ஆர்.கே.நகரில் யார் வெல்லப் போகிறார்கள் என்ற கேள்வி இன்று அனைவர் முன்பும் உள்ளது. தங்கள் தரப்பு வெற்றிபெறும் என்று அனைவரும் நம்பிக்கையுடன் தேர்தலைச் சந்தித்துள்ளனர்.
அதிமுக எளிதாக வெல்லும் என ஆரம்பத்தில் உற்சாகமாக இறங்கிய மதுசூதனன் தற்போது டிடிவி தினகரனின் வேகத்தால் பாதிக்கப்படுவார், அதிமுகவுக்கு விழ வேண்டிய வாக்குகளை டிடிவி தினகரன் கட்டாயம் பிரிப்பார் என்றே அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர்.
திமுக நிதானமாக செயல்பட்டாலும் திமுகவின் வாக்கு வங்கி மாற்றுக்கட்சிக்கு செல்லப் போவதில்லை, தினகரனின் எழுச்சியினால் பிரியும் வாக்குகள் திமுகவுக்கு சாதகமாக அமைய வாய்ப்பு உள்ளது என்றும் திமுக நிர்வாகிகள் புது உற்சாகத்துடன் வலம் வருகின்றனர்.
ஆனாலும் திமுகவின் வாக்கு வங்கிகளான இஸ்லாமியர்கள், பாஜக எதிர்ப்பாளர்கள் தினகரனை நம்புகின்றனர் என்ற கருத்து உருவாகி உள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை.
ஆர்.கே.நகர் வரலாற்றில் கடந்த தேர்தல்களை விட அதிக அளவில் பதிவான 77 சதவீத வாக்குப்பதிவும், பணப் பட்டுவாடாவும் கடந்த பத்து நாட்களாக தினகரனுக்கு ஆதரவாக தொகுதி உள்ளது என்று சொன்னவர்களை மாற்றி யோசிக்க வைத்துள்ளது.
கடந்த 2001-ம் ஆண்டு முதல் 4 பொதுத்தேர்தலிலும் அதிமுக வசமே இந்த தொகுதி உள்ளது, சராசரி 35 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வென்றுள்ள தொகுதி ஆர்.கே.நகர்.
திமுக முன்னதாக அதிமுகவை தோற்கடித்தது அதிமுக பலகீனமாக இருந்த 1989, 96 ஆண்டுகளில் மட்டுமே. ஆகவே திமுக தனது வாக்கு வங்கியை தக்கவைத்து அதற்கு மேல் வித்தியாசத்தையும் தாண்டினால் மட்டுமே ஆர்.கே.நகர் திமுக வசமாகும்.
டிடிவி தினகரனும் கணிசமான வாக்குகளைப் பெற வாய்ப்புள்ளது அதில் திமுகவின் வாக்குகளும் அடங்கும் என உளவுத்துறை ரிப்போர்ட் சொல்கிறது.
ஆர்கே நகர் முடிவுகள் குறித்த உளவுத் துறை அறிக்கை.
மொத்த வாக்குகள் 1,77,074
பிஜேபி, நாம் தமிழர், சுயேட்சை 12,074
டிடிவி தினகரன் 65,000 (36%)
திமுக 55,000 (31%)
அதிமுக 45,000 (26%)
(2000 முதல் 5000 வரை மாறுதலுக்குட்பட்டது)
From: Shankar A