தன்னுடைய பிறந்த நாளில், ரசிகர்களைச் சந்திக்க மறுத்து ரகசிய இடத்தில் ரஜினிகாந்த் பதுங்கியுள்ளதாகத் தெரிகிறது.
ரஜினிக்கு இன்று 67வது பிறந்த நாள். உலகம் முழுக்க உள்ள ரஜினி ரசிகர்கள், தங்களுக்குப் பிடித்த மாதிரி ரஜினியின் பிறந்த நாளைக் கொண்டாடி வருகின்றனர். பொதுமக்கள் மட்டுமல்ல, முன்னணி நடிகர்கள் தொடங்கி இப்போது நடிக்க வந்த நடிகர்கள் கூட ரஜினியின் ரசிகள் என்பதுதான் அவரின் மிகப்பெரிய ப்ளஸ். எனவே, அவர்களுக்கும் இன்று கொண்டாட்டமான தினம்தான்.
நடிகன் என்பதைத் தாண்டி, ரஜினியைக் கடவுளாகவே வழிபடுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதனால்தான் இத்தனை வயதிலும் க்ரேஸ் குறையாமல் அப்படியே இருக்கிறார் ரஜினி. அவரைக் கடவுளாக வழிபடும் பக்தனின் ஆசை என்னவாக இருக்கும்? கடவுளின் தரிசனம் ஒருமுறையாவது கிடைக்காதா என்பதுதான். அதுவும் அந்தக் கடவுளின் பிறந்த நாளில் கிடைத்துவிட்டால்..?
அதற்காகவே ஒவ்வொரு வருடமும் ரஜினியின் பிறந்த நாளன்று போயஸ் கார்டனை நோக்கி ரசிகர்கள் படையெடுப்பது வழக்கம். ஜன்னலில் இருந்து கூட அந்த முகம் எட்டிப் பார்க்காதா என்று தவம் கிடப்போர் ஏராளம். பல சமயங்களில் ஏமாற்றத்தையும், சில சமயங்களில் ஆனந்த அதிர்ச்சியையும் அவர்களுக்கு அளிப்பார் ரஜினிகாந்த்.
ஆனால், இன்று காலை முதல் போயஸ் கார்டன் சென்று கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு, ஏமாற்றத்தையே அளித்து வருகிறார் ரஜினி. கொடிகள், பேனர்களுடன் சென்ற ரசிகர்களை, ரஜினி வீடு இருக்கும் பகுதிக்குள் அனுமதிக்க போலீஸார் மறுத்து, அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி வருகின்றனர்.
ரஜினியும் போயஸ் கார்டனில் இல்லை என்று கூறப்படுகிறது. இன்று தன்னைச் சந்திக்க ஏராளமான ரசிகர்கள் முதல் தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் வருவார்கள் என்பதால், அதைத் தவிர்க்கும் பொருட்டு கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டிற்குச் சென்றுவிட்டார் என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் ஆந்திர மாநிலத்தில் உள்ள மந்த்ராலயம் கோயிலுக்குச் சென்றுவிட்டு திரும்பிய ரஜினி, ‘பிறந்த நாளில் ரசிகர்களைச் சந்திப்பேன்’ என்று பத்திரிகையாளர்களிடம் கூறினார். ஆனால், இன்று ரசிகர்களைச் சந்திப்பதாக எந்த அறிவிப்பும் இல்லை. இதுகுறித்து அவருக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தபோது, ‘பிறந்த நாளன்று ரசிகர்களைச் சந்திப்பதாகச் சொல்லவில்லை. பிறந்த நாளுக்குப் பிறகுதான் சந்திப்பதாகச் சொன்னார்’ என்கிறார்கள்.