ஜெயலலிதா வீடியோ கடைசி நேரத்தில் ஆர்.கே.நகர் தேர்தல் களத்தை திசை திருப்புமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. டிடிவி தரப்பின் மெகா ‘மூவ்’வாக இது பார்க்கப்படுகிறது.

ஜெயலலிதா மரணம் தொடர்பான மர்மம், கடந்த ஓராண்டுக்கும் மேலாக விவாதப் பொருளாக இருந்து வருகிறது. அதிமுக.வில் இருந்து சசிகலாவை ஓரங்கட்டுவதற்கு, ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகமே காரணம்!

ஜெயலலிதாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெயானந்த் தான் முதன்முதலில், ‘ஜெயலலிதாவின் சிகிச்சை தொடர்பான வீடியோ இருக்கிறது’ என கூறினார். அப்போது, ‘தங்கள் மீதான மக்கள் கோபத்தை குறைக்க அவர் அவ்வாறு பேசுகிறார்’ என கூறப்பட்டது.

அதன்பிறகு டிடிவி தினகரன் ஓரிரு முறை, ‘ஜெயலலிதா நைட்டி உடையில் இருக்கும் அந்த வீடியோவை நாங்கள் அரசியல் லாபத்திற்கு வெளியிட விரும்பவில்லை. ஆனால் விசாரணை ஆணையம் கேட்டால் வழங்குவோம்’ என்றார். இதுவரை பலருக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரிக்கும் விசாரணை ஆணையம், அந்த வீடியோவை ஏன் கேட்டு நோட்டீஸ் அனுப்பவில்லை என்பதும் புரியவில்லை.

இந்தச் சூழலில்தான் ஆர்.கே.நகரின் வாக்குப் பதிவுக்கு முன் தினம் (டிசம்பர் 20-ம் தேதி) டிடிவி தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் அந்த வீடியோவை வெளியிட்டார். ஜெயலலிதா நைட்டி உடையில் மருத்துவமனை படுக்கையில் படுத்தபடி ஜூஸ் அருந்துவதாக அந்தக் காட்சிகள் இருக்கின்றன.

டிடிவி தினகரனுக்கு தெரியாமல் அந்த வீடியோவை வெளியிட்டதாக வெற்றிவேல் கூறினார். அதிமுக தரப்பில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவை குற்றம்சாட்டி கடைசி நாளில் பிரசாரம் செய்ததாகவும், மக்களுக்கு உண்மை தெரியவேண்டும் என்பதற்காகவே இதை வெளியிடுவதாகவும் கூறினார் வெற்றிவேல்.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இதை, ‘கீழ்த்தரமான அரசியல்’ என வர்ணித்தார். அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரான கே.பி.முனுசாமி, ‘அது போலி வீடியோ’ என்றார். ஆனால் அமைச்சர் ஜெயகுமார் கூறுகையில், ‘இது தேர்தல் விதிமுறையை மீறிய செயல்’ என குறிப்பிட்டார். தேர்தல் ஆணையமும் இந்த வீடியோவை வெளியிட வேண்டாம் என மீடியாவை கேட்டுக் கொண்டிருக்கிறது.

இதில் இன்னொரு திருப்பமாக சசிகலாவின் அண்ணன் மகள் கிருஷ்ணபிரியா, இந்த வீடியோவை வெளியிட்டதை கண்டித்தார். ஆனால் சசிகலாவின் மற்றொரு சகோதரரான திவாகரன் மகன் ஜெயானந்த், ‘இதை வெளியிட்டதில் தவறில்லை. நம் குடும்பத்தினரின் நிம்மதியைவிட ஒன்றரை கோடி தொண்டர்களின் நிம்மதி முக்கியம்’ என குறிப்பிட்டார். சசிகலா குடும்பத்தினரே இப்படி மாறி மாறி விவாதம் செய்வது அந்த வீடியோவின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தும் தந்திரம் என்கிறார்கள், விவரமறிந்தவர்கள்.

நிஜமாகவே இந்த வீடியோ அதிமுக தரப்பை பதற்றப் படுத்தியிருப்பது நிஜம்! ஆர்.கே.நகர் தேர்தல் களத்தில் அதிமுக, திமுக ஆகியவற்றைக் காட்டிலும் படு சுறுசுறுப்பான பிரசாரத்தை முன்னெடுத்தவர் டிடிவி தினகரன்தான். அதிலும் கடைசி நாள் பிரசாரத்தில் ஆர்.கே.நகரே திணறும் வகையில் அவரது பிரசாரத்தில் ஆட்கள் திரட்டப்பட்டதை ஆளும்கட்சி எதிர்பார்க்கவில்லை. டிடிவி பிரச்சாரத்தில் திரண்ட கூட்டத்தின் ‘லாங் ஷாட்’களை எடுத்துப் போட்டு, ‘அதிமுக பிரசாரத்தில் திரண்ட கூட்டம்’ என சமூக வலைதளங்களில் அதிமுக ஆதரவாளர்கள் பிரசாரம் செய்த கூத்தும் நடந்தது.

இதையும் தாண்டி ஓட்டுக்கு ரூ 6000 என விதைக்கப்பட்ட பணம்தான் ஆளும் தரப்பின் பிரதான நம்பிக்கை! ஆனால் அதற்கு ஈடு கொடுக்கும் விதமாக டிடிவி தரப்பு கடைசி நாளில் இந்த வீடியோ அணுகுண்டை ‘ஓபன்’ செய்ததாக ஆளும் தரப்பில் கருதுகிறார்கள்.

வாக்குப் பதிவுக்கு முன் தினம் எந்தக் கட்சியும் வாக்காளரை ‘இன்ஃப்ளுயன்ஸ்’ செய்யக்கூடாது என்பது தேர்தல் நடத்தை விதிமுறை. அதாவது, அந்த ஒரு நாளும் அதுவரை நடந்த பிரசாரம், கட்சிகள் முன்வைத்த வாக்குறுதிகள், கட்சிகளின் கடந்தகால செயல்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் வாக்காளர்கள் சிந்தித்து வாக்களிக்க கொடுக்கப்பட்ட அவகாசம் அது!

ஆனால் டிசம்பர் 20-ம் தேதி டிடிவி தினகரன் தரப்பு வெளியிட்ட வீடியோ, ஆர்.கே.நகரை மட்டுமல்ல, தமிழகத்தையே அந்த வீடியோவைப் பற்றியே பேச வைத்துவிட்டது. ஜெயலலிதாவை உயிரிழந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வந்ததாகவும், அவரது கால் எடுக்கப்பட்டதாகவும் கிளம்பிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்தது அந்த வீடியோ.

Credit: IETAMIL

பகிர்