Reproduced fro Savukku

2 ஜி தீர்ப்பை நாடே எதிர்பார்த்து காத்திருந்தது.  ஏனெனில் இந்த ஊழல்
ஏற்படுத்திய தாக்கம் அத்தகையது.   போபர்ஸ் ஊழலுக்கு பிறகு, நாட்டின் அரசியல் போக்கையே மாற்றியமைத்த ஒரு ஊழல் 2ஜி ஊழல் எனலாம்.  தொலைத் தொடர்புத் துறையை ஆய்வு செய்த மத்திய கணக்காயர் அலுவலகம் அளித்த அறிக்கையில், 2ஜி அலைக்கற்றையை சரியான முறையில் ஏலத்தில் விடாமல்,  மனம் போன போக்கில் விருப்பப்பட்ட நிறுவனங்களுக்கு விதிகளை மீறி வழங்கியதால், ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி உத்தேச இழப்பீடு ஏற்பட்டுள்ளது என்று கூறியது.

இந்த அறிக்கைதான், 2ஜி ஊழல் நாடெங்கும் தீப்பிழம்பு போல பரவ காரணமாக அமைந்தது.  ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் திமுகவும் அங்கமாக இருந்தததும், முதல் யுபிஏ அரசாங்கத்தில் நடந்த இந்த ஊழலை, திமுக ஆதரவு காரணமாகவே விசாரிக்காமல் தாமதப்படுத்தியதும் இந்த விவகாரத்தை தீவிரமடையச் செய்தது.   2ஜியை தொடர்ந்து காமன்வெல்த் ஊழல்கள், ராடியா உரையாடல்கள், அவ்வப்போது வெளிவந்த மத்திய அரசின் கோப்பிலிருந்த ஆதாரங்கள் என்று 2ஜி நாட்டு மக்கள் அனைவரையும் வசீகரித்து வாய் பிளக்க வைத்தது என்பது உண்மையே.

2009ல் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகுதான் விவகாரம் சூடு பிடித்தது.   இரண்டாவது முறை, முழுக்க முழுக்க திமுக ஆதரவை நம்பி மத்திய அரசு இல்லை என்ற நிலை உருவாகியது.  அதற்கு முன்னால், அரசை காப்பாற்றுவதற்காக, திமுகவின் தயவில் இருந்த காங்கிரஸ் கட்சி, இரண்டாவது முறை, தனது சுயரூபத்தை காட்டத் தொடங்கியது.  வழக்கு பதிவு செய்யப்பட்டு சிபிஐ விசாரணையை தொடங்கியது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலேயே இருந்த சில அமைச்சர்கள், கோப்புகளை ஊடகங்களுக்கு வெளியிடத் தொடங்கினார்.  ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி என்ற அந்த எண், இந்தியா முழுக்க மக்களின் மனதில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

சிபிஐ முதல் தகவல் அறிக்கையை பெயருக்கு பதிவு செய்து வைத்துக் கொண்டு, விசாரணையில் எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தாமல் தாமதப்படுத்தி வைத்திருந்தது.    2ஜி வழக்கை கண்காணிக்கவும், சிபிஐ விசாரணையை உரிய முறையில் நடத்த உத்தரவிடவும், வழக்கறிஞரி பிரசாந்த் பூஷண் மற்றும் சுப்ரமணிய சுவாமி ஆகியோர் தனித்தனியாக வழக்கு தொடுத்தனர்.    ஆ.ராசாவால் வழங்கப்பட்ட 2ஜி லைசென்சுகளை ரத்து செய்யவும் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த நேரத்தில்தான், 2011 ஏப்ரல் மாதத்தில், டெல்லியில் அன்னா ஹசாரே, ஊழலுக்கு எதிராகவும், லோக்பால் மசோதாவை செயல்படுத்தவும் ஒரு மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்தார்.    ஊழலுக்கு எதிரான போராட்டமாக சித்தரிக்கப்பட்ட அந்த போராட்டத்தை பிஜேபி மற்றும் சங் பரிவார அமைப்பினர் வலுவாகவே பயன்படுத்திக் கொண்டனர்.  இயல்பாக பிஜேபி மற்றும் சங் பரிவார அமைப்பினர் மீது உள்ள எரிச்சலின் காரணமாக மக்கள் அவர்களை அரவணைக்க தயங்குவார்கள் என்பதை உணர்ந்து, அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்தில் தங்கள் ஸ்லீப்பர் செல்கள் மூலமாக நுழைந்தனர்.

2ஜி ஊழலை ஊதிப் பெரிதாக்கி பூதாகரமாக்கினர்.   கணக்காயர் அறிக்கை கூறிய ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி என்ற தொகை அசலானது என்றே வாதிட்டனர்.    சிபிஐயும் இவ்வழக்கில் நாடெங்கும் சோதனைகளை நடத்தி, ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோரை கைது செய்தது.   பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இறுதியாக ஏப்ரல் 2011ல், சிபிஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தது.  கனிமொழி உள்ளிட்டோரின் மீது கூடுதல் குற்றப் பத்திரிக்கையும் தாக்கல் செய்தது.   22 அக்டோபர் 2011ல், ஆ.ராசா உள்ளிட்டோரின் மீது குற்றச் சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.   அந்த குற்றச் சாட்டுகளை பதிவு செய்வதற்கான வாதத்தின்போதுதான், சிபிஐ முதன் முறையாக, கலைஞர் டிவிக்கு கொடுத்ததாக கூறப்படும் 214 கோடியைத் தவிர, 2ஜி ஊழலில் லஞ்சமாக பெறப்பட்ட பணம் என்று எதுவும் கண்டுபிடிக்கப் படவில்லை என்று கூறியது.    2ஜி ஊழலில் பல கோடி ரூபாய் பணம் லஞ்சமாக கொடுக்கப்பட்டது என்பது வெளிப்படையாக தெரிந்தாலும், அதற்கான ஆதாரங்கள் என்று எதையுமே சிபிஐ, அமலாக்கத் துறையால் கண்டுபிடிக்க முடியவில்லை.

லஞ்சமாக கொடுக்காமல், அது வரை யாருக்குமே தெரியாமல் இருந்த பாதிரியார் ஜெகத் கஸ்பர் நடத்தும் தமிழ் விழாவுக்கு 2ஜியில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் எதற்காக பல லட்சங்களை நன்கொடையாக தர வேண்டும் ?    2ஜி ஊழல் நடப்பதற்கு முன்னதாகவும், அதற்கு பின்னதாகவும், ஜெகத் கஸ்பருக்கு இது போன்ற நன்கொடைகளை எந்த நிறுவனமும் தரவில்லை.   இதே போல, சிறிது சிறிதாக பல உதாரணங்களை காண்பிக்க முடியும்.

ஆனால், இந்த உதாரணங்கள் அனைத்தும், ஆ.ராசா, 2ஜி ஊழலில் லஞ்சமாக பெற்றவை என்று நீதிமன்றத்தில் நிரூபிக்க போதுமானவை அல்ல.

இந்த 2ஜி ஊழலில் பெரும் பலனை அடைந்தவை இரு நிறுவனங்கள்.   ஒன்று அனில் அம்பானி நடத்தும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் மற்றும் டாடா கம்யூனிகேஷன்.  இந்த இரு நிறுவனங்கள்தான், ராசா உருவாக்கிய ஒரே நாள் கொள்கைகளால் பல கோடி ரூபாய்கள் பலனடைந்தவை.   இந்த வழக்கில் சேர்க்கப்பட்ட யூனிடெக், ஸ்வான் டெலிகாம் போன்ற பல நிறுவனங்கள், அனில் அம்பானியின் பினாமி நிறுவனங்களே.  இன்று 2ஜி வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட யூனிடெக் மற்றும் ஸ்வான் நிர்வாகிகள் அனைவரும், வழக்கில் சிக்குவதற்கு முன்னதாக அனில் அம்பானியின் நிறுவனத்தில் வேலை பார்த்தவர்களே.

அனில் அம்பானியை குற்றவாளியாக சேர்க்காமல், அவரை சாட்சியாக சேர்த்தது சிபிஐ. அம்பானிகள், டாட்டாக்கள், அடானிகள், சிங்கானியாக்கள் போன்றவர்களுக்கு காங்கிரஸ் மற்றும் பிஜேபி ஆட்சி ஒன்றே.  ஏனெனில், அவர்கள்தான் ஆட்சியை நடத்தி கொள்கைகளை முடிவு செய்பவர்கள்.   அவர்கள் நடத்தும் அரசாங்கங்களால் அவர்களை ஒரு நாளும் தண்டிக்க முடியாது.

வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்ட அனில் அம்பானி, பிறழ் சாட்சியாக மாறினார்.  மற்றொரு இணைப்பு

மொத்த ஊழலில் பல ஆயிரம் கோடி ரூபாய் பெரும் பலனடைந்த இரு நிறுவனங்களை குற்றப் பத்திரிக்கையில் சேர்க்காமல், பினாமிகளை மட்டும் குற்றவாளிகளாக சேர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குக்கு என்ன நேரும் என்பதுதான் இன்று நேர்ந்திருக்கிறது.

ஒட்டுமொத்த ஊழலில் முழுமையான பலனடைந்தது, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் மற்றும் டாட்டா நிறுவனங்களே.    அதற்கான பிரதிபலனாக, ஆ.ராசாவுக்கும், திமுக குடும்பத்தினருக்கும் கணிசமான தொகையை தந்திருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.  ஆனால் வெறும் சந்தேகம், நீதிமன்றத்தில் சான்றாக முடியுமா ?  முடியாது, கூடவும் கூடாது.   அனில் அம்பானியை குற்றவாளியாகவே சேர்க்காமல்,  ராசாவும் கனிமொழியும் தண்டிக்கப்பட்டிருந்தால் அதுவும் நீதிப் பிறழ்வாகவே அமைந்திருக்கும்.

சிபிஐ என்ற அமைப்பு வானத்திலிருந்து குதித்ததல்ல என்று ஒரு முறை சட்டப்பேரவையில் ஜெயலலிதா விமர்சித்திருந்தார்.   அது முழுக்க முழுக்க உண்மையே.  சிபிஐ என்ற அமைப்பும் மனிதர்களால் நிறைந்ததுதான்.   நேரடியாக சிபிஐயில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களை தவிர்த்து, வருவாய்த் துறை, வருவாய் புலனாய்வுத் துறை, எல்லைப் பாதுகாப்புப் படை, ரயில்வே காவல் துறை, வங்கிகள், மாநில காவல் துறைகள்,  போன்ற அமைப்புகளில் இருந்து அயல் பணியாக செல்பவர்களே சிபிஐயில் புலனாய்வு அதிகாரிகளாக இருக்கிறார்கள்.  சிபிஐ பெரும்பான்மை வழக்குகளில் வெற்றி பெறுவதற்கான முக்கியமான காரணம், சிபிஐ புலனாய்வு செய்யும் ஒவ்வொரு வழக்கிலும், சிறு சிறு முன்னேற்றங்கள் கூட ஆவணங்களாக பதிவு செய்யப்படுகின்றன.    பெரும்பாலான புலனாய்வு நிறுவனங்களில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு இறுதி அறிக்கை அனுப்பப்பட்டதும் அது முடிக்கப்பட்ட வழக்காக கணக்கு வைக்கப்படும்.  ஆனால் சிபிஐயை பொறுத்தவரை, ஒரு வழக்கு பதிவு செய்யப்படுவது முதல், நீதிமன்றத்தில் இறுதித் தீர்ப்பு வரும் வரை, நிலுவையில் இருப்பதாகவே கருதப்படும்.  சிபிஐ அமைப்பை பொருத்தவரை, ஒவ்வொரு கட்டத்திலும் வழக்கின் முன்னேற்றம், வாராந்திர அறிக்கை மற்றும் மாதாந்திர அறிக்கைகளாக பதிவு செய்யப்படுகின்றன.

இது போன்ற நடைமுறைகள் இருந்தாலும், அமைப்பு சிறப்பாக செயல்படுவதற்கு அடிப்படையான தேவை, நல்ல தலைமை.    ஒரு நல்ல சிபிஐ இயக்குநரால், முக்கிய வழக்குகளை நேர்த்தியாக வழி நடத்தி, நீதிமன்ற விசாரணையின்போதும் உரிய அறிவுரைகளை வழங்கி, சரியாக மேற்பார்வை செய்ய முடியும்.  ஆனால் தலைமை சரியில்லாதபோது, அனைத்துமே அலங்கோலமாக முடியும்.  அது போல ஒரு அலங்கோலமான வழக்காகத்தான் சிபிஐ 2ஜி வழக்கை நடத்தியிருக்கிறது.

தனது தீர்ப்பில், நீதிபதி ஓபி.சைனி, சிபிஐ  மற்றும் அரசு வழக்கறிஞர் குறித்து இவ்வாறு குறிப்பிடுகிறார்.

“தொடக்கத்தில் அரசுத் தரப்பு மிகுந்த ஆர்வத்தோடு இந்த வழக்கை தொடங்கியது.  ஆனால் காலம் செல்லச் செல்ல சிபிஐயின் நடவடிக்கைகள் மந்த கதியை அடைந்து, சிபிஐக்கு என்ன வேண்டும் என்பதே புரியவில்லை.   இறுதிக் கட்டத்தில், அரசுத் தரப்பு வழக்கு நடத்துவது எந்த திசையை நோக்கி என்பதே புரியவில்லை.   இவ்வழக்கின் சாட்சியம் மற்றும் ஆவணங்களை பார்த்தாலே இவர்கள் வழக்கை நடத்திய லட்சணம் புரியும்.

அரசுத் தரப்பு வழக்கை எப்படி நடத்தியது என்பதற்கு சில உதாரணங்களை மட்டும் கூறலாம்.  

இவ்வழக்கு தொடர்பாக சிபிஐ பல்வேறு மனுக்களை தாக்கல் செய்தது.  வழக்கின் இறுதிக் கட்டத்தில் அந்த மனுக்களில் எந்த மூத்த அதிகாரியும் கையொப்பம் இடத் தயாராக இல்லை.  சிபிஐயில் பணியாற்றும் ஒரு கடைநிலை அதிகாரியே அதில் கையெழுத்திடுவார்.  ஏன் என்று கேட்டால், மூத்த வழக்கறிஞர் கையெழுத்திடுவார் என்று அவர் கூறுவார்.  மூத்த வழக்கறிஞரை கேட்டால், சிபிஐ அதிகாரிகள் கையெழுத்திடுவர் என்று கூறுவார்.   ஆனால் இறுதியில் சிபிஐயை சேர்ந்த ஒரு சாதாரண ஆய்வாளர்தான் கையெழுத்திடுவார்.  

சிபிஐயை சேர்ந்த எந்த மூத்த அதிகாரியோ, அல்லது மூத்த வழக்கறிஞரோ இந்த வழக்கில் எந்த பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை என்பதையே இது உணர்த்துகிறது.   

வழக்கில் இறுதி வாதங்கள் தொடங்கியதும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் எழுத்துபூர்வமான வாதங்களை தாக்கல் செய்கிறேன் என்று கூறினார்.  ஆனால் வாய்மொழியாகவே வாதம் செய்தார்.   பல மாதங்கள் வாதம் செய்தார்.    வாதங்கள் நிறையும் தருவாயில் எழுத்துபூர்வமான வாதங்களை எதிரித் தரப்பு தாக்கல் செய்த பிறகு தாக்கல் செய்வதாக கூறினார். 

அரசுத் தரப்புதான் முதலில் எழுத்துபூர்வமான வாதங்களை சமர்ப்பிக்க வேண்டும்.   அப்போதுதான் எதிரித் தரப்புக்கு வழக்கு என்ன என்பதே புரியும்.   ஆனால் இவர் தலைகீழாக நடந்து கொண்டார். 

எதிரித் தரப்பு இறுதி வாதங்களை தாக்கல் செய்த பிறகு, கடைசியாக எழுத்துபூர்வமான வாதங்களை தாக்கல் செய்தது அரசுத் தரப்பு.   இதனால், இதற்கு மறுப்பு அளிப்பதற்காக எதிரித் தரப்புக்கு மேலும் அவகாசம் தர வேண்டிய சூழலுக்கு இந்த நீதிமன்றம் ஆளாகியது.   

எழுத்துபூர்வ வாதங்களை தாக்கல் செய்த பிறகும், அதில் கையொப்பம் இட மறுத்து விட்டார்.   ஏன் என்று கேட்டால், எதிரித் தரப்பில் சிலர் கையொப்பம் போடாமல் மனு தாக்கல் செய்துள்ளனர் என்று பதில் கூறினார். மிகுந்த வற்புறுத்தலுக்கு பிறகும் அவர் கையெழுத்து போட மறுத்தார்.   இறுதியாக நீதிமன்ற அவமதிப்பு என்ற மிரட்டலுக்கு பிறகே அவர் கையெழுத்து போட்டார்.  

இவ்வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கை நடத்திய வழக்கறிஞர்கள் ஆளுக்கு ஒரு திசையில் சென்று கொண்டிருந்தனர்.   இன்னும் ஏராளமாக சொல்ல முடியும். ஆனால் அது இத்தீர்ப்பை நீண்டதாக ஆக்கும்.”   

இதுதான் அரசுத் தரப்பு மற்றும் சிபிஐ வழக்கை நடத்திய லட்சணம்.   இப்படி வழக்கை நடத்தினால் எந்த நீதிபதியால் வழக்கை முழுமையாக ஆராய்ந்து தண்டனை அளிக்க இயலும் ?

இவ்வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மாசற்ற மாமணிகள் என்று கட்டமைப்பற்கான முயற்சிகள் நடக்கும்.

ஆ.ராசா மீது ஊடகங்கள் குற்றம் சுமத்தியதற்கான முக்கிய காரணம், பார்ப்பன சதி என்று சித்தரிக்க முயன்றன திமுகவும் அதன் தொண்டர் அடிப்பொடி அமைப்புகளும்.   நாட்டை உலுக்கும் ஒரு பெரும் ஊழல் நடந்திருக்கையில், அந்த ஊழல் நடந்த அமைச்சகத்துக்கு அமைச்சராக இருந்தவரின் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தத்தான் செய்வார்கள்.    2ஜி வழக்கிலாவது, கோப்புகள், ஆதாரங்கள் என்று வழக்கு விசாரணையின்போது சில ஆதாரங்கள் சிக்கின.  ஆனால் 66 கோடி ரூபாய் போபர்ஸ் ஊழல் விவகாரத்தில், எந்த ஆதாரங்களும் இந்தியாவில் இல்லாத நிலையில், அந்த ஊழலை மட்டுமே அடிப்படையாக வைத்து திமுக தேசிய முன்னணி கூட்டணியின் சார்பில் ஒரு தேர்தலையே சந்திக்கவில்லையா ?

நக்கீரன் காமராஜ் ராசாவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்திருந்த கூட்டம் ஒன்று

ஆனால், ஊடகங்களுக்கு ஆ.ராசா, ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் என்பதால் அவரை குறி வைக்க வேண்டும் என்ற நோக்கம் இருந்ததாக ஒரு காலும் கருத முடியாது.   2ஜி ஊழலுக்கு முன்னதாக தனக்கு அமைச்சரவையில் இடம் பெறுவது வரை, பத்திரிக்கையாளர்களிடம் நெருக்கமாகவே இருந்தார் என்பதும், பர்கா தத்திடம் தனக்கு அமைச்சரவையில் இடம் பிடித்துக் கொடுக்க உதவுமாறு கோரினார் என்பதையும் நாம் ஊடகங்களில் பார்த்தோம்.

ராசா சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்தபோது, ஊடகங்கள் அவரை குறிவைத்துத் தாக்கினவா என்ன ?  நிச்சயம் இல்லை.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் பத்தரை மாற்றுத் தங்கங்கள் அல்ல என்பதை நாம் அறிவோம்.   கலைஞர் டிவிக்கு 214 கோடி ரூபாய் கொடுக்கப்பட்ட விவகாரத்தை சிபிஐ விசாரிப்பது தெரிந்ததும், அவசர அவசரமாக 200 கோடியை புரட்ட திமுக தலைவர் கருணாநிதி முயன்றதும், அதற்காக உளவுத் துறை தலைவராக இருந்த ஜாபர் சேட்டும், கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனும் பேசிய உரையாடலே இதற்கு சான்று.  இணைப்பு.

ஆனால் அதே நேரத்தில் நமது நாட்டின் நீதி பரிபாலன முறையின்படி, நீதிமன்றத்தில் குற்றம் சந்தேகத்திற்கு இடமற நிரூபிக்கப் பட்டாலே ஒழிய, அதன் பலன் குற்றவாளியையே சேர வேண்டும்.   இதனால் சில குற்றவாளிகள் தப்பிக்கவும் கூடும்.   அதற்காக, ஆதாரங்கள் இல்லாமல் ஒருவரையும் தண்டிக்க முடியாது.  கூடவும் கூடாது.

ஆருஷி தல்வார் கொலை வழக்கில், கொலை காரனை கண்டு பிடிக்க முடியவில்லை என்பதற்காக, அந்த வீட்டினுள் கொலை நடந்தபோது இருந்தார்கள் என்ற ஒரே காரணத்துக்காக அவர் பெற்றோரை தண்டிப்பது எத்தனை அயோக்கியத்தனமோ, அதே போன்ற அயோக்கியத்தனம்தான், மற்ற வழக்குகளில் (ஊழல் வழக்குகள் உட்பட) ஊகத்தின் அடிப்படையில் தண்டிப்பதும்.

அப்போதுதான் பத்திரிக்கை துறையில் காலடி எடுத்து வைத்திருந்த எனக்கு, இந்த 2ஜி ஊழல் பெரும் பாடத்தை கற்றுக் கொடுத்தது.  எப்படி செய்திகளை சேகரிப்பது, ஆதாரங்களை எப்படி கண்டறிவது, தகவல்களை ரகசியமாக பெறுவது என்று பல பாடங்களை கற்றுக் கொண்டேன்.    சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் ஆ.ராசா தங்கியிருந்தபோது, அவருக்காக மற்ற பத்திரிக்கையாளர்களோடு காத்திருந்தது, ஜேகத் கஸ்பர் வீட்டில் சோதனை நடந்தபோது, இரவு வரை, காத்திருந்து அவரை பேட்டியெடுத்தது,  நக்கீரன் காமராஜ் வீட்டில் சிபிஐ சோதனை செய்தபோது அவர் வீட்டுக்கு சென்றது, பெரம்பலூர் சென்று, ஆ.ராசாவின் சொந்த ஊரில் அவரை பற்றி செய்தி சேகரித்தது என்று பல அனுபவங்கள்.

2ஜி வழக்கில் அனைவரும் விடுதலை என்ற செய்தி கேட்டபோது, ஒரு விதமான வருத்தமான மனநிலையே ஏற்பட்டது.  ஆனால் சட்டபூர்வமாக நடைபெற்ற ஒரு வழக்கு விசாரணையின் முடிவில் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.

இந்த தீர்ப்புக்கு பிறகு ஏற்படப் போகும் அரசியல் அணி மாறுதல்கள்தான் மேலும் சுவராஸ்யத்தை தரக் கூடியவை.   இதன் பின் கனிமொழி எப்படி அரசியல் நடத்தப் போகிறார் என்பதும், ஸ்டாலின் இந்தத் தீர்ப்பை பயன்படுத்தி, பிஜேபி எதிர்ப்பு அரசியல் நடத்தப் போகிறாரா அல்லது இணக்கமாகப் போகப் போகிறாரா என்பதை வரப் போகும் நாட்கள் தெரிவிக்கும்.

நிச்சயமாக தமிழக அரசியலில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

பகிர்