சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெறவே அதிக வாய்ப்புள்ளதாக லயோலா கல்லூரியின் பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான மக்கள் ஆய்வு மைய அமைப்பின் கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது

ஆர்.கே.நகரில் வரும் 21ம் தேதி சட்டசபை இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ், சுயேட்சையாக டிடிவி தினகரன் ஆகியோர் நடுவே கடும் போட்டி நிலவுகிறது.

இதுகுறித்த ஒரு சுவாரசிய கருத்துக்கணிப்பு முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளன.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி.தினகரன் வெற்றி பெறுவார் என பேராசிரியர் டாக்டர் ச.ராஜநாயம் தலைமையிலான குழு நடத்திய சர்வேயில் கண்டறியப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மறைந்ததால் காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக சார்பில் மருது கணேஷ், அதிமுக சார்பில் இ.மதுசூதணன், சுயேட்சையாக டிடிவி.தினகரன் உள்பட பலரும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் பேராசிரியர் டாக்டர் ச.ராஜநாயகம் தலைமையிலான மக்கள் ஆய்வு சார்பாக ஆர்.கே.நகரில் 27 பேர் கொண்ட குழுவினர் கருத்துக் கணிப்பில் ஈடுபட்டனர். அனைத்து வாக்குச்சாவடிகளையும் உள்ளடக்கி, 156 தெருக்களில் 3120 வாக்காளர்களிடன் கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளது. டிசம்பர் 5ம் தேதி முதல் 12ம் தேதி வரையில் இந்த சர்வே எடுக்கப்பட்டுள்ளது.

*மக்கள் ஆய்வகம்* ( லயேலா கல்லூரி பேராசிரியர் ராஜநாயகம்) RK நகர் கருத்து கணிப்பு முடிவுகள்: நேற்றைய (12.12.2017) நிலவரப் படி :டிடிவி – *35.5%* மருது கணேஷ் – *28.5%*மதுசூதனன் – *21.3%*நாம் தமிழர் – *4.6%*பாஜக – *1.5%.*

Posted by Political Press Attitude on Wednesday, December 13, 2017

கடந்த ஏப்ரலில் தேர்தல் நடத்தப்பட்டிருந்தால் யாருக்கு வாக்களித்திருப்பீர்கள் என்ற கேள்விக்கு 38.2 சதவிகிதம் பேர் டிடிவி.தினகரனுக்கு என்று பதில் சொல்லி ஆச்சரியப்படுத்தியுள்ளனர். அவருக்கு அடுத்த இடத்தில் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் (27%), மூன்றாவது இடத்தில் மதுசூதணன் (18.3%) இருக்கின்றனர். இப்போது யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு 35.4 சதவிகித ஆதரவுடன் முதலிடத்தில் டிடிவி.தினகரன் இருக்கிறார். இரண்டாவது மூன்றாவது இடத்தை மருதுகணேஷ், மதுசூதணன் ஆகியோர் தக்க வைத்துள்ளனர்.

இத்தனைக்கும் கடந்த ஏப்ரல் தேர்தலில் டிடிவி.தினகரனுக்கு கொடுக்கப்பட்ட தொப்பி சின்னம் அவருக்கு இப்போது இல்லை. பிரஷர் குக்கர் சின்னம் டிடிவி.தினகரனுக்கு ஒதுக்கப்பட்ட ஒரிரு நாட்களில் சர்வே எடுக்கப்பட்டுள்ள்ளது. 91.6 சதவிகிதம் பேர் டிடிவி.தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டதை அறிந்துள்ளனர் என்பதிலிருந்து தினகரனின் களப்பணியின் ஆழத்தை அறிய முடிகிறது.

அதே போல வேட்பாளர்களின் ஆளுமை தன்மை குறித்த கேள்விகளுக்கும் டிடிவி.தினகரனையே மக்கள் குறிப்பிடுகின்றனர். அறிவாற்றல், துணிச்சல், நிர்வாக திறமை, துப்பான செயல்பாடு, ஊடக சந்திப்பு, வெகுஜன உறவு, சமூக அக்கறை என்ற அடிப்படையில் வேட்பாளர்களின் ஆளுமை கணக்கிடப்பட்டுள்ளது.

சர்வேயில் ஒரு பகுதியாக, ஜெயலலிதா இறந்த ஒரு வருட ஆட்சிப்பற்றிய கேள்விக்கும் 73.3 சதவிகிதம் மக்கள் மோசமான ஆட்சி என்று பதில் அளித்துள்ளனர். சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்ன 22.1 சதவிகிதம் பேர் சொல்லியிள்ளனர். 4.5 சதவிகிதம் பேர் மட்டுமே சிறப்பான ஆட்சி என்று பாராட்டியுள்ளனர்.

மத்தியில் நடைபெறும் பாஜக ஆட்சி பற்றி ஆர்.கே.நகர் தொகுதி மக்களிடம் நடத்திய சர்வேயில், கடும் அதிருப்தியை காண முடிந்ததாக சொல்கிறார்கள். 85.6 சதவிகிதம் பேர் பாஜக ஆட்சி மோசமாக உள்ளதாக கருத்துச் சொல்லியுள்ளனர். சொல்லிக் கொள்ளும்படியில்லை என 7.9 சதவிகிதம் பேரும், சிறப்பு என 6.2 சதவிகிதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படவில்லை என்ற கருத்தும் தொகுதி மக்களிடம் பரவலாக காணப்படுகிறது.

 

பகிர்