Reproduced from Vikatan, copyright violation not intended.
தமிழகத்தில் நடக்கும் அத்தனை அரசியல் குழப்பங்களுக்கும் எத்திசையில் தீர்விருக்கிறது என்பதை சுட்டிக் காட்டும் களமாக ஆர்.கே நகர் இடைத்தேர்தல் பார்க்கப்படுகிறது. ‘ஒண்ணாத்தான் இருக்கோம்’ என வெளியே சொல்லிக்கொள்ளவாவது இந்த வெற்றி பயன்படுமே என்ற பதற்றத்தில் ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ் அணி, அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக இதைப் பார்க்கும் தி.மு.க, குஜராத் உற்சாகத்தை இங்கும் அறுவடை செய்யலாம் என நினைக்கும் பா.ஜ.க, ’அ.தி.மு.கவை ஜெயிக்கவிடாமல் செய்து ‘நான் யார்’ எனக் காட்டுகிறேன்’ என முஷ்டி முறுக்கும் தினகரன் எனக் களத்தில் பலமான போட்டி நிலவுகிறது. ஆர்.கே.நகர்வாசிகளின் வாக்குகளைப் பெற அனைத்துக் கட்சிகளும் பிரசாரம், பணபலம், அதிகார பலம் எனப் பலவாறாகப் பரபரத்துக் கிடக்கிறார்கள். இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு உலகத் தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள, சிம்பிளாக ஒரு மிஸ்டுகால் சர்வே நடத்தினோம்.
சர்வே தொடங்கிய வெள்ளிக்கிழமை இரவு நிலவரப்படி டி.டிவி தினகரன்தான் லீடிங்கில் இருந்தார். ஆனால், சனிக்கிழமை பகலில் காட்சி அப்படியே மாறியது. தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷுக்குத் தாறுமாறாக ஓட்டுகள் விழுந்தன. சனி இரவு மீண்டும் உல்டா. தினகரன் லீடிங்கில் வந்தார். இந்த பரமபத விளையாட்டு சர்வே முடியும் வரையில் தொடர்ந்தது. மறுபக்கம் அஃபிஷியல் அ.தி.மு.க என அறிவிக்கப்பட்டுள்ள ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ் அணிக்கு மிகக் குறைவான ஓட்டுகளே கிடைத்தன.
மூன்று நாள்கள் பதிவான மிஸ்டுகால் சர்வே முடிவுகளின்படி ஆர்.கே நகரில் குக்கரின் விசில் சத்தம் சற்றே ஓங்கி ஒலிக்கிறது. ஆனால், ‘விடாதே பிடி’ என வெகு நெருக்கத்தில் விரட்டி வருகிறார் தி.மு.க வின் மருதுகணேஷ். ஆனால், இவர்கள் இருவருக்கும் இடையிலான முன்னிலை நிலவரம் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கிறது. இவர்கள் இருவருக்கும் அடுத்து பெரும் வித்தியாசத்துடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார் அ.தி.மு.கவின் மதுசூதனன். ஆச்சர்யமாக, பி.ஜே.பி-யை முந்தி நாம் தமிழர் கட்சி நான்காவது இடம் பிடித்திருக்கிறது. சுவாரஸ்யமாக, அந்தக் கட்சி பெற்ற வாக்குகளில் பாதிக்கும் மேல் வெளிநாட்டு தொலை/அலைபேசிகள் மூலம் பதிவானவை. அதுவும் இரவுகளிலேயே அதிகளவில் மிஸ்டுகால்கள் பதிவாகின நாம் தமிழர் கட்சிக்கு. ஐந்தாவது இடத்தில் சொற்ப சதவிகிதத்தோடு இருக்கிறது குஜராத்தில் வென்ற பா.ஜ.க. மிஸ்டு கால் கொடுத்தே கட்சிக்கு ஆள் சேர்த்தவர்களால், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்கு மிஸ்டு கால் கொடுக்கமுடியவில்லை போல. நோட்டாவுக்கும், சுயேச்சை மற்றும் பிற வேட்பாளர்களுக்கும் சொற்பமாக வாக்குகள் பதிவாகியிருக்கின்றன.
ஆக, இப்போதைய நிலவரப்படி தினகரன், தி.மு.கவின் மருதுகணேஷ் இருவருக்கு இடையே எவரேனும் ஒருவர் ஜெயிக்க வேண்டும் என உலகத் தமிழர்கள் நினைக்கிறார்கள். அதன் பின்னரே அ.தி.மு.க. வருகிறது. இவை இணைய நிலவரம்தான். கள நிலவரம் நிச்சயம் வேறுபடும்… தேர்தல் நடைபெறும் நாளுக்குள் களம் இன்னும் அதகளமாகும். மத்திய அரசின் நிர்பந்தம், தமிழக அரசின் செல்வாக்கு, கோடிகளில் விளையாடும் பணம், தி.மு.கவுக்கும் தினகரனுக்குமான போட்டி எனப் பல சக்திகள் இத்தேர்தலில் ஆதிக்கம் செலுத்தும். அவற்றில் எது தேர்தல் முடிவை ஆதிக்கம் செலுத்தும் என்பது இறுதி நிலவரத்தைப் பொறுத்தே அமையும். ஆக, உலகத் தமிழர்களின் மனநிலையை ஆர்.கே.நகர்வாசிகளும் பிரதிபலிக்கிறார்களா என்பதை 24-ந் தேதி தெரிந்துகொள்வோம்.