அதிமுகவில் தொண்டர்கள் பலம் யாருக்கு இருக்கிறதோ, அவர்களிடமே கட்சியும் செல்லும் என்பதை 1988ம் ஆண்டு ஜெயலலிதா – ஜானகி அணிகளுக்கு இடையேயான போட்டிகள் நிரூபித்துக்காட்டின. அதன் நீட்சியாக தற்போது எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர்செல்வம் – டிடிவி தினகரன் அணிகளுக்கு இடையேயான போட்டிகள் மீண்டும் நிரூபித்துக்காட்டியுள்ளன.

தமிழக அரசியல் வரலாற்றில் 1987ம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் எம்.ஜி ராமச்சந்திரனுக்கு பிறகு யார் ? என்கிற கேள்வி எழுப்பப்பட்டபோது, அன்றைக்கு எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் என பலரும் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி பக்கம் பக்கபலமாக இருந்தனர். அதேவேளையில் அன்றைக்கு அக்கட்சியை மீட்டெடுக்கவேண்டும் என நினைத்த ஜெயலலிதாவுக்கு, அக்கட்சியின் மூத்த உறுப்பினர்களான நெடுஞ்செழியன் உட்பட 29 அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆதரித்தனர். பெரும்பான்மையை நிரூபிக்க இயலாமல், ஜானகி ஆட்சியும் அதன் காரணமாக கலைக்கப்பட்டது.

பின்னர் நடைபெற்ற தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அணிக்கு 27 எம்.எல்.ஏக்களும், ஜானகி தலைமையிலான அணிக்கு வெறும் 2 எம்.எல்.ஏக்களுமே கிடைத்தனர். அப்போது போடிநாயக்கனூரில் வென்று எம்.எல்.ஏவாக சட்டமன்றத்துக்குள் ஜெயலலிதாவும் நுழைந்தார்.

அந்த தேர்தலின் பிரச்சாரத்தின் போது ஜெயலலிதா பின்னால் லட்சக்கணக்கில் தொண்டர்கள் அணிவகுத்து வந்திருந்தனர் என்பதும் பார்க்கக்கூடிய விவகாரமாக இருக்கிறது.

தற்போது 30 வருடங்களுக்கு பிறகு மீண்டும் வரலாறு திரும்பியுள்ளது போல, அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிக்கும் – டிடிவி தினகரன் அணிக்கும் இடையேயான மோதலில், தினகரன் பின்னால் அக்கட்சியின் தொண்டர்கள் அணிவகுத்து நிற்கத்துவங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக இளைஞர்கள் தினகரன் பின்னால் அணி வகுத்து நிற்பது, அதிமுகவில் புதிய அத்தியாயத்தை எழுத தொடங்கியுள்ளதாகவே அக்கட்சியினர் கருதுகின்றனர்.

கடந்த டிசம்பர் 5ம் தேதி, 2016ம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதா, உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாத காரணத்தால் மருத்துவமனையில் காலமானார். அதன் பிறகு அதிமுகவில் மிகப்பெரிய மாற்றங்களே நடைபெற்றுவிட்டன என்றே சொல்லவேண்டும்.

டிசம்பர் 29, 2016ம் ஆண்டு ஜெயலலிதாவின் மறைவால், வெற்றிடமாக இருந்த அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்கு, ஜெயலலிதாவின் தோழி வி.கே சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அன்று நடந்த பொதுக்குழுவில் சசிகலாவை, அப்போதைய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அக்கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன் ஆகியோர் முன்மொழிந்து, தேர்வு செய்தனர்.

பின்னர் எதிர்கட்சியுடன் நெருக்கம் காட்டுவதாக குற்றம் சாட்டப்பட்டு, முதலமைச்சர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை விலகும் படி, ஆளும் அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த சசிகலா கேட்டுக்கொண்டார். அதன்படி, தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அன்று இரவே மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் தியானம் செய்து, சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் என்கிற போராட்டத்தை பன்னீர்செல்வம் ஆரம்பித்தார். ஆனாலும் அவர் பின்னால் போதுமான எம்.எல்.ஏக்களோ, எம்.பிக்களோ இல்லை.

கடந்த பிப்ரவரி 14ம் தேதி சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நால்வரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ஜெயலலிதா மறைந்துவிட்டதால் அவருக்கு தண்டனை விதிக்க முடியாது என்று கூறி, அவருக்கு எதிரான மனுவை மட்டும் முடித்து வைத்தது. இந்த தீர்ப்பின் காரணமாக சசிகலா சிறைக்கு செல்லவேண்டிய சூழல் உருவானது.

அப்போதைய சூழலில் அதிமுகவை வழிநடத்த சசிகலாவால் துணை பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் தேர்வு செய்யப்பட்டார். முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமியையும் சசிகலா முன்மொழிய, எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியும் அமைக்கப்பட்டது.

தொடர்ந்து தினகரன் மீது வழக்குகள், சிறைகள், போதுமான ஆவணங்கள் இல்லாத காரணத்தால் ஜாமீன் என அதிமுகவில் ஏற்படுத்தப்பட்ட பல குழப்பங்கள், அக்கட்சியில் தினகரனுக்கு எதிராகவே முதல்வர் தரப்பை செயல்பட அழுத்தத்தை உண்டாக்கியது. ஆனால் எல்லாவற்றையும் சிரித்த முகத்தோடு எதிர்கொண்டார் தினகரன்.

அதிமுகவின் இரு அணிகள் இணைந்துவிட்டன. இரட்டை இலை சின்னத்தை கொடுங்கள் என ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் தரப்பு இணைந்து தேர்தல் ஆணையத்தில் முறையிட்டபோதும், மிக துணிச்சலாக, தைரியமாக அதை தினகரன் எதிர்கொண்டார். தேர்தல் ஆணையத்தில் தனது தரப்பிலான பிரமான பத்திரங்களையும் அவர் தாக்கல் செய்தார். ஆனால் தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணிக்கு வழங்குவதாக அறிவித்துவிட்டது.

இந்த அறிவிப்பு வந்தும் கூட தைரியமாக ஆர்.கே நகர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட தினகரன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஒரு பக்கம் இரட்டை இலை சின்னம் இல்லை, மற்றொரு பக்கம் தொப்பி சின்னம் கிடைப்பதில் கேள்விக்குறி என்று தினகரனுக்கு பல அழுத்தங்கள் இருந்தாலும், சிரித்த முகத்துடன் பத்திரிக்கையாளர்களை அணுகுவது, தைரியமாக எதிர்கொள்வது என எல்லாவற்றிலும் தினகரன் ஜெயலலிதா பாணியை பின்பற்றி வருகிறார் என்றால், அது மிகையாகாது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை பகுதியிலிருந்து, மெரினா கடற்கரை பகுதியில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் வரை இன்று காலை டிடிவி தினகரன் தலைமையிலான அணியினர் அமைதி பேரணி நடத்தினர்.

சுமார் 1 கி.மீட்டர் தொலைவு மட்டுமே உள்ள இந்த அமைதி பேரணிக்கு 3 கி.மீட்டர் அளவு வரை அதிமுக தொண்டர்கள் திரண்டனர். அதிலும் குறிப்பாக பல்லாயிரக்கணக்கில் இளைஞர்கள், தினகரன் பின்னால் திரண்டு, அஞ்சலி செலுத்த வந்திருந்தனர். இது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. சிலருக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதனை பார்த்த பொதுமக்களோ, தினகரனை அதிமுகவில் இருந்து ஒதுக்கிவிட்டதாக ஆளும் தரப்பு கூறினாலும் அவருக்கு இத்தகைய ஆதரவு இருக்கிறதே ? என்று கேள்வி எழுப்புகின்றனர்.

லட்சக்கணக்கில் தொண்டர்கள், தைரியம், சிரித்த முகத்தோடு எல்லாவற்றையும் எதிர்கொள்ளும் திறன் இவை எல்லாம் மீண்டும் எங்கே சரித்திரம் திரும்பிவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆம், சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு இதே நிலையை தான் ஜெயலலிதாவும் சந்தித்தார். அப்போது ஜெயலலிதா சந்தித்த பிரச்சனைகள் இப்போது இல்லை என்றாலும், எதிர்ப்புகளை தினகரன் தொடர்ச்சியாக ஆளும் தரப்பிலிருந்து சந்தித்துக்கொண்டே தான் வருகிறார்.

அதேவேளையில் என்னதான் ஆளும் தரப்பு அவரை எதிர்த்தாலும், தொண்டர்கள் மத்தியில் அது எடுபடவில்லையோ என்கிற கேள்வியே பலமாக தோன்றுகிறது.

Credit: Krishna Kpm Krishnamoorthy

பகிர்