் கேட்டு ஜனவரி 26 குடியரசு தினம் என்று பேசி முடித்தார். இது தான் எதிர்க்கட்சி தலைவருக்கு லட்சணமா? தமிழ்நாட்டு அரசியல் அடைந்துள்ள வீழ்ச்சியின் வெளிப்பாடு இது! என்கிறார் உங்கள் நியூஸ் கப்சா நிருபர்.
எடப்பாடி நமது கப்சா நிருபரிடம் அளித்த பேட்டியில், “கம்ப ராமாயணத்தை எழுதிய சேக்கிழார் உண்மையில் ஒரு அரபு சேக் ஆவார். அவர் தமிழ் மீதுள்ள பற்றால் தனது எண்ணெய் கிணறுகளை விற்றுவிட்டு இங்கே வந்து கம்பு விவசாயம் செய்யும் நிலக்கிழார் ஆனதால் சேக்கிழார் என்று அழைக்கப்பட்டார். அவர் விவசாயத் துணையாக வளர்த்து வந்த மாடுகளிடம் கறந்த பாலே மில்க் ஷேக் என அழைக்கப்பட்டது. பின்னர் ரோமானிய வணிகர்களால் எடுத்துச் செல்லப்பட்டு சாக்லேட் மில்க் ஷேக் என ஆனதாக பாற்கடல் புராணம் கூறுகிறது. பெளர்ணமி இரவில் அவர் பால் கறந்தால் வருவதே வெண்ணிலா மில்க் ஷேக் என கூறுவோரும் உண்டு. கம்பங்காட்டில் அமர்ந்து ராமாயணம் எழுதியதால்தான் அதை கம்ப ராமாயணம் என்று கூறுகிறார்கள். நீங்கள் அறியாத ஒரு தகவலும் உண்டு. பிற்காலத்தில் பார்லி விவசாயத்தில் இறங்கிய சேக்கிழார் பியர் தொழிற்சாலை ஒன்றை அமைத்து இலக்கியம் வளர பாடுபட்டார். அங்கிருந்து தயாரான பியர் சேக்ஸ்பியர் என்று அழைக்கப்பட்டது. அதன் பாதிப்பில் சின்னம்மா ஆரம்பித்த நிறுவனம் தான் மிடாஸ் மது ஆலை. தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியவர் தாயுமானவர் என்று கவிஞர் சினேகனே கூறியிருக்கிறார். தெரிஞ்சிக்கோங்க, ரேசனில் உளுந்து, துவரம்பருப்பு நிறுத்தப்பட்டு விட்டது, அதற்கு பதிலாக கம்பராமாயணத்தை நினைவு படுத்தும் கம்பு விநியோகம் செய்யலாம் என்றிருந்தேன், ஆனால் கம்பராமாயணத்தையே வழங்க உத்தரவிட்டுள்ளேன். அம்மா அப்பல்லோவில் இருந்த போது தொண்டர்களுக்கு அலகு குத்திய அனுபவமிக்க பூசாரியை வரவழைத்து என் நாவில் அலகு குத்தி பரிகாரம் செய்யலாம் என்றிருக்கிறேன். ” என்று தெறிக்க விட்டார்.
பகிர்