சென்னை ஆர்.கே.நகர்இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரன் அமோக வெற்றி வெற்றிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால் காலியானஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாகக் கூறி வாக்குப்பதிவுக்கு 2 நாள்களுக்கு முன்பாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கடந்த 21-ம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட தினகரன் அமோக வெற்றி பெற்றுள்ளார். ஆளும் அதிமுக 2-வது இடத்துக்கும், பிரதான எதிர்க்கட்சியான திமுக 3-வது இடத்துக்கும், மத்தியில் ஆளும் கட்சியான பாஜக நோட்டாவைவிட குறைவான வாக்குகளைப் பெற்று பரிதாபகரமான நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளன.

3-வது இடத்தில் திமுககடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் ஆர்.கே. நகரில் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சிம்லா முத்துச் சோழன் 57 ஆயிரத்து 673 வாக்குகளுடன் 2-வது இடத்தைப் பிடித்தார். ஆனால் ஜெயலலிதா மறைந்து ஓராண்டுக்குப் பிறகு நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் தக்க வைத்த வாக்கு வங்கியை திமுக இழந்துள்ளது.

தொழிலாளர்களும், தலித்களும் நிறைந்த ஆர்.கே.நகரில் இடதுசாரி கட்சிகளுக்கும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் கணிசமான ஆதரவு உள்ளது. இக்கட்சிகளின் ஆதரவு இருந்தும் அந்த வாக்குகள் திமுகவுக்கு கிடைக்கவில்லை. அதுபோல இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளின் ஆதரவு இருந்தும் முஸ்லிம்களின் வாக்குகள் திமுகவுக்கு வரவில்லை.

கடந்த நவம்பர் 6-ம் தேதி சென்னை வந்த பிரதமர் மோடி, திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தார். அதுவரை பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்த திமுக, அதன் பிறகு தனது வேகத்தை குறைத்துக் கொண்டது. இதனால் பாஜகவுடன் திமுகவும் நெருங்குகிறது என்ற விமர்சனம் எழுந்தது.

அதே நேரத்தில் தினகரன் பாஜகவை கடுமையாக விமர்சித்தார். இதனால் ஆர்.கே.நகரில் 10 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ள முஸ்லிம்களின் வாக்குகள் தினகரனுக்கு சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. வாக்குப் பதிவு நாளில் வெளியான 2ஜி அலைக்கற்றை வழக்கு தீர்ப்பு திமுகவுக்கு சாதமாக அமைந்தது. இதன் பின்னணியில் பாஜக இருப்பதாக வெளிப்படையாக வைக்கப்பட்ட விமர்சனமும் முஸ்லிம்களை திமுகவுக்கு எதிராக வாக்களிக்க வைத்திருக்கலாம் என்கின்றனர்.

தோல்வியடைந்த ஆளும்கட்சி. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டாலும் அக்கட்சியின் பி அணியாகவே அதிமுக அரசு விமர்சிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு சிக்கல்களையும் தாண்டி முதல்வர் பழனிசாமி அரசு நீடிப்பதற்கு மத்திய பாஜக அரசின் ஆதரவே காரணம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இதனால் பாஜகவுக்கு எதிரான மனநிலை கொண்ட சிறுபான்மையினரின் வாக்குகள் ஒட்டுமொத்தமாக தினகரனுக்குச் சென்றுள்ளது.

முதல்வர் பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்த பிறகு எனது ஸ்லீப்பர் செல்கள் அவர்களிடம் இருப்பதாக தினகரன் தொடர்ந்து சொல்லி வந்தார். கடந்த ஏப்ரலில் இடைத்தேர்தலில் தினகரனுக்காக தேர்தல் பணியாற்றிய அமைச்சர்கள்தான் இந்த முறை மதுசூதனுக்காக வேலை செய்தனர். எனவே, அவர்கள் ஸ்லீப்பர் செல்லாக இருந்து உள்ளடி வேலை செய்தார்களா? பணப்பட்டுவாடா செய்ய இந்த ஸ்லீப்பர் செல்கள் தினகரனுக்கு உதவி செய்ததா? என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன. மதுசூதனனுக்கு எதிராக அமைச்சர் ஜெயக்குமார் உள்ளடி வேலைகள் செய்து வருவதாக ஆர்.கே. நகரில் வெளிப்படையாகவே பேச்சுகள் எழுந்தன. இனி அடுத்தடுத்து நடக்கும் மாற்றங்கள் இதனை உறுதிப்படுத்தலாம்.

பாஜகவுடனும், பிரதமர் மோடியுடனும் நெருக்கம் காட்டினாலும் நீட் தேர்வு, ஜிஎஸ்டி என பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை முதல்வர் எடுத்தார். ஆனால், முதல்வரைப் போல ஆளுநர் செயல்படும் அளவுக்கு மத்திய அரசிடம் கட்சியையும், கட்சியையும் அவர் அடகு வைத்துவிட்டதாக கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதுவும் அதிமுகவின் தோல்விக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

கைவிட்ட மீனவ நண்பன்எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கியது முதல் மீனவர்கள் அக்கட்சிக்கே வாக்களித்து வருகின்றனர். ‘மீனவ நண்பன்’, ‘படகோட்டி’ போன்ற படங்களில் மீனவராக எம்ஜிஆர் நடித்தது மீனவர்களிடம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனால், எம்ஜிஆரின் இரட்டை இலை சின்னம் இருந்தும் மீனவர்கள் நிறைந்த ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக தோல்வி அடைந்துள்ளது.

நவம்பர் இறுதியில் ஏற்பட்ட ஒக்கி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் பேரழிவைச் சந்தித்தது. கடலில் மீன் பிடிக்கச் சென்ற ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்களைக் காணவில்லை. அவர்களை மீட்கக்கோரி மீனவர்கள் பெரும் போராட்டம் நடத்தினர். மீனவர்கள் மட்டுமல்லாது கிறிஸ்தவர்களும் இதற்காக மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து தொடர் போராட்டங்களை நடத்தினர். இதன் விளைவாக மீனவர்கள், கிறிஸ்தவர்களின் வாக்குகளை அதிமுக இழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சவால்களை வென்ற தினகரன் கடந்த ஏப்ரலில் தொப்பி சின்னத்தில் போட்டியிட்ட தினகரனுக்கு இந்த முறை அது கிடைக்கவில்லை. கடந்த 7-ம் தேதிதான் தினகரனுக்கு குக்கர் சின்னம் கிடைத்தது. 14 நாள்களில் குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டுச் சென்று மகத்தான வெற்றி பெற்றுள்ளார்.

ஆனால், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனேயே எதைப்பற்றியும் கவலைப்படாமல் வேண்டியவர்களுக்கு வேண்டியதைக் கொடுத்துவிட்டதாகவும், தேர்தல் கெடுபிடிகள் அமலுக்கு வரும் முன்பே தினகரன் ஆதரவாளர்கள் எல்லாவற்றையும் முடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

வாக்குப் பதிவுக்கு முந்தைய நாளில் அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை தினகரன் ஆதரவாளர் பி.வெற்றிவேல் வெளியிட்டார். இதுவும் தினகரனுக்கு ஓரளவு கை கொடுத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இடதுசாரி, முஸ்லிம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் தவிர காங்கிரஸ், மதிமுக ஆகிய கட்சிகளின் ஆதரவு இருந்தும் திமுக மோசமான தோல்வியைத் தழுவியுள்ளது. இதனால் கூட்டணி கட்சிகளின் வாக்கு வங்கி என்ன ஆனது என்ற கேள்வி எழுகிறது. இதுகுறித்து கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒருவரிடம் கேட்டபோது, “திமுக கூட்டணியில் இருந்தாலும், காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், விசிக, முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் பாஜகவையே கடுமையாக விமர்சித்தன. ஆனால், பாஜகவை விமர்சிப்பதில் திமுக மென்மையானப் போக்கை கடைப்பிடித்தது. ஆனால், தினகரன் மதவாத கட்சி என பாஜகவை கடுமையாக விமர்சித்தார். இதனால் தலித், சிறுபான்மையினர் வாக்குகள் தினகரனுக்குச் சென்றிருக்கலாம்” என்றார்.

பரிதாப நிலையில் பாஜக கடந்த ஏப்ரலில் ஆர்.கே.நகரில் பாஜக சார்பில் இசையமைப்பாளர் கங்கைஅமரன் போட்டியிட்டார். ஆனால், இந்த முறை அவர் போட்டியிட மறுத்துவிட்டார். இதனால் கடைசி நேரத்தில் சரத்குமார் கட்சியில் இருந்து வந்த கரு.நாகராஜன் வேட்பாளராக்கப்பட்டார். வேட்பாளரையே முடிவு செய்ய முடியாமல் தடுமாறிய பாஜகவால், வாக்காளர்களைக் கவர முடியவில்லை. இதனால் நாம் தமிழர் கட்சி, நோட்டாவை விட குறைவான வாக்குகளைப் பெற்று பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்பட்டது. கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் பெற்ற 2,928 வாக்குகளைக் கூட பாஜக பெறவில்லை.

அதிமுக தலைமை மாறுமா?

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் அடுத்தடுத்து அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் ஆர்.கே.நகரில் தினகரன் பெற்றுள்ள வெற்றியால் தமிழக அரசியல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது. இனி அரசியலில் பரபரப்புக்குப் பஞ்சமிருக்காது. அதிமுக-வைத் தொடங்கிய எம்.ஜி.ஆரின் நினைவு நாளில் அக்கட்சிக்கு மிகப்பெரிய அடி விழுந்துள்ளது. இதனால் கட்சித் தலைமை மாறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஒரு வேளை அதிமுக சொல்வது போல திமுக-டிடிவியின் சதி தான் ஆர் கே நகர் வெற்றி என்றால் ,
ஆட்சி கவிழும் என்பதற்காக திமுக விட்டு கொடுத்தது என்றால், திமுக தப்பு கணக்கு போட்டுவிட்டது
என்று தான் சொல்ல வேண்டும் . ஸ்டாலினுக்கு எதிர் அரசியல் செய்பவர்கள் எடப்பாடியாகவோ ஓபிஎஸ்ஸாகவோ இருந்தால் அது திமுகவுக்கு பெரிய சவாலாக இருக்காது 
ஆனால் ஆட்சி கவிழ்ப்புக்காக டிடிவிக்கு இவர்கள் ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்றால் ,
ஒன்று இவர்கள் டிடிவியை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள். இன்னொன்று ஒரு பலமான போட்டியாளரை தெரிந்தோ தெரியாமாலோ உருவாக்குகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
இந்த இடைத்தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் அரசியல் எதிர்காலம் உள்ளவர் டிடிவி தான் என்பதை மறுக்க முடியாது. நாளைக்கே பொது தேர்தல் வந்தால் டிடிவிக்கு அதிமுக தொண்டர்களின் ஆதரவு பெருமளவு இருக்கும் .இதை கண்டு அவருடன் ஈபிஎஸ்சும் ஓபிஎஸ்சும் ஒன்று சேர்ந்தாலும் கூட ஆச்சிரியப்படுவதற்கில்லை .

பணநாயகம் வென்றுவிட்டது என்று கதறும் மற்ற கட்சிகள் , வர கூடிய பொது தேர்தலில் டிடிவிக்கு ஆதரவு கரம் நீட்டலாம்… நீட்டும்.
எது எப்படியோ… அடுத்து வர பொது தேர்தலில் ஸ்டாலின் சந்திக்க கூடிய போட்டியாளராக டிடிவி தான் இருப்பார் எனும் போது அவருக்கு இப்போது ஏன் திமுக விட்டு தர வேண்டும் ?

ஜெயலலிதா இறந்த பிறகு ,அதிமுக பிளவுப்பட்ட பிறகு தமிழகம் சந்திக்க கூடிய முதல் தேர்தல் இது.
இதில் திமுக வெற்றி வாகை தான் சூடியிக்க வேண்டும் என்றில்லை… குறைந்தபட்சம் டெபாசிட்டை பெறவாவது முயற்சி செய்திருக்கலாம் இல்லியா ?!
இன்னும் எத்தன நாளைக்கு தான் தேர்தல் ஆணையத்தை பழி சொல்ல போகிறது திமுக !
இந்த இடை தேர்தலுக்கு பிறகு சூட்டோடு சூடாக டிடிவி தமிழகம் முழுவதும் சுற்றுபயணம் மேற்கொள்ள
திட்டமிடலாம்.. பொது தேர்தலுக்கு வெகு நாட்கள் ஆகி விட போவதில்லை எனவே அதற்குள் ஆர் கே நகரில் மக்களிடம் பெற்ற செல்வாக்கை போல (பணத்தை தாண்டி ) ஒவ்வொரு தொகுதியிலும் பெற்றால்
ஜெயலலிதாவின் மக்கள் செல்வாக்கை டிடிவி பிடிக்க வாய்ப்புண்டு .

தான் (ஸ்டாலின்) அரியணையில் ஏறும் முன்பே தன் எதிரிக்கு வழிவிடுவது என்னமாதிரியான அரசியலோ
கருணாநிதியிடம் இவ்வளவு நாட்கள் இருந்து இதை தானா கற்றாரா ஸ்டாலின் ?

பிளவுப்பட்ட அதிமுகவில் ஜெயாவுடன் அதிக அளவு தொடர்பு இல்லாத டிடிவி இந்த அளவு இறங்கி அடிக்கும் போது

ஒன்றுபட்டுள்ள திமுகவில் அரசியல் சாணாக்கியர் என்று சொல்ல கூடிய கருணாநிதியின் மகன் எந்தளவு அரசியல் செய்ய வேண்டும் ? நீங்கள் உணரவில்லையா? உங்களுக்கு யாரும் உணர்த்தவில்லையா ? ஜெயா மறைந்தால் அதிமுக இருக்காது என்றார்கள் போகிற போக்கை பார்த்தால் அந்நிலை திமுகவுக்கு வரும் போல ,,

அதற்குள் சுதாரிப்பரா ஸ்டாலின் பொறுத்திருந்து பார்போம்!

Credits: The Hindu, & சரண்யா மகிழ்மதி

பகிர்