ஆர்கே நகரில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டினார. இதனை தடுக்கக்கோரி அக்கட்சி வேட்பாளர் கரு நாகராஜனுடன் கடந்த சனிக்கிழமை அவர் சாலைமறியலிலும் ஈடுபட்டார். இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி லாக்கானியை தமிழிசை நேரில் சந்தித்தார். அப்போது ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடாவை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

மீண்டும் தொடரும் பணப்பட்டுவாடாவினால் ஆர்கே நகர் தேர்தல் ரத்தாக வாய்ப்பு உள்ளது; மோசமான சட்டம் ஒழுங்கு சூழலின் காரணமாக அதிமுக ஆட்சி டிஸ்மிஸ் ஆகலாம் என்னும் பொருள் தொனிக்கும் வகையில் நடிகரும், பாரதிய ஜனதா கட்சிப் பிரமுகருமான எஸ்.வி. சேகர் டிவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார்.

தமிழக அரசியல் சூழல் குறித்ததும் இங்குள்ள ஆட்சி செயல்பாடுகள் குறித்தும் தமிழக பாஜக பிரமுகர்கள் அவ்வப்பொழுது ஆருடங்களை வெளியிடுவது வழக்கமான ஒன்று. சமயங்களில் அவை மத்திய அரசின் மனப்போக்கினை வெளிப்படுத்துவதாகக் கூட அமையும்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் இப்படி ஏதாவது கருத்துக்களை வெளியிட்டு வருவார்கள். அந்த வரிசையில் நடிகரும், பாரதிய ஜனதா கட்சிப் பிரமுகருமான எஸ்.வி. சேகர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஆர்.கே.நகர்  சட்டசபை தொகுதிக்கான இடைத் தேர்தல் தொடர்பாக தொடர்ச்சியாக பல கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.

அந்த வரிசையில் அவர் சனிக்கிழமை அன்று டிவிட்டரில் பதிவிட்டிருந்த கருத்து பலரையும் சிந்திக்க வைத்துள்ளது. அதில் அவர் “விரைவில் அறிவிப்பு எதிர்பார்க்கலாம். “பணப்பட்டுவாடாவை தடுக்க முடியாததால் ஆர் கே நகர் தேர்தல் இரண்டாம் முறையாக ரத்து செய்யப்படுகிறது.” 2 முறை தொடர்ந்து தேர்தல் நடத்த முடியாத சட்டம் ஒழுங்கு கெட்ட சூழலில் தமிழக அரசு….” என்று குறிப்பிட்டிருந்தார். அத்துடன் ஒரு சங்கு படத்தையும் அவர் இணைத்துள்ளார்.

https://twitter.com/SVESHEKHER/status/939396073885351937

 “தேர்தல் தள்ளிப் போகுமா?”, ஆர்.கே.நகரில் இறங்கிய உடன் முதலில் எதிர்கொண்ட கேள்வி. கடந்த முறை தேர்தல் தள்ளிப் போனதன் பாதிப்பு.

“ஏன் அப்படி கேக்குறீங்க?”.
“கோர்ட்ல ஆர்.கே.நகர் தேர்தல் குறித்து தொடர்ந்து வழக்குகள் குவியறதால தான் இந்த சந்தேகம்”.

சுனாமி நகரை ஒரு வலம் வந்தோம். இரண்டு பூத்துகளுக்கான இடங்களிலும் அதிமுக கரைவேட்டியோடு கும்பல், கும்பலாக அமர்ந்திருந்தனர்.

” ஏன் இத்தனை இடங்களில் உட்கார்ந்திருக்கிறார்கள் ?”, என்றுக் கேட்டேன். “இரண்டு அணியும் உக்காந்திருக்காங்க”, என்றனர் தேர்தல் பணிக்குழுவினர்.

“தினகரனுக்கும் ஆள் வந்துடுச்சா?”, என்றேன். “தினகரனுக்கு தான் முதல்ல வந்தாங்க”, என்றனர். என் பார்வையின் அர்த்தத்தை புரிந்துக் கொண்டவர்,” நீங்களே தெரிஞ்சுக்குவீங்க”, என்றார்.

வெளியூர் அதிமுகவினர் உட்கார்ந்திருந்த இடத்தை கடந்தேன். போன முறை பார்த்த அதே முகங்கள். அவர்களும் எங்களை பார்த்து அதையே நினைத்திருப்பார்கள் போல, புன்னகைத்தார்கள்.

அதில் ஒரு முக்கிய பிரமுகர் கண்ணில் படவில்லை. தேடிப் பார்த்து விட்டு நகர்ந்தேன்.

அம்மணி அம்மன் தோட்டம் பகுதிக்கு சென்று, அங்கிருக்கும் கழகத் தோழர்களை சந்தித்து பேசினோம். அ.தி.மு.க குழு ஒன்று சுற்றிக் கொண்டிருந்தது. விசாரித்ததில், தினகரன் அணி தான்.

மாலை பெண்கள் கூட்டமாக வாக்கு சேகரித்து வந்தனர். அண்ணா உருவப்படம் இல்லாமல் கருப்பு, வெள்ளை, சிகப்பு கொடி கையில். தினகரன் அணிக்கான கொடி இது. ஒரு பெண்ணின் தலையில் பிரஷர் குக்கர் இருந்தது. “கும்தலக்க கும்மாவா, குக்கர்னா சும்மாவா”, கோஷம் காதைப் பிளந்தது. ஊர்வலமாக வாக்குக் கேட்டு சென்றனர்.

கொஞ்ச நேரத்தில், காலையில் தேடிய முக்கிய பிரமுகர் வந்து விட்டார். தள்ளி வைக்கப்பட்ட தேர்தலின் போது, அவர் தான் தீவிரமான களப் பணியாளர், தினகரன் அணிக்கு. எப்போது பார்த்தாலும் தொப்பியோடு தான் காணப்படுவார். பலருக்கும் தொப்பி போட்டு அணி சேர்த்தார்.

நாங்கள் உட்கார்ந்திருக்கும் இடம் வந்தார். ஜெயலலிதா இல்லாததால், இப்போது அ.தி.மு.கவினர் தைரியமாக எங்களிடம் பேசுகிறார்கள்.

முக்கிய பிரமுகரை வரவேற்று அமரவைத்தோம். பெரம்பலூர் மாவட்ட செயலாளர் அண்ணன் குன்னம் இராஜேந்திரனும் உடன் இருந்தார். முக்கியப் பிரமுகருடன் நலம் விசாரித்துக் கொண்டோம்.

தேர்தல் குறித்து பேச்சு வந்தது. ” அப்புறம் எந்த அணியில் இருக்கீங்க?”.
“அணியா ?. நாங்க தான் அ.தி.மு.க”.
” போன முறை தினகரனோடு இருந்தீங்களே”.
“தினகரன் தான் எங்களோடு இருந்தார். இப்போ அவர் தான் போயிட்டார்”, என்றார்.

” தினகரன் பக்கம் தானே கூட்டம் தெரியுது”, என்றுக் கேட்டோம். “அதெல்லாம் கிடையாது. நாங்க தான் வலுவா இருக்கோம். குக்கர் கதைல்லாம் ஆகாது தலைவா. குக்கர் இங்க ஒரு பருப்பையும் வேக வைக்காது. தினகரன ஜெயிக்க விடமாட்டோம்”, என்று மூச்சைக் கட்டிக் கொண்டு பேசினார். விடைப் பெற்று சென்றார்.

அதுவரை அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார் அவரது நண்பர். அவரது நிழல் போன்றவர். இப்போது அவர் பேச ஆரம்பித்தார். ” அண்ணன் சும்மா வீம்புக்கு பேசறார். உண்மை நிலைமை வேற”, என்றார்.

“போன முறை எங்களோடு அ.தி.மு.கன்னு ஓட்டு கேட்டவங்க, இப்போ வரமாட்டேங்கறாங்க. இரட்டை இலை கிடைத்ததால், இந்த மக்கள் தானாக எங்களோடு வந்துடுவாங்கன்னு எளிதா நினைச்சோம். நிலைமை அப்படி இல்லை”.

“அ.தி.மு.க விசுவாச தொகுதி, அம்மா தொகுதி, அதனால் இரட்டை இலை பின்னால் திரள்வார்கள்ன்னு நினைச்சது நடக்கல. தினகரன் கூடவே இருக்காங்க. ஏன் கட்சி மாறுறீங்கன்னு கேட்டா, நெத்தியடியா கேக்கறாங்க, நாங்க அப்படியே தினகரனோட தான் இருக்கோம், நீங்க தான் கட்சி மாறிட்டிங்கன்னு சொல்றாங்க. எங்களால தான் பதில் சொல்ல முடியல”, என்றார்.

” உங்க தி.மு.க ஓட்டு உங்களுக்கு விழுந்துடும். எங்க ஓட்டு தான் சிக்கலாயிடுச்சி. 24 மணி நேரத்தில் குக்கர் சின்னம் மக்களை சென்றடைஞ்சிருச்சி. அ.தி.மு.க அடிப்படை தொண்டர்களுக்கு ஓ.பி.எஸ் மீது கடும் கோபம் ஏற்பட்டிருக்கு. ஆட்சிய கவிழ்க்க பார்த்துட்டு, பேரம் பேசி துணை முதல்வர் ஆனது தொண்டர்களுக்கு பிடிக்கல போல. அந்த கோபம், தினகரன் ஆதரவா திரும்புதுன்னு நினைக்கிறேன். அதே போல, அப்போ விதைச்சது இப்போ தினகரனுக்கு அறுவடையாகிடும் போல”, என்றார்.

அவர் ஓர் நீண்ட நாளைய அ.தி.மு.க நிர்வாகி. உணர்ந்தே பேசுகிறார்.

தி.மு.கவும், தினகரன் அணியும் தான் களப்பணியில் தீவிரமாக. அ.தி.மு.க பின்னடைவு தான்.

இரவு தேர்தல் பணி முடித்து கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டிருந்தோம். பேசிக் கொண்டிருந்தோம்.

திடீரென ஒரு பெரும் சத்தம். எங்கள் பின்புறம் நின்றுக் கொண்டிருந்த மீன்பாடி வண்டியிலிருந்து, ஒரு வயதானவர் துள்ளிக் குதித்தார். சிறிது நேரத்திற்கு முன் சுருண்டு கிடந்தார். கிழிந்த நார் போல் மெல்லிய தேகம். எழுபது வயதாகி இருக்கும். “ங்கோத்தா”, சென்னை தமிழின் அகர வார்த்தையில் துவங்கினார். தூக்கத்தில் கனவு கண்டு விழித்தவர் போல் வெடித்தார்.

” தினகரன் தான்டா. ஓ.பி.எஸ்ஸ உள்ள விடமாட்டேன்”, அதற்கு மேல் அவர் பொழிந்த டாஸ்மாக் வன்தமிழ் அச்சில் ஏற்ற இயலாதது.

நாங்கள் ஓடி வாகனத்தில் ஏறினோம்.

தினகரன் சொன்ன குக்கரின் பிரஷர் இது தானோ….

எடப்பாடி பன்னீர்செல்வத்தை, தினகரன் அனாயசமாக முந்திக் கொண்டிருப்பதாக தோன்றுகிறது.

அந்த முக்கிய பிரமுகர் சொன்ன பன்ச் லைன் இப்போது நினைவுக்கு வந்தது, “தினகரன ஜெயிக்க விடமாட்டோம்”.

“காவல்துறையினரும், அதிகாரிகளும் ஒத்துழைக்கவில்லை. தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்படுகின்றன”, தேர்தல் ஆணையர் லக்கானி பேட்டி.

” தேர்தலை முறையாக நடத்த முடியாவிட்டால், தேர்தலை நிறுத்துங்கள்”, பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் சாலை மறியல் போராட்டம்.

# ஹலோ, தேர்தல் கமிஷனா. எப்போ பிளாஷ் நியூஸ் விடுவீங்க ?

Credit:சிவசங்கர் எஸ்.எஸ்

பகிர்