விஸ்வரூபம் படத்துக்கு பிறகு அதன் அடுத்த பாகமான விஸ்வரூபம் 2 படத்தை தொடங்கினார் கமல். அந்தப்படத்தின் பணிகளை முடிக்க பணமில்லாததால் வேறு படங்களில் நடிக்க முயற்சித்தார். ஆனால் பாச்சா பலிக்க வில்லை. பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி, தமிழ் கலாசாரத்தை சீரழித்து பணம் பார்த்தார். நடுவில் அரசியல் ஆசை துளிர்விட ஜல்லிக்கட்டு போராட்டம் முதலே டுவிட்டரில் (மட்டும்) குரல் கொடுத்து வருகிறார். நடிகர் கமல்ஹாசன் வல்லூர் அனல்மின் நிலையத்தின் சாம்பல் கழிவுகள் கொசஸ்தலை ஆற்றில் கொட்டப்படுவதாகவும், அதனால் பலத்த மழை பெய்தால் தண்ணீர் செல்ல வழியில்லாமல் பெரு வெள்ளம் ஏற்பட்டால் வடசென்னைக்கு ஆபத்து என்று பருவமழை தொடங்கிய போது தனது டுவிட்டரில் பதிவு செய்தார்.
வெறும் டுவிட்டரில் மட்டுமே மக்கள் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வந்த கமல், எண்ணூர் கழிமுகத்திற்கு நேரில் சென்றும் ஆய்வு செய்தார். அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்தார். கொசஸ்தலையாறு சென்னை அருகே இன்னும் முழுவதும் சாக்கடையாகாமல், மீனவர்களின் வாழ்வாதாரமாக உள்ளது. அது கூவம் அடையாறை விட பன்மடங்கு பெரிய ஆறு. அதன் கழிமுகத்தின் 1090 ஏக்கர் நிலத்தை சுற்றுச்சூழல் சிந்தனையில்லாத சுயநல ஆக்கிரமிப்பாளர்களால் இழந்துவிட்டோம். வல்லூர் மின் நிலையமும், வடசென்னை மின் நிலையமும் தங்கள் சாம்பல் கழிவுகளை கொசஸ்தலையாற்றில் கொட்டுகின்றன. மீனவர்கள் அந்தப் பகுதி மக்களுடன் சேர்ந்து குரலெழுப்ப முற்பட்டதும், செவிடர் காதில் ஊதிய சங்குதான். பற்றாக்குறைக்கு ஹிந்துஸ்தான் பெட்ரோலியமும், பாரத் பெட்ரோலியமும் தங்கள் எண்ணை முனையங்களை நட்டாற்றில் கட்டியிருக்கின்றன. காமராஜர் துறைமுகத்தை விரிவுபடுத்துகிறோம் என்ற போர்வையில், கொசஸ்தலையாற்றின் கழிமுகத்தின் 1000 ஏக்கர் நிலத்தைச் சுருட்டும் வேலையும் நடப்பதாகக் கேள்விப்படுவதாகவும் கமல் தெரிவித்தது ஞாபகமிருக்கலாம்.
நில வியாபாரிகளுக்குக் கொடுக்கும் முன்னுரிமையையும், உதவியையும் ஏழை மக்களுக்குக் கொடுக்காத எந்த அரசும் நல்ஆற்றைப் புறக்கணிக்கும் உதவாக்கரைகள்தான். என்று நேரடியாகவே எடப்பாடி அரசை சாடினார். தற்போது தென் மாவட்டங்களில் கனமழை காரணமாக 75 கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருகிறது. தென் தமிழகத்தில் பலத்த மழை பெய்து உயிர்ச்சேதமும் ஏற்பட்டுள்ளது. ‘ஓகி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் குறித்து கமல் செய்த ட்விட்டில் “மழையில் மிதக்கிறது கன்யாகுமரி மாவட்டம். இன்னலுக்குள்ளாகித் தவிக்கும் மக்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.” என்று கூறி இருக்கிறார். இந்நிலையில் குலத்தொழிலான சினிமா ஆசை மீண்டும் துளிர்விட ‘விஸ்வரூபம் 2’ படத்தை முடிக்க கொஞ்சம் சில்லறை தேறிவிட்டதால் எதிர்வரும் ஜனவரி 2018 ஆம் ஆண்டில் படத்தை வெளியிடும் பொருட்டு கடைசி கட்ட படப்பிடிப்பை தொடங்கியுள்ளார். ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி தரும் ‘ஆபிசர்ஸ் டிரய்னிங்’ அகடமி மையத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் கமல், ஆண்ட்ரியா கலந்து கொண்டுள்ளார்கள். படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இருவரும் சமூக தளங்களில் பகிர்ந்துள்ளார்கள். (முதல் பாகத்தில் ஆப்கானிஸ்தான் சென்று பின்லேடனின் படையினருக்கு பயிற்சி அளிப்பது போல் நடித்து ஏமாற்றினார் என்பது கூடுதல் செய்தி)
தனது அரசியல் சினிமா மூவ்கள் குறித்து நமது கப்சா நிருபரிடம் பேசினார் கமல்: கொசஸ்தலை ஆற்றில் செய்த பிதலாட்ட ஆய்வை கன்னியாகுமரியில் செய்திருந்தால் அரசியலில் நல்ல ரீச் கிடைத்திருக்கும்.. எனக்கு தவறாக முன்னறிவிப்பு கொடுத்த வானிலை மைய ஊழியரை பின்னர் கோயமுத்தூரில் குத்து விட்டது போல் குத்து விட்டுக் கொள்கிறேன். பிக்பாசில் கிடைத்த காசில் சூட்கேஸ் துணியில் தைத்த உடுப்புடன் ராணுவ பயிற்சி மேற்கொண்டு, கன்னியாகுமரி மக்களுக்கு வெள்ள நிவாரண உதவி புரிய திட்டமிட்டுள்ளேன். அதன் புகைப்படங்களை சமூக தளங்களில் பதிவிட்டுள்ளேன். 2015 வெள்ளத்தின் போது நான் செய்த பணிகளை புகைப்படம் எடுத்து வைக்க மறந்துவிட்டேன். அப்போது என்னை கூகிளில் பலர் தேடினார்களாம். போகட்டும். பிக்பாஸ் நிகழ்ச்சியில் அம்பேத்கர் கெட்டப்பில் உடை அணிந்தேன். தற்போது போராளியின் அடையாளம் கொண்ட மிலிட்டரி உடையில் எனது வேடத்தை அணிந்து வெள்ள நிவாரண பணிகளை செய்வது போல் போட்டோ ஷூட் செய்து வைத்துக் கொண்டால் அரசியல் கட்சி அறிவிக்கும் போது பேனர்கள் வைக்க ஏதுவாக இருக்கும்” என்றார்.