தினகரன், ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் கட்சியும் ஆட்சியும் இயங்க வேண்டும் என, டிடிவி தினகரனுக்கு சூலூர் அதிமுக எம்எல்ஏ கனகராஜ் வாழ்த்து கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் அதிரடி கருத்துக்களால் பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் சூலூர் எம்.எல்.ஏ கனகராஜ். யாரைப்பற்றியும் கவலைப்படாமல் தனது கருத்தை எடுத்து வைப்பார். அதனால் அது பரபரப்பாகிவிடும்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஓபிஎஸ் இபிஎஸ் அணிகள் இரண்டாக பிரிந்து சண்டையிட்ட போது திடீரென “கட்சி இப்போது யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பது புரியாத புதிராக உள்ளது. அதிமுகவில் பதவிச் சண்டைதான் நடக்கிறது. எனவே, ஆட்சியைக் கலைத்துவிட்டு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும். ” என்று அதிரடியாக அதிமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என்று பேட்டி அளித்தார்.

பின்னர் ஒரு நாள் தனது தொகுதியின் கோரிக்கை நிறைவேறாவிட்டால் அணி மாறுவேன் என்று அதிரடியாக அறிவித்தார். பின்னர் எடப்பாடி தரப்பினர் அழைத்து சமாதானப்படுத்தினர். முதன் முதலில் அதிமுக ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் இணைய வேண்டும் என பகீரங்கமாக பேட்டி அளித்தவரும் இவர்தான். ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் இணைந்து பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும் என்று பேட்டி அளித்திருந்தார்.

அது பரபரப்பாகவே ஏன் அப்படி சொன்னேன் என்று விளக்கமும் அளித்தார்.

ஜெயலலிதாவைப் போல் மத்திய அரசை எதிர்கொள்ளவும் எதிர்த்து துணிச்சலாக கேள்வி கேட்கவும் ஆள் இல்லை. அப்படியிருக்கும் சூழலில் மத்திய அரசுடன் இணக்கமான சூழலை ஏற்படுத்திக் கொண்டால் மட்டுமே மாநில நலனுக்கான திட்டங்களைப் பெற முடியும். அதனால் தான் அப்படி சொன்னேன் என்று அனைவரையும் அதிர வைத்தார்.

பகிர்