ஆர் கே நகர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற டிடிவி தினகரன் சபாநாயகர் தனபாலின் அறையில் எம்எல்ஏவாக பதவி ஏற்றுக் கொண்டார். நடைபெற்று முடிந்த ஆர் கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட தினகரன் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். எப்போது தான் பதவிபிரமானம் செய்து கொள்ளலாம் என்று குடும்ப ஜோதிடரிடம் டிடிவி தினகரன் இரண்டு தினங்களுக்கு முன் கேட்ட போது இன்று வைகுண்ட ஏகாதசி என்றும் இன்று பிற்பகல் பதவி ஏற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார். அதன்படி இன்று மதியம் தனது ஆதரவாளர்களுடன் சபாநாயகர் தனபாலின் அறைக்கு சென்ற டிடிவி தினகரன் தேர்தல் அதிகாரி வழங்கிய வெற்றி சான்றிதழை கொடுத்து முறைப்படி எம்எல்ஏ வாக பதவி ஏற்றுக்கொண்டார். பதவி ஏற்புக்கு முன்னர் சபாநாகர் தனபாலும் டிடிவி தினகரனும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது தனது அணியை சேர்ந்த எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது குறித்து பேசியுள்ளனர். பின்னர் தங்கள் அணியினரை அதிமுக பதவிகளில் இருந்து ஓபிஎஸ் இபிஎஸ் இருவரும் விலக்கி வருவது தனபாலிடம் எப்படி அவர்கள் விலக்கலாம் என்று கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரம் தொடர்ந்த வாக்குவாதம் பின்னர் நிறைவு பெற்றுள்ளது. இறுதியில் தனபால் ஒபிஎஸ் இபிஎஸ் தரப்பினரிடையே இது குறித்து பேசுவதாக டிடிவி தினகரனிடம் கூறியுள்ளதாக தெரிகிறது.

ஜனவரி இறுதிக்குள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் நீக்கப்பட்டது செல்லாது என்று தீர்ப்பு வரும். பிப்ரவரி அல்லது மார்ச்சில் பட்ஜெட் கூட்டத்தொடரின்போது ஒரு முடிவு வரும். ஆகவே அதிக நாட்கள் இவர்கள் நீடிக்க முடியாது என்று டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது:

ஆர்.கே.நகர் மக்கள் மாபெரும் நல்ல தீர்ப்பை வழங்கிவுள்ளனர். நான் தேர்தலில் வாக்கு சேகரித்தபோது இந்த தொகுதி ஜெயலலிதாவின் தொகுதி அவர் விட்டுச்சென்ற பணியை தொடர எனக்கு வாய்ப்பு அளியுங்கள் என்றே கேட்டேன். தமிழகத்தில் இன்று நடைபெறுகின்ற மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர ஏழரை கோடி மக்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற தேர்தல் என்று தெரிவித்தேன்.

ஆர்.கே.நகர் மக்கள் ஜெயலலிதா, எம்ஜிஆருக்கு ஆதரவான மக்கள். அவர்கள் வழியிலே சசிகலா தலைமையில் இயங்கிக் கொண்டிருக்கிற ஒன்றரைகோடி தொண்டர்கள் கொண்ட நங்கள்தான் உண்மையான அதிமுக என்பது நிரூபணம் ஆகியுள்ளது. வெறும் சின்னமும் கட்சியின் பெயரும் இருந்தால் போதாது.

சின்னத்திற்கு ரத்தமும் சதையுமாக இருக்கின்ற தொண்டர்கள் யாரிடம் இருக்கின்றார்களோ அவர்கள்தான் உண்மையான அதிமுக என்பதை ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் நிரூபித்துள்ளனர். இன்றைக்கு ஆளும் ஆட்சியாளர்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டும். வெறும் ஆர்.கே.நகர் தேர்தல்தானே என நினைக்காதீர். நீங்கள் சுய பரிசோதனை செய்து பார்த்தால் உங்கள் துரோகத்திற்கு விடை கிடைத்துள்ளது என்பது புரியும். ஏற்றிய ஏணியை எட்டி உதைத்தீர்கள்.

நான்கைந்து பேரின் தவறான எண்ணத்தினால் இன்றைக்கு மாபெரும் இயக்கம் இத்தனை சோதனைகளை சந்தித்து வருகிறது. யாருக்கோ நீங்கள் கைகட்டி சேவகம் செய்து வருவதனால்தான் இத்தகைய தோல்வி கிடைத்துள்ளது. ஐந்தாறு பேரின் சுய நலத்தினால் அங்குள்ள சிலர் உண்மையான அதிமுக யார் பக்கம் என்று தெரிந்திருந்தாலும் பதவிக்காக அங்கிருப்பதை மக்கள் அறிவர்.

ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட கட்சி எங்கள் பக்கம் தான் உள்ளது என்பதை உணர்ந்து நல்ல முடிவை எடுக்கப் பாருங்கள். கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தியவர்களே கட்சியில் உள்ளவர்களை நீக்குகிறார்கள்.

என்னை ஆதரிப்பவர்களை கண்டுபிடித்து நீக்குவதென்றால் ஐந்தாறு பேரை தவிர கட்சியில் உள்ள ஒன்றரை கோடிப் பேரையும் நீங்கள் நீக்க வேண்டி இருக்கும். இதைப்பார்த்து மக்கள் கைகொட்டி சிரிக்கிறார்கள். பதவிக்கு ஏற்றப்படி நடந்துக்கொள்ளுங்கள்.

இல்லாவிட்டால் மக்களே உங்களை ஒதுக்கிவிடுவார்கள். ஐந்தாறு பேர் யார் என்று அனைவருக்கும் தெரியும். அந்த சுயநலவாதிகள் யார் என்று மக்களுக்கும் தெரியும். வடக்கில் இருப்பவர்கள் ஆதரவு இருக்கிறது. சின்னத்தை கொடுத்துள்ளார்கள் என்று நினைக்கிறார்கள்.

தலைமைக் கழகத்தில் இருப்பதால் மட்டும் நீங்கள் கட்சியாகி விடமாட்டீர்கள். அந்த உயிரோட்டமான தொண்டர்கள் அங்கில்லை. துரோகிகளும் பயனாளிகள் மட்டுமே அங்குள்ளனர். துரோகிகள் என்று உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டுவிட்டது. எங்களை நாடி வருபவர்களை நீங்கள் எவ்வளவு நாட்கள் கட்டிப்போட முடியும்.

சட்டப்பேரவை நடக்கும்போது ஸ்லீப்பர்கள் செல்கள் எழுந்து அவர்கள் வேலையைச் செய்வார்கள். ஜனவரி இறுதிக்குள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் நீக்கப்பட்டது செல்லாது என்று தீர்ப்பு வரும். பிப்ரவரி அல்லது மார்ச்சில் பட்ஜெட் கூட்டத்தொடரின்போது ஒரு முடிவு வரும். ஆகவே அதிக நாட்கள் இவர்கள் நீடிக்க முடியாது.

அப்படி நீடிக்க வேண்டுமானால் இவர்கள் வழிவிட்டால் மற்றவர்கள் எங்களோடு வருவார்கள். எங்களுக்கு ஆட்சியை தக்க வைப்பது எப்படி என்று தெரியும்.

இதை ஜெயித்துவிட்டேன் என்ற ஆணவத்தினால் சொல்லவில்லை. ஆட்சி மாற்றம் செய்ய வாக்களியுங்கள் என்று தான் வாக்கு சேகரித்தேன். அவர்கள் பெருவாரியாக வாக்களித்தார்கள்.

விஷால் முதியோர் உதவித்தொகை பற்றி என்னிடம் பேசினார். ஆர்.கே.நகர் மட்டுமல்ல தமிழகம் முழுதும் இந்த நிலை உள்ளது நீங்கள் முன்னெடுங்கள் நாங்கள் துணை நிற்கிறோம் என்று கூறியுள்ளோம்.

சட்டப்பேரவையில் நான் என்ன கத்திச் சண்டையும், கம்புச் சண்டையுமா போடப்போகிறேன். இல்லை தீவிரவாதிகளிடம் சண்டை போடப் போகிறேனா? எல்லோரும் என்னிடம் இருந்து எனக்காக தொப்பிச்சின்னத்தில் வாக்கு கேட்டவர்கள் தானே. ஆகவே எப்படி செயல்படப்போகிறேன் என்று பார்க்கத்தானே போகிறீர்கள்.

அந்த ஐந்தாறு பேருக்கு சொல்கிறேன் உங்கள் பாதை முடிவுக்கு வந்துவிட்டது. இனியாவது திருந்துங்கள். இல்லாவிட்டல் மக்கள் திருத்துவார்கள். திருந்தாவிட்டால் வருங்காலத்தில் துரோகிகள் என்று சின்னம் பொறிக்கும் போது உங்கள் ஐந்தாறு பேர் படத்தைத்தான் போடும். காலம் நெருங்கி விட்டது; ஜெயலலிதா ஆட்சி தொடர வழி கொடுத்து ஒதுங்குங்கள்.

இவ்வாறு டிடிவி தினகரன் பேசினார்

பகிர்