ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்வி குறித்து அதிமுக உயர்மட்டக் குழு நிர்வாகிகளுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் ஆலோசனை நடத்தினர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்ட பலர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் ஓபிஎஸ், “ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தில்லுமுல்லு நடந்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளோம். தினகரன் ஒரு மாயமான். தனக்கு இன்னொரு முகம் இருப்பதாக ஏற்கனவே எங்களிடம் கூறியிருக்கிறார். தினகரன் அரசியலுக்கு வருவதற்கு 18 வருடங்கள் முன்பே அரசியலுக்கு வந்தவன் நான். எங்கள் பக்கம் இருப்பவர்கள் புடம்போட்ட தங்கங்கள். நல்ல நோக்கத்திற்காக இணைந்த அதிமுகவில் உட்கட்சி பூசல் எதுவும் இல்லை. அதிமுகவிலிருந்து ஒரு செங்கல்லைக் கூட யாராலும் எடுக்க முடியாது. ஜெயலலிதாவின் திட்டங்கள் ஆர்.கே.நகர் உள்பட அனைத்து தொகுதிகளிலும் நிறைவேற்றப்படும். ஜெயலலிதாவின் வாரிசு என யாருமில்லை. எனவே தினகரனை வாரிசு என கூறமுடியாது. தினகரனை ஜெயலலிதாவின் வாரிசு என திருமாவளவன் கூறியது ஏன் என தெரியவில்லை. வாரிசு அரசியலை எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கொண்டுவரவில்லை. நோய் தொற்று ஏற்படும் என கூறியதால்தான் அப்போலோவில் ஜெயலலிதாவை அமைச்சர்கள் யாரும் சந்திக்கவில்லை” என தெரிவித்தார்.