ஆர்.கே.நகரில் விஷால் போட்டியிடுவதை முன்வைத்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சரமாரியாக கேள்விகள் எழுப்பியுள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட மனுத்தாக்கல் செய்திருக்கிறார் விஷால். அவருடைய இந்த முடிவால் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதிவியிலிருந்து அவர் விலக வேண்டுமெ என்று இயக்குநர் சேரன் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் விஷாலுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இது குறித்து விஷாலுக்கு அவர் பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக சுரேஷ் காமாட்சி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:
உண்மையில் விஷால் யார்? எப்படிப்பட்டவர்? இதுவரை செய்தது என்ன?
1) நடிகர் சங்க கட்டிடத்தை ஒரு வருடத்தில் கட்டவில்லை எனில் ராஜினாமா செய்கிறேன் என்றார், சொல்லி 2 வருடமாகுது. என்னாச்சு?
2) விவசாயி பிரச்சினைக்கு நிதியமைச்சரை சந்திக்கிறேன் என்று சொன்னார். எந்த பிரச்சினைக்கு எந்தத் துறையை அணுகனும்னு கூட தெரியாதவர்.
3) இவர் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ஆன பிறகு தான் அசோக்குமார் காலமானார். இப்போது அன்புச்செழியனை கைது பண்ணனும் என பேசுகிறார். ஆனால் இரண்டு மாதத்துக்கு முன்னாடி தான் அன்பு அண்ணா இல்லைனா நான் தயாரிப்பாளராகவே ஆகி இருக்க முடியாது என்றார்.
4 ) ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு பிரதமரை சந்திக்கப் போறேன்னு பிரஸ் மீட் தலைப்பு செய்தி கொடுத்தார். பிறகு போனாறா, பார்த்தாரா ஒரு தகவலும் இல்லை.
5 ) நீதிமன்ற இறுதிதீர்ப்பு காவிரி நீரை திறக்க வேண்டும் என்று வருகிறது. அந்த நேரத்தில் கர்நாடகா போய் காவிரியை தர வேண்டும் என்று பேசி, நீர் திறந்த பிறகு நான் சொல்லியதால் திறந்ததற்கு நன்றி என அறிக்கை விட்டார்.
6 ) டிக்கெட் கட்டணத்திலிருந்து விவசாயிக்கு 1ரூபாய் தரப்படும் என சொன்னார். இதுவரை தரவில்லை. ‘துப்பறிவாளன்’ படத்தில் தருவேன் என்றார். அதுவும் தரவில்லை.
7) படத்துக்கு ஒன்றரை கோடி கேபிள் பணம் பெற்றுத் தரப்படும் என்றார், அதுவும் நடக்கவில்லை
8) QUBE கட்டணம் ரூ.2500 ஆக்கப்படும் என்றார். இப்போது ரூ.32000 ஆக ஏறிவிட்டது
9) சுவாதி கொலை வழக்கு படத்தை ரிலீஸ் செய்வேன் என்றார். இப்போதுவரை படம் வெளியாகவில்லை.
10) மருத்துவக் கல்லூரி மாணவர்கள் படிப்புக்கு பணம் தருவேன் என்றார். என்னாச்சு, கொடுத்தாரா?
11) தமிழ் ராக்கர்ஸை பிடிப்பேன் எனக் கூறி, அதுக்கு படத்துக்கு ரூ.1 லட்சம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பிடித்துவிட்டாரா?
12) இவர் வந்த பிறகுதான் படத்தலைப்பை பதிவு செய்ய கட்டணம் ரூ.500-லிருந்து ரூ.2500 ஆக ஆக்கப்பட்டது.
13) தயாரிப்பாளர் சங்க உறுப்பினர் கட்டணம் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் இருந்ததை ரூ.3 லட்சமாக ஆக்கியுள்ளார்.
14) நடிகர் சங்க, தயாரிப்பாளர் சங்க தலைவர் ஆன பிறகு என்ன செய்துவிட்டார் என்று ஆர்.கே நகர் தேர்தலில் நிற்கப்போகிறார்?
அறிக்கை, அறிவிப்பு, தலைப்பு செய்தி இதில் நமது பெயர் வரவேண்டும். அதுக்கு எங்கேயாவது மைக் பிடிச்சு என்னத்தையாவது பேசிட வேண்டியது? 1200 பேர் கொண்ட சங்கத்தை காப்பாத்த முடியவில்லை. இதில் 8 கோடி தமிழனை காப்பாத்த போறாங்களாம்.
இவ்வாறு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்திருக்கிறார்.