2ஜி வழக்கில் தி.மு.க. எம்.பி. கனிமொழி, முன்னாள் மத்திய மந்திரி ராசா ஆகியோரை விடுதலை செய்து சி.பி.ஐ. நீதிபதி பரபரப்பு தீர்ப்பு அளித்தார். இது தி.மு.க.வினர் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. தீர்ப்புக்கு பின் கனிமொழி, ராசா ஆகியோர் இன்று சென்னை திரும்பினார்கள். அவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்க தி.மு.க. நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். காலையிலேயே ஏராளமான தொண்டர்கள் மீனம்பாக்கம் விமான நிலையம் வந்து குவிந்து இருந்தனர். ஆட்டம்-பாடலுடன் மேள தாளம் முழங்க வரவேற்க காத்திருந்தனர். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், துணை பொதுச்செயலாளர் துரை முருகன், முன்னாள் மத்திய மந்திரிகள் டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன் மற்றும் நிர்வாகிகள் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர். மு.க.ஸ்டாலின் பூங்கொத்து மற்றும் சால்வை அணிவித்தும் கட்டித்தழுவியும் வரவேற்றார்.
உள்நாட்டு விமான நிலைய வருகை பகுதி கார் பார்க்கிங் அருகே வரவேற்பு மேடை அமைக்கப்பட்டு இருந்தது. மேடைக்கு கனிமொழியும், ராசாவும் தாரை தப்பட்டை, கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, நாதசுர நையாண்டி மேளம் முழங்க தொண்டர்கள் வரவேற்று அழைத்து சென்றனர். வழிநெடுக இருவர் மீதும் பூக்களை தூவியவாறு வாழ்த்து கோ‌ஷம் எழுப்பினார்கள். தொண்டர்கள் கைகளில் தி.மு.க. கொடியையும், அநீதி வீழும் அறம் வெல்லும் என்ற கருணாநிதியின் வாசகங்களுடன் கூடிய பதாகைகளை ஏந்தியிருந்தனர். அதில் கருணாநிதியின் காலில் விழுந்து ராசா வணங்கும் படம் ஒட்டப்பட்டு இருந்தது. விமான நிலையத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் ஏராளமாக திரண்டு இருந்தனர். இதனால் போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்த சிரமப்பட்டனர் ஆனாலும் குளோசப்பில் ஆடிய கரகாட்ட பெண்களை ரசித்தபடி நின்றிருந்தனர்.. வரவேற்பு முடிந்ததும் கனிமொழி, ராசா இருவரும் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்து தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அங்கு வந்திருந்த தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகனையும் இருவரும் சந்தித்து வாழ்த்து பெற்றனர். மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகளும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக வீட்டு வாசல் முன்பு தொண்டர்கள் மீண்டும் சென்னை சங்கமம் குழுவினரின் மேள-தாளத்துடன் வரவேற்பு அளித்தனர்.
தீர்ப்புக்கு முன்பு, ஆ.ராசா மீது ஊடகங்கள் குற்றம் சுமத்தியதற்கான முக்கிய காரணம், பார்ப்பன சதி என்று சித்தரிக்க முயன்றன திமுகவும் அதன் தொண்டர் அடிப்பொடி அமைப்புகளும். நாட்டை உலுக்கும் ஒரு பெரும் ஊழல் நடந்திருக்கையில், அந்த ஊழல் நடந்த அமைச்சகத்துக்கு அமைச்சராக இருந்தவரின் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தத்தான் செய்வார்கள். 2ஜி வழக்கிலாவது, கோப்புகள், ஆதாரங்கள் என்று வழக்கு விசாரணையின்போது சில ஆதாரங்கள் சிக்கின.  ஆனால் 66 கோடி ரூபாய் போபர்ஸ் ஊழல் விவகாரத்தில், எந்த ஆதாரங்களும் இந்தியாவில் இல்லாத நிலையில், அந்த ஊழலை மட்டுமே அடிப்படையாக வைத்து திமுக தேசிய முன்னணி கூட்டணியின் சார்பில் ஒரு தேர்தலையே சந்தித்தது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் பத்தரை மாற்றுத் தங்கங்கள் அல்ல என்பதை நாம் அறிவோம். கலைஞர் டிவிக்கு 214 கோடி ரூபாய் கொடுக்கப்பட்ட விவகாரத்தை சிபிஐ விசாரிப்பது தெரிந்ததும், அவசர அவசரமாக 200 கோடியை புரட்ட திமுக தலைவர் கருணாநிதி முயன்றதும், அதற்காக உளவுத் துறை தலைவராக இருந்த ஜாபர் சேட்டும், கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனும் பேசிய உரையாடலே இதற்கு சான்று. விளம்பரம் பண்றதுக்கு பணமில்லை. பேங்குல 50 கோடி ரூபாய் கடன் வாங்கி, கலைஞர் டிவிக்கு 8 வருஷத்துக்கு விளம்பர ஒப்பந்தம் போட்ட ஏதாவது ஒரு நிறுவனத்தை பாத்திருக்கிறீர்களா, அதுவும் கலைஞர் டிவி நஷ்டத்துல போயிக்கிட்டு இருக்கும்போது. விஜய் மல்லையாவோட யுனைட்டட் ஸ்பிரிட்ஸ்தான் அந்த நிறுவனம். கலைஞர் டிவிக்கு ஷாகித் பல்வாவோட சினியுக் பிலிம்ஸ் 200 கோடியை முதல்ல கடனா கொடுத்து விடுவார்களாம். 21.10.2009 அன்று சிபிஐ எப்ஐஆர் பதிவு செய்து முடித்த பிறகு, 30.12.2009 அன்று, அந்த கடனுக்கான ஒப்பந்தமே போடப்பட்டதாம்.
எந்த விதமான அடமானமோ, சொத்தோ இல்லாமல், வேறு யாருக்காவது ஷாகித் பல்வா 200 கோடி கொடுத்திருக்கிறாரா? 2ஜி வழக்கில் அனைவரும் விடுதலை என்ற செய்தி கேட்டபோது, ஒரு விதமான வருத்தமான மனநிலையே ஏற்பட்டது. ஆனால் சட்டபூர்வமாக நடைபெற்ற ஒரு வழக்கு விசாரணையின் முடிவில் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். இந்த தீர்ப்புக்கு பிறகு ஏற்படப் போகும் அரசியல் அணி மாறுதல்கள்தான் மேலும் சுவராஸ்யத்தை தரக் கூடியவை.   இதன் பின் கனிமொழி எப்படி அரசியல் நடத்தப் போகிறார் என்பதும், ஸ்டாலின் இந்தத் தீர்ப்பை பயன்படுத்தி, பிஜேபி எதிர்ப்பு அரசியல் நடத்தப் போகிறாரா அல்லது இணக்கமாகப் போகப் போகிறாரா என்பதை வரப் போகும் நாட்கள் தெரிவிக்கும். நிச்சயமாக தமிழக அரசியலில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இவ்வாறு உங்கள் நியூஸ் கப்சா நிருபர் கேள்வி எழுப்பினார்.
பகிர்