சென்னையில் டிச.26 தேதி முதல் மாவட்ட வாரியாக தனது ரசிகர்களை ரஜினிகாந்த், 2வது கட்டமாக சந்தித்து வருகிறார். இந்த நிலையில், சந்திப்பின் இறுதிநாளான இன்று அவரது அரசியல் பிரவேசத்தை அறிவித்தார். ரஜினி தனது உரையில் “கட்டுப்பாடு, ஒழுக்கம், இருந்தால் போதும் என்ன வேண்டுமானாலும் சாதிக்கலாம். அரசியலுக்கு வருவது குறித்து எனக்கு எந்த பயமும் இல்லை. ஊடகங்களிடையே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று எனக்கு சோ அன்றே சொல்லி தந்திருக்கிறார். அரசியலுக்கு வருவது குறித்து நான் பில்டப் கொடுக்கவில்லை. அதுவாகவே பில்டப்பு ஆகிறது. இந்த நேரத்தில் நான் முடிவெடுக்காவிடில் குற்ற உணர்வு நான் சாகும்வரை இருக்கும். அதனால் இன்று என் முடிவை அறிவிக்கிறேன். வரப்போகும் சட்டப் பேரவைத் தேர்தலில் நான் தனிக்கட்சி ஆரம்பிக்கிறேன். அது காலத்தின் கட்டாயம். பெயர் புகழ் சம்பாதித்து விட்டேன். பணம் மட்டும் போதவில்லை.
சமீபத்திய சசிகலா உறவினர் வீடுகளில் ரெய்டு அதை எனக்கு உணர்த்தியது. பணத்தை பல மடங்கு சம்பாதிக்க அரசியலுக்கு வருகிறேன். 45 வயதில் எனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி இருப்பேன். 45வயதில் வந்திருந்தால் ஜெயா கருணா போன்ற போட்டியாளர்களை சந்தித்திருக்க வேண்டும். இப்போது தமிழ்நாடு ‘அனமத்தாக’ கிடப்பதால் ஆதரவு கொடுக்க முன்வந்துள்ளேன். 234 நானும் எனது எந்திரன் ‘சிட்டி’ ரோபோக்களும் தனித்துப் போட்டியிடுவோம். இது குறித்து ஷங்கர் ஆஸ்கர் ரவி உள்ளிட்டோருடன் பேசி சகாய விலைக்கு ரொபோக்களை வாங்கிவிடுவேன். உள்ளாட்சி தேர்தலில் போட்டியில்லை. ஸ்டிரைட்டாக ‘சிஎம்’ தான். நான் என்ன தினகரனா? நாடாளுமன்ற தேர்தலின் போது மோடி சொல்வது போல் சில முக்கிய முடிவுகள் எடுப்பேன். தமிழகம் முழுவதும் குளு குளு வசதி செய்த கேரவனில் சுற்றுபயணம் செய்து தனுஷ் திருடியதுபோல் பொது மின்சாரத்தை திருடி வாக்கு சேகரிப்பேன். கட்சி அறிவிப்பு வரை அரசியல் விமர்சனம் வேண்டாம். அறிக்கை அரசியலை செய்யவும் போராடவும் எச். ராஜா போன்றவர்கள் இருக்கிறார்கள். ஜனநாயகம் என்ற பேரில் கட்சிகள் சொந்த நாட்டு மக்களிடம் கொள்ளை அடிக்கின்றனர். வாக்குறுதியை நிறைவேற்றா விட்டால் 3 ஆண்டுகளில் பதவியை ராஜிநாமா செய்வேன். வரப்போகும் சட்டப் பேரவைத்தேர்தலில் பாஜக சார்பில் நம்ம படையும் இருக்கும். ஆண்டவன் இருக்கான் ஆண்டு கொண்டிருக்கும் மோடியும் இருக்கான். வாழ்க தமிழ்மக்கள் வளர்க கன்னடர்கள். ஜெய்ஹிந்த்.” என பேசி முடித்தார். அங்கு ரசிகர்களுடன் ரசிகராக புலனாய்வில் இருந்த கப்சா நிருபர் கீழ்கண்ட கேள்விகளை முன்வைத்தார்.
1. கட்சி பெயர், கொடி, சின்னம் எதுவும் ஏன் அறிவிக்கப்படவில்லை?
2. உள்ளாட்சி தேர்தலில் போட்டி இல்லை, நாடாளுமன்ற தேர்தல் பற்றி பேசவே இல்லை, வரும் சட்டமன்ற தேர்தலில் தான் போட்டி?
3. அதுவரை எந்த அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகளை விமர்சிக்க கூடாது?
4. எந்த போராட்டங்களிலும் கலந்துகொள்ள கூடாது?
5. மதசார்பற்ற ஆன்மிக அரசியல்?
6. ராஜியின் மேடையில் துக்ளக் ரமேஷ்க்கு அங்கு என்ன வேலை?
7. 2021 வரை இதே மன நிலையில் இருப்பாரா? அவர் ரசிகர்கள் எத்தனை பேர் அதுவரை உயிரோடு இருப்பார்கள்?
இதெல்லாம் அவர் ரசிகர்கள் யோசித்து பார்க்காமல் லட்டு கொடுத்துகிட்டு, பட்டாசு வெடித்து கொண்டாடிக் கொண்டு இருகிறார்கள். என்றார் நிருபர். ரசிகர்கள் சந்திப்பில் கலந்து கொள்ள வந்த நபர் ஒருவருக்கு இதைக் கேட்டு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. எந்த முகாந்திரமும் இல்லாத இந்த அரசியல் பிரவேச நாடக அறிவிப்பால் அவருக்கு வலிப்பு ஏற்பட்டது. பிறகு அந்த நபர் சிகிச்சைக்காக ஆம்புலன்சில் வைத்து அழைத்துச் செல்லப்பட்டார். நடிகர் ரஜினிகாந்த தனது அரசியல் வெளிப்பாட்டை அறிவித்த நிலையில், அவரது ரசிகருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் எந்திரன் ரோபோக்களை வாங்கும் திட்டம் தீவிரமடைந்துள்ளது.
பகிர்