குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசம் மாநிலங்களில் வெற்றி பெற்ற பாஜக தமிழகத்திலும் வெல்லும் என்று பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியுள்ளார்.

குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. இரு மாநிலங்களிலும் பாஜக முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை செளந்தராஜன், “20 ஆண்டுகளுக்கும் மேலாக குஜராத்தில் ஆட்சியில் இருக்கும் பாஜக மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். இமாச்சலப் பிரதேசத்திலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. பல எதிர்ப்பு விமர்சனங்களை தகர்த்து பாஜக வெற்றி பெற்றுள்ளது.” என்று கூறினார்.

“பணமதிப்பு நீக்கத்திற்குப் பின் பாஜகவும் ஒழிந்துவிட்டது என எதிர்க்கட்சிகள் கூறினார்கள். ஆனால் அதற்கு பிறகு பாஜக எழும்பியது. ஜி.எஸ்.டி வந்த பிறகு பாஜக ஒழிந்துவிடும் என்று கூறினார்கள். மீண்டும் பாஜக இரு மடங்கு சக்தியுடன் எழும்பி வந்துள்ளது. இந்த மாற்றம் தமிழக அரசியலிலும் ஏற்படும். வட இந்தியா, குஜராத்தில் தொடரும் வெற்றி, தமிழகத்திலும் தொடரும்.” என்றும் அவர் கூறினார்.

பகிர்