சட்டப்பேரவை கூட்டம் தொடங்கவுள்ள நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ஜனவரி 3-ம் தேதி சென்னையில் நடக்கிறது.

தமிழக சட்டப்பேரவையின் 2018-ம் ஆண்டுக்கான முதல் கூட்டம், ஜனவரி 8-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. இந்நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஜனவரி 3-ம் தேதி காலை 10 மணிக்கு நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி ஆகியோர் தலைமையில் இந்தக் கூட்டம் நடக்க உள்ளது.

வழக்கமாக, பேரவை கூடுவதற்கு முதல் நாளில்தான் எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் நடக்கும். தற்போது முன்கூட்டியே அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தப்படுகிறது. ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற டிடிவி தினகரன், நேற்று முன்தினம் எம்எல்ஏவாக பொறுப்பேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘ஆட்சிப் பொறுப்பில் உள்ள ஐந்தாறு பேர் வழிவிட்டு, எங்கள் பக்கம் வர விரும்புபவர்களை அனுப்பி வைக்க வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எங்கள் ஸ்லீப்பர் செல்கள் வெளியில் வருவார்கள்’’ என்றார்.

பேரவைக் கூட்டத்தில் சுயேச்சை எம்எல்ஏவாக தினகரன் பங்கேற்கிறார். அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளதால் பங்கேற்க முடியாது. இருப்பினும் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், கருணாஸ் ஆகியோர் தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவர்.

எனவே, சட்டப்பேரவை கூட்டத்தில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும். தினகரன் தரப்பினரை எப்படி சமாளிப்பது என்பது குறித்து எம்எல்ஏக்களுக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனை வழங்க உள்ளனர். கூட்டத்தில் அனைத்து அதிமுக எம்எல்ஏக்களும் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பகிர்