ஜெயலலிதா மறைவால் காலியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு நடத்தப்பட்ட இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் அதிகளவு வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வந்தார். வாக்கு எண்ணிக்கை முடிவில் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் டிடிவி தினகரன் அமோக வெற்றி பெற்றார். ஜெயலலிதா மறைவிற்கு அடுத்து நடந்த இந்த தேர்தல் ஈபிஎஸ் – ஒபிஎஸ் ஒருங்கிணைந்த அதிமுக மற்றும் எதிர்க்கட்சியான திமுகவிற்கு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்பட்டது. முடிவில் திமுகவின் அதிகமான வாக்குகள் டிடிவி தினகரன் வசம் சென்றதாக தெரிகிறது.
ஜெயலலிதா இல்லாத நிலையில் அரசின் மீதான விமர்சனத்திற்கு இடையே களமிறங்கிய திமுக வெற்றியை தனதாக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகதரப்பில் இருந்தது. இப்போது ஆளும் அதிமுக மற்றும் எதிர்க்கட்சியான திமுகவிற்கு பெரும் அதிர்ச்சியை அளிக்கும் விதமாக டிடிவி தினகரன் கடந்த தேர்தலில் ஜெயலலிதா பெற்ற வாக்கு வித்தியாசத்தைவிடவும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளார். காலையில் டிடிவி தினகரன் முன்னிலை பெற்ற போது அதிமுக மற்றும் திமுக அலுவலகங்கள் பெரிதும் வெறிச்சோடி காணப்பட்டது.
 ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் 89,013 வாக்குகளை பெற்றார். இரண்டாவது இடம் பிடித்த அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 48,306 வாக்குகள் பெற்று டெபாசிட்டை தக்க வைத்துக்கொண்டார். திமுக வேட்பாளர் மருதுகணேஷ் 24,581 வாக்குகளை பெற்று டெபாசிட் இழந்தார். 3,802 வாக்குகளை பெற்ற நாம் தமிழர் கட்சியை சேர்ந்த கலைக்கோட்டுதயம், 1,368 வாக்குகளை பெற்ற பாரதீய ஜனதா வேட்பாளர் கரு. நாகராஜன் உள்பட 57 வேட்பாளர்கள் தேர்தலில் டெப்பாசிட்டை இழந்தனர். தேர்தலில் பாரதீய ஜனதாவிற்கு விழுந்த வாக்குகளைவிடவும் அதிகமான வாக்குகள் நோட்டாவிற்கு விழுந்து உள்ளது. நோட்டாவிற்கு  2,348 வாக்குகள் கிடைத்து உள்ளது.
தினகரனின் வெற்றியை அடுத்து எடப்பாடி ஓபிஎஸ் அணியில் இருந்து நான்கு அமைசர்கள் தினகரனை சந்திக்க இருப்பதாக தெரிகிறது.
பகிர்