காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான அரசு 2004-2009 மற்றும் 2009 முதல் 2014-ஆம் ஆண்டுகள்வரை ஆட்சியில் இருந்தது. அதில் முதலாவது ஆட்சியில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன.

இது தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிஐ விசாரணை நடத்தியது. அதில் மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சராக ஆ. ராசா, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீதும் மூன்று தனியார் நிறுவனங்கள் மீதும் சிபிஐ 2011-ஆம் ஆண்டில் வழக்கு பதிவு செய்தது.

இதேபோல மத்திய அமலாக்கத் துறையும் தனியாக தொடர்ந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடந்தது.

இந்த வழக்குகளின் விசாரணை கடந்த ஆறு ஆண்டுகளாக டெல்லி சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் நடைபெற்று வந்தது.

2ஜி வழக்கில் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்:

  • இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு நடந்த ஊழல்களில் மிகப் பெரிய முறைகேடு வழக்காக இது பார்க்கப்பட்டது.
  • சிபிஐ இரண்டு வழக்குகளையும், மத்திய அமலாக்கத்துறை ஒரு வழக்கையும், டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் தொடர்ந்தன.
  • முதலாவது குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்த ஆறு ஆண்டுகளுக்கு பிறகு, வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது.
  • திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா, அக்கட்சித் தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி, அவரது மனைவி தயாளு அம்மாள், முன்னாள் தொலைத்தொடர்புத் துறைச் செயலாளர் சித்தார்த் பெஹுரா உள்ளிட்ட முக்கிய நபர்கள் குற்றம்சாட்டப்பட்டிருந்தனர்.
  • ஸ்வான் டெலிகாம், ரிலையன்ஸ் டெலிகாம், யூனிடெக் வயர்லெஸ் ஆகிய தனியார் நிறுவனங்கள் மீதும் குற்றம்சாட்டப்பட்டிருந்தன.
  • சிபிஐ குற்றப்பத்திரிகையில், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டால் ரூ. 30,984 கோடி அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது.
  • தொலைத்தொடர்பு உரிமங்களை விண்ணப்பிக்க நிர்ணயித்த கடைசி தேதியை உள்நோக்கத்துடன் ஆ.ராசா மாற்றி முன்கூட்டியே இறுதி செய்ததாக சிபிஐ குற்றம்சாட்டியது. இதன் மூலம் சில தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக அவர் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
  • ஆதாயம் அடைந்த தனியார் நிறுவனங்கள் திமுக ஆதரவு கலைஞர் டி.விக்கு கடனாக அளித்ததாகக் கூறப்படும் ரூ. 200 கோடியை லஞ்சம் என்று மத்திய அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியிருந்தது.
  • இந்த வழக்கால் 2009-இல் மத்திய அரசில் அங்கம் வகித்த திமுகவுக்கு பின்னடைவு ஏற்பட்டது. 2011-இல் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுகவுக்கு எதிரான பிரசாரத்திலும் இந்த விவகாரம் முக்கியமானதாக பேசப்பட்டது.

2ஜி வழக்கில் தவறான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றவியல் நடைமுறை ஏதும் பின்பற்றப்படவில்லை. அதிகாரிகள் சரியாக நடவடிக்கை எடுக்காததே இன்றைய தீர்ப்புக்கு காரணம். இந்த வழக்கில் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை  வழக்கறிஞர்கள் முறையாக வாதாடவில்லை. இதுதவிர இந்த வழக்கில் நேர்மையாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேர்மையான அதிகாரிகளை குறிவைத்து இந்த வழக்கில் இருந்து விலக்கினர்.

இந்த தீர்ப்பினால் 2ஜி அலைக்கற்றை வழக்கில் பின்னடைவு ஏற்படவில்லை. வழக்கறிஞர்கள் ஊழலுக்கு எதிராக போராடுவது தீவிரமாக இல்லை.

பகிர்