ஆர்.கே.நகரில் யார் முந்துவார்கள் என்பது குறித்து பேராசியர் ராஜநாயகம் குழுவினர் இரண்டாங்கட்ட கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளனர். இதில் டிடிவி தினகரன் முந்துவதாக மீண்டும் பதிவிட்டுள்ளார்.

லயோலா கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியர் ராஜநாயகம் கடந்த வாரம் முதல் கட்ட கருத்துக் கணிப்பை வெளியிட்டார். அதில் டிடிவி தினகரன் முந்துவதாக தெரிவித்திருந்தார். இன்று இரண்டாங்கட்ட கணிப்பு முடிவை வெளியிட்டுள்ளார். அதிலும் டிடிவி தினகரனே முந்த வாய்ப்பு என்று தெரிவித்துள்ளார்.

ராஜநாயகம் குழுவினர் சமூக வரைவியல் நோக்குடன் நடத்திய கணிப்பில் முதல் கட்டமாக டிச.5 முதல் 12 வரை 27 பேர் கொண்ட குழுவினர் 156 இடங்களில் 3120 பேரிடம் ஆய்வு நடத்தி டிச.13 அன்று முதற்கட்ட ஆய்வு முடிவை வெளியிட்டனர்.

பின்னர் மீண்டும் இரண்டாம் சுற்றாக கடந்த டிச.13 முதல் 17 வரை 152 இடங்களில் 3040 பேரிடம் நடத்திய கணிப்பில் பண்பியல், எண்ணிக்கையில், தரவுகளை ஒருங்கிணைத்து இறுதி முடிவுகளை எடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பெண்கள் 55 சதவீதமும், ஆண்கள் 45 சதவீதமும் இந்த ஆய்வில் பங்கேற்றனர். 36 வயதிலிருந்து 45 வயதுள்ள வாக்காளர்கள் 42.7 சதவீதத்தினர் பங்கேற்றனர். 42 லிருந்து 60 வயதுள்ள வாக்காளர்கள் 21.5 சதவீதத்தினரும், 26 லிருந்து 35 வயதுள்ள வாக்காளர்கள் 20.5 சதவீதத்தினரும், 25 வயதுவரை உள்ள வாக்காளர்கள் 9 சதவீதத்தினரும், 60 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 6.3 சதவீதத்தினரும் கலந்துக்கொண்டனர்.

6 வது முதல் பிளஸ்-2 வரை படித்த 42.2 சதவீத வாக்காளர்களும், ஆரம்பக்கல்வி அல்லது கல்வி அறிவில்லாத 37.8 சதவீதத்தினரும், கல்லூரி படிப்பு, தொழிற்க்கல்வி கற்ற 20 சதவீதத்தினரும் இதில் பங்கேற்றனர். மீனவர்கள், கூலித்தொழிலாளர்கள் 17 சதவீதத்தினரும், சொந்தத்தொழில் செய்பவர்கள் 17.6 சதவீதத்தினரும், தனியார் நிறுவன ஊழியர்கள் 17.1 சதவீதத்தினரும், அரசு ஊழியர்கள் 3.1 சதவீதத்தினரும் இல்லத்தரசிகள் 31.7 சதவீதத்தினரும், மாணவர்கள் 7.2 சதவீதத்தினரும், வேலையில்லாதோர் 2.6 சதவீதத்தினரும், ஓய்வுப்பெற்றோர் 3.1 சதவீதத்தினரும் பங்கேற்றுள்ளனர்.

தாழ்த்தப்பட்டோர் 26.4 சதவீதத்தினர், மிகவும் பிற்பட்டோர் 37.6 சதவீதத்தினர், பிற்பட்டோர் 28.4 சதவீதத்தினர் பங்கேற்றுள்ளனர். இதில் சின்னத்தை கொண்டுச் சேர்ப்பதில் குக்கர், இரட்டை இலை, உதயசூரியன் கிட்டத்தட்ட சம நிலையில் உள்ளது. மற்றவர்கள் எட்டாத தூரத்தில் உள்ளனர்.

வாக்களிக்க பணம் தருவது சரியே

வாக்களிக்க வேட்பாளர்கள் பணமாகவோ, பொருளாகவோ வாக்காளர்களுக்கு அளிப்பதை வாக்காளர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். இது சம்பந்தமாக தேர்தல் ஆணையம் எடுக்கும் நடவடிக்கைகளை வாக்காளர்கள் ரசிக்கவில்லை.

மன உளைச்சலில் வாக்காளர்கள்

பணம் வாங்கிய வாக்காளர்கள் யாருக்கு வாக்களிப்பது என்ற மன ஊசலாட்டத்திலும், மன உளைச்சலிலும் உள்ளதாக கணிப்பில் தெரியவந்துள்ளது. இந்த ஊசலாட்டம் தவிர கடந்தமுறை பணம் கொடுத்தவர், இந்த முறை பணம் கொடுத்தவர் என வெவ்வேறு வேட்பாளரிடம் பணம் பெற்றவர்கள் ஊசலாட்டத்தில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த ஊசலாட்டம் பெரும்பாலும் தினகரனுக்கு வாய்ப்பாக மாறும் என்று ராஜநாயகம் தெரிவித்துள்ளார்.

முந்துகிறார் டிடிவி தினகரன்

தற்போது தேர்தல் நடந்தால் யாருக்கு வாக்கு என்பதில் முதலிடத்தில் டிடிவி தினகரன் உள்ளார். டிடிவி தினகரன் 37.4 சதவீதமும், மருது கணேஷ் திமுக 24.3 சதவீதமும், மதுசூதனன் அதிமுக 22.1 சதவீதமும், கலைக்கோட்டுதயம் நாம் தமிழர் கட்சி 4.8 சதவீதமும், யாருக்கு வாக்களிப்பது என்று முடிவெடுக்காதவர் 7.1 சதவீதத்தினர்.

பகிர்