சென்னை: கடந்த ஆண்டு அதிமுகவின் பொதுச் செயலாளராக பதவியேற்க வேண்டும் என்று காலில் விழுந்து கதறிய நிர்வாகிகள் இந்த ஆண்டு அவரை உதறி தள்ளிவிட்டனர். இதுதான் அதிமுகவின் அவதாரம் என்று கூறப்படுகிறது. ஜெயலலிதா மறைந்தவுடன் தமிழகத்தில் அரசியலில் திடீர் திருப்பங்கள் உருவானதோ இல்லையோ அதிமுகவில் உருவானது. 33 ஆண்டுகளாக ஜெயலலிதாவின் பின்னால் இருந்த சசிகலா அவரது மறைவுக்கு பிறகு சின்னம்மா என்ற அடைமொழியுடன் நிர்வாகிகளால் அன்போடு அழைக்கப்பட்டார். ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட “அதே” மரியாதையை சசிகலாவுக்கு கொடுத்தனர். ஜெயலலிதா மறைந்த உடன் அதிமுக எனும் மாபெரும் இயக்கத்தை நிர்வகிக்கும் பொறுப்பை சசிகலாதான் ஏற்க வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள் சசிகலாவிடம் கடந்த ஆண்டு டிசம்பர் 14-ஆம் தேதி கேட்டு கொண்டனர்.

அதிமுக மூத்த நிர்வாகிகள் மிகவும் கெஞ்சி கேட்டுக் கொண்டதால் சிறிய யோசனைக்கு பிறகு ,சசிகலா சம்மதம் தெரிவித்து விட்டார். இதையடுத்து சசிகலாவை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்க கடந்த ஆண்டு டிசம்பர் 29-ஆம் தேதி அதிமுகவின் பொதுக் குழு கூடியது.
சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அதிமுகவின் சட்டவிதிகள்படி சசிகலாவை பொதுச் செயலாளராக தேர்வு செய்ய ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டம் முடிந்த கையோடு தீர்மான நகலை சசிகலாவிடம் ஒப்படைக்க ஓபிஎஸ் உள்ளிட்டோர் போயஸ் கார்டனுக்கு சென்றனர். அங்கு தீர்மான நகலை சசிகலாவிடம் கொடுத்தபோது சிறிது தயங்கியதும் நிர்வாகிகள் வலியுறுத்திவுடன் அதை பெற்றுக் கொண்டார். பின்னர் அங்கிருந்த ஜெயலலிதாவின் படத்தின் முன்பு வைத்து ஆசிர்வாதம் பெற்றார்.
இதையடுத்து கட்சியும் ஆட்சியும் ஒருவர் கையில்தான் இருக்க வேண்டும் என்று கூறி கடந்த பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதி அனைத்து எம்எல்ஏக்களும் சேர்ந்து அவரை சட்டமன்ற தலைவராக தேர்வு செய்தனர். இதை ஓபிஎஸ் முன்மொழிந்தார். பின்னர் அடுத்த நாளே ஓபிஎஸ் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதிமுகவும் இரண்டாக உடைந்தது. பின்னர் பிப்ரவரி 9-ஆம் தேதி ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவை சந்தித்த சசிகலா ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

சசிகலாவிடம் கடிதம் பெற்ற அதேநாளில் ஓபிஎஸ்ஸும் தனது ராஜினாமாவை திரும்ப பெறுவதாக ஆளுநரிடம் கேட்டுக் கொண்டார். இதையடுத்து ஆளுநர் மும்பைக்கு புறப்பட்டுவிட்டார். அதற்குள் எம்எல்ஏக்களை திமுகவினரோ, ஓபிஎஸ் அணியினரோ விலைக்கு வாங்கி விடுவார்கள் என்ற பயத்தில் 122 எம்எல்ஏக்களை கூவத்தூரில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைத்தார் சசிகலா. ஆளுநர் பதவியேற்க வருவதற்குள் சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவின் தண்டனை உறுதி செய்யப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார்.
தமிழக அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, காமராஜ் உள்ளிட்ட அமைச்சர்கள் சசிகலாவை சிறைக்கு சென்று கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி சந்தித்து பேசினர். இதைத் தொடர்ந்து அதிமுகவின் இரட்டை இலை சின்னம் கடந்த ஏப்ரல் மாதம் முடக்கப்பட்டது. இதை மீட்பதற்காக இரண்டு அணிகளும் இணைய வேண்டுமானால் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் அணியினர் கோரிக்கை வைத்தனர்.
இதைத் தொடர்ந்து அதிமுகவின் அணிகள் இரண்டும் கடந்த ஆகஸ்ட் மாதம் இணைந்துவிட்டன. கடந்த செப்டம்பரில் பொதுக் குழு கூடி அதிமுகவில் நிரந்தர பொதுச் செயலாளர் என்றால் அது ஜெயலலிதாதான் என்றும் அவர் இல்லாததால் அந்த பதவி நீக்கப்படுகிறது என்றும் தீர்மானம் நிறைவேற்றினர். கடந்த ஆண்டு சசிகலாவிடம் கெஞ்சி கூத்தாடிய அதிமுக நிர்வாகிகள் சசிகலாவுக்கு இந்த ஆண்டு முழுக்கு போட்டனர்.

அன்று சின்னம்மா சின்னம்மா என்று கூறிய நிர்வாகிகள் இன்று சசிகலா என்று அழைக்க தொடங்கிவிட்டனர். சசிகலாவுக்கு ஆதரவாக இருந்தவரை வாய் திறக்காமல் இருந்து விட்டு தற்போது அப்பல்லோவில் இருந்த ஜெயலலிதா இட்லி சாப்பிட்டதாக சசிகலா கூற சொன்னதால்தான் நாங்கள் கூறினோம் என்று அமைச்சர்கள் திடீர் பல்டி அடிக்கின்றனர். அதுபோல் நேற்றுவரை எடப்பாடி ஆட்சி ஊழல் ஆட்சி என்ற ஓபிஎஸ் இன்று துணை முதல்வரானதும் ஊழல் கறை போய்விட்டது. நேற்று வரை பச்சை துரோகியாக இருந்தவர் இன்று அண்ணனாகிவிட்டார். இதுபோல் எத்தனையோ உதாரணங்களை கூறலாம். இதுதான் அதிமுகவின் அவதாரம்… அரிதாரம்…. அலங்கோலம்…!

Credit: OneIndia
பகிர்