சென்னை: ஆர்.கே.நகரில் இன்று அனல் பறக்கப் பிரச்சாரம் செய்த டிடிவி தினகரன் முடிந்தவரை இன்று தனது முத்திரையை தொகுதி முழுவதும் ஆணித்தரமாக பதித்து விட்டார். பிரச்சாரம் செய்ய கடைசி நாளான இன்று அவர் பிரமாண்டக் கூட்டத்தைக் கூட்டி தொகுதியையே பதறடித்து விட்டார். அத்தோடு நில்லாமல் பைக்கிலும் பயணித்து தொகுதி மக்களிடம் தனது குக்கர் சின்னத்தை நீக்கமற மனதில் பதித்து விட்டார். திராவிடக் கட்சிகளுக்கு சற்றும் சளைக்காத வகையில் தினகரனின் பிரச்சாரம் இந்த, “பணக்கார” இடைத்தேர்தலில் காணப்பட்டது. தொடக்கம் முதல் முடிவு வரை தினகரன் குறித்த பேச்சுதான் அதிகம்.

தனக்கு கிடைத்த குக்கர் சின்னத்தை படு வேகமாக மக்களிடையே கொண்டு சென்று விட்டார் தினகரன். குக்கரை வைத்து எப்படியெல்லாம் பிரச்சாரம் செய்ய முடியுமோ அப்படியெல்லாம் செய்து அதகளப்படுத்தி விட்டது தினகரன் தரப்பு. இன்று கடைசிக் கட்டப் பிரச்சாரத்தின்போது வெற்றிவேல் பைக்கை ஓட்ட பின்னால் தினகரன் உட்கார்ந்து கொண்டு கடைசிக் கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது தொகுதியில் இன்னொரு பரபரப்பாக அமைந்தது.

அண்ணன் தினகரன் வருகிறார் என்பதால் கூடிய மக்கள் கூட்டத்தால் 1கிலோமீட்டருக்கும் மேலாக ட்ராபிக் ஜாம் ஆகியது.அதனால் அண்ணன் சென்ற கார் கூட அந்த பகுதியை நோக்கி முன்னேற முடியவில்லை..இதனை உணர்ந்த அண்ணன் எம்.எல்.ஏ வெற்றிவேல் அவர்கள் உடனடியாக இருசக்கர வாகனத்தில் கூட்டம் நடைபெற இருந்த பகுதியை நோக்கி அழைத்து வந்தார்..

Posted by Veeramani K on Tuesday, December 19, 2017

குக்கர் படம் பொறித்த கொடிகள், தினகரன் வரும்போது குக்கர் கோலங்கள், தொண்டர்களின் கையில் குக்கர் என எல்லா வழிகளிலும் குக்கரை வாக்காளர்களிடம் கொண்டுசேர்த்திருக்கிறார் தினகரன். தவிர, அவரது பிரச்சாரக்கூட்டங்களுக்கு கூடும் கூட்டமும் உற்சாகமும் பிற கட்சிகளை கவலைக்கு உள்ளாக்கவே செய்திருக்கின்றன.

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நேரத்தில், ஆளும் அ.தி.மு.கவின் வாக்குகளைப் பிரிப்பார் தினகரன் என்று அளவிலேயே கருதப்பட்ட டிடிவி தினகரன், தற்போது வெற்றிபெறும் வாய்ப்புள்ளவர்களில் ஒருவராக முன்னிலைக்கு வந்துகொண்டிருக்கிறார்.

தொகுதிக்குள் ஒரு சுற்று சுற்றிவந்தால், ஒருவர் பலமுறை தினகரன் ஆதரவு பிரச்சார ஊர்வலங்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. களத்தில் உள்ள வேறு எந்தப் பெரிய கட்சியும் இவ்வளவு தீவிரமாகப் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.

பிரச்சாரத்தின் கடைசி நாளில் தினகரன் கூட்டிய கூட்டத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு தொகுதியே ஸ்தம்பித்தது, பிற கட்சிகளை அதிரவைத்திருக்கிறது.

பகிர்