தேனி மாவட்டம் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் மிகவும் பிரசித்திபெற்றது. இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து வேறோரு ராசிக்கு இடம் பெயரும் சனீஸ்வர பகவான், இந்த முறை விருச்சக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம்பெயர்ந்துள்ளார். இந்நிகழ்வு குச்சனூர் சனீஸ்வர பகவான் திருத்தலத்தில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குச்சனூருக்கு வருகை புரிந்தனர். இதனால் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தது மாவட்ட நிர்வாகம்.
நேற்று காலை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மகன் நவீன், குச்சனூருக்கு வந்து சனீஸ்வர பகவானை வழிபட்டு்ச் சென்றார். இதையடுத்து இரவு 8 மணி அளவில் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலுக்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம் வருகை புரிந்தார். திடீரென பன்னீர்செல்வம் கோயிலுக்கு வந்ததால் கோயில் நிர்வாகத்தினர் சிறிது பதற்றமடைந்தனர்.
