ரஜினிகாந்தின் அரசியல் வருகையால் மாற்றம் ஏற்படும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

அரசியலுக்கு வருவதை இன்று ரசிகர்கள் முன்னிலையில் உறுதிப்படுத்திய ரஜினி, ‘வரும் சட்டப்பேரவை தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் நிற்க முடிவு செய்துள்ளேன்’ என்று அறிவித்தார்.

 இந்நிலையில் இதுகுறித்து மு.க.அழகிரி தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ”ரஜினிகாந்தின் அரசியல் வருகையால் தமிழகத்தில் மாற்றம் ஏற்படும். அவரின் எண்ணங்கள் , திட்டங்கள் வெற்றி பெற வாழ்த்துகள். விரைவில அவரைச் சந்திப்பேன்” என்று தெரிவித்தார்

தனியார் செய்தித் தொலைக்காட்சிக்கு அழகிரி இன்று அளித்த தொலைபேசிப் பேட்டியில் கூறுகையில், ”ஸ்டாலின் செயல் தலைவராக இருக்கும்வரை திமுக எந்தத் தேர்தலிலும் வெற்றிபெறாது. ஸ்டாலினுடன் இருப்பவர்களின் செயல்பாடுகள் சரியில்லை. துரோகம் செய்தவர்களுக்கு பதவி கொடுப்பதை நிறுத்தினால் மட்டுமே திமுக முன்னேறும்.

 திமுக தலைவர் கருணாநிதியைப் போன்று களப்பணி செய்தால்தான் தேர்தலில் திமுக வெற்றி பெறும். தலைவர் கருணாநிதி தலைமையில் கடந்த நான்கு ஆண்டுகளாக எல்லா தேர்தலிலும் திமுக வெற்றி பெற்றது. இப்போது கருணாநிதி ஓய்வில் இருக்கும் இந்த சூழலில் ஸ்டாலின் தலைமையில் திமுக எதிர்கொண்ட ஆர்.கே.நகர் தேர்தலில் டெபாசிட் கூட பெற முடியவில்லை.

எந்தக் கட்சியும் தோல்வியை ஒப்புக்கொள்வதில்லை. திமுகவினர் பணத்துக்கு சோரம் போய்விட்டதாக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கூறுகிறார். பணத்துக்காக திமுக தொண்டர்கள் விலை போய்விட்டதாக கூறுவது தவறு.

வெற்றிப்பாதையில் செல்ல வேண்டுமென்றால் திமுகவில் மாற்றம் தேவை. பணம் கொடுக்காமல் தேர்தலில் வெற்றி பெற முடியும். அதற்கு களப்பணி செய்ய வேண்டும். தினகரன் இரட்டை இலை, உதயசூரியன் தோற்கும் அளவுக்கு களப்பணி செய்திருக்கிறார். பணம் கொடுத்தால் மட்டுமே வெற்றிபெற முடியாது. பல்வேறு மாநிலங்களில் எதிர்பார்க்காத பலர் ஆட்சி அமைக்கிறார்கள்” என்று அழகிரி கூறினார்.

பகிர்