சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் விஷால் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அதன் பின்னணியில் யார் உள்ளார் என்பது குறித்த தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன. தென் இந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் கசிந்துகொண்டுள்ளன. இவர் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்ட போதே கடும் சவால்களை எதிர்கொண்டார். ஆனால், சரத்குமார் உள்ளிட்டோர் அடங்கிய சீனியர் டீமை அநாயாசமாக எதிர்கொண்டு வெற்றிக்கொடி நாட்டியது நாசர் மற்றும் விஷால் டீம்.

சரத்குமார் பக்கம் நடிகர் ரஜினிகாந்த் நின்றிருந்ததாக கூறப்பட்ட நிலையில், விஷால் டீமின் முதுகெலும்பாக விளங்கினார் கமல்ஹாசன். விஷால் டீம் வெற்றிக்கு விஷாலின் வேகமும், கமலின் சாதுர்யமும் இணைந்துதான் கை கொடுத்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில்தான், விஷால் அரசியல் பிரவேசத்தின் பின்னணியில் யார் உள்ளார்கள் என்ற பேச்சு வெளிவர ஆரம்பித்துள்ளது. அது வேறு யாருமல்ல சாட்சாத், கமல்ஹாசன்தான்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் முதலில் டிவிட்டரில் அரசியல் பேசிய கமல் பிறகு களத்திலும் கால் வைக்க தொடங்கியுள்ளார். நேரடியாக அரசை சாடி டிவிட்டரிலும் கருத்துக்களை தெரிவிக்கிறார். விரைவில் தனிக்கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், ஆர்.கே.நகரில் கமல் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்று விவாதங்கள் பெருகிய நிலையில், அவர் விஷாலை அனுப்பி ஆழம் பார்க்க உள்ளதாக தெரிகிறது. விஷால் போட்டியிட்டால் கமல் அவருக்கு ஆதரவு தெரிவித்து வாக்கு சேகரிக்கவும் வாய்ப்புள்ளது. வட சென்னை பிரச்சினைகளுக்காக கமல் சமீபகாலமாக தொடர்ந்து குரல் கொடுத்து நற்பெயரை சம்பாதித்துள்ளார்.

கமலுக்கு வட சென்னையில் கிடைத்துள்ள மக்கள் ஆதரவை விஷாலை வைத்து அறிந்துகொள்ள அவர் நினைப்பதாக கூறப்படுகிறது. வெற்றி பெறுகிறாரோ இல்லையோ, கணிசமான வாக்குகளை விஷால் பெற்றாலும், அது கமல் கட்சி துவங்கும் வேகத்தை அதிகரிக்க வாய்ப்பாக அமையும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்

Credit: OneIndia

பகிர்