ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடாவை தேர்தல் ஆணையம் தடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சாலை மறியல் நடத்தினார். ஆர்.கே.நகரில் பாஜக சார்பில் கரு.நாகராஜன் போட்டியிடுகிறார். இதையொட்டி தமிழிசை உள்ளிட்ட பாஜக தலைவர்கள் அவருக்கு வாக்கு சேகரித்து ஆர்.கே.நகரில் பிரச்சாரம் செய்தனர்.
இந்த நிலையில், ஆர்.கே.நகரில் மக்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக குற்றம் சாட்டி, புதுவண்ணாரப்பேட்டை கிராஸ் ரோடு அருகே, தமிழிசை தலைமையில் மதியம் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டார். இதுகுறித்து தமிழிசை கூறுகையில், ஆர்.கே.நகரில் பூத் போட்டு பணப்பட்டுவாடா நடைபெறுகிறது. இதை தேர்தல் ஆணையம் தடுக்கவேயில்லை. மருத்துவமனைக்கு செல்லும் வாகனங்களுக்கு நாங்கள் இடையூறு செய்ய மாட்டோம். தேர்தல் அதிகாரி இங்கு வராவிட்டால் சாலை மறியலை கைவிட மாட்டோம். ஊழலை இவர்களிடமிருந்து பிரிக்கவே முடியவில்லை. நாங்கள் பிரசாரம் செய்த வாக்குகளை பெற வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் மக்களுக்கு பணம் கொடுத்து அவர்களை சிந்திக்கவிடாமல் செய்கிறார்கள். தமிழிசைக்கு ஆதரவாகவும், தேர்தல் ஆணையத்திற்கு எதிராகவும் பாஜகவினர் கோஷங்களை எழுப்பினார்கள்.
தமிழிசையின் திடீர் போராட்டத்தால் ஆர்.கே.நகர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்.கே.நகரில் பட்டப்பகலில் பணப்பட்டுவாடா நடைபெறுகிறது. மற்ற கட்சி வேட்பாளர்கள் பரிசுப் பொருட்களுக்காக டோக்கன் கொடுப்பதை தேர்தல் ஆணையம் தடுக்கவில்லை. பட்டப் பகலில் பணப்பட்டுவாடா நடப்பதால் தேர்தல் நடத்தி பயனில்லை. தேர்தல் அதிகாரி வீடு வீடாக சென்று ஆய்வு நடத்த வேண்டும். தெருக்களில் பணப்பட்டுவாடாவுக்காக கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. ஊழல்வாதிகள் தேர்தலில் இருந்து விலக்கப்பட வேண்டும். இதுகுறித்து தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வெளி மாவட்டங்களை சேர்ந்த 10 ஆயிரம் பேர் தங்கியுள்ளனர் என குற்றம் சாட்டியுள்ளார். கப்சா நிருபரின் புலனாய்வில் பரிசுப் பொருளாக ஓட்டுக்கு குக்கர் வழங்க டோக்கன் கொடுத்தவர் லயோலா கருத்துக் கணிப்பில் இரண்டாமிடம் பிடித்த டிடிவி தினகரன் என்றும், குக்கரில் நீராவி வெளியாகாமல் இருக்கும் கேஸ்கட்டுக்கு பதில், புதிய 2000 கேஷ் கட்டை வைத்து வழங்க திட்டமிட்டிருந்ததும் அம்பலமாகியது.
பகிர்