சென்னை: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்எல்ஏ கீதா சற்று நேரத்தில் டிடிவி. தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே தினகரனுக்கு தன்னையும் சேர்த்து எம்எல்ஏக்களின் பலம் 22ஆக இருக்கும் நிலையில் மேலும் ஒரு எம்எல்ஏ ஆதரவு தெரிவிக்கும் பட்சத்தில் தினகரன் அணியின் எம்எல்ஏக்கள் பலம் 23ஆக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த போது தினகரன், சசிகலாவிற்கு ஆதரவாக இருந்த 19 எம்எல்ஏக்கள் முதல்வர் பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று ஆளுநரிடம் கடிதம் அளித்தனர். எனவே முதல்வர் பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்தனர்.

எம்எல்ஏக்களின் கடிதம் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்காத நிலையில் 19 எம்எல்ஏக்களும், புதுச்சேரி ரிசார்ட், கூர்க் ரெசார்ட் என்று சுமார் ஒரு மாத ஜாலியாக நாட்களை கழித்தனர். ஆனால் இவர்களை வெளிக்கொண்டு வர சபாநாயகர் அதிரடி நடவடிக்கை எடுத்தார். ஆளுநரிடம் முதல்வர் பழனிசாமிக்கு எதிராக கடிதம் கொடுத்த 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

19 எம்எல்ஏக்கள் கடிதம் கொடுத்த நிலையில், ஒரு எம்எல்ஏ மீது மட்டும் நடவடிக்கை எடுக்காததற்கும் காரணம் இருந்தது. கம்பம் தொகுதி எம்எல்ஏ ஐக்கையன் முதல்வர் பழனிசாமியை சந்தித்து அவர் முகாமில் தஞ்சமடைந்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் சபாநாயகரின் நடவடிக்கையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கின் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே ஆர்கே நகர் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் தினகரன். ஜனவரி8ம் தேதி தொடங்கும் சட்டசபை கூட்டத்தில் அவர் பங்கேற்க உள்ளார். இந்நிலையில் கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்எல்ஏ கீதா டிடிவி. தினகரனை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சற்று நேரத்தில் அவர் தினகரனை சந்தித்து தனது ஆதரவைத் தெரிவிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே 18 எம்எல்ஏக்கள் ஆதரவுடன், தானும் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் தினகரன் தரப்பு எம்எல்ஏக்களின் பலம் அதிகரித்து வருகிறது. எம்எல்ஏ கருணாஸ், ரத்தினசபாபதி, கலைச்செல்வன் உள்ளிட்டோரும் முதல்வர் பழனிசாமிக்கு எதிராக மனு அளித்துள்ளனர்.

எனவே இவர்களின் ஆதரவும் டிடிவி. தினகரனுக்கு இருக்கும் என்றே தெரிகிறது. தினகரன் தரப்பு எம்எல்ஏக்களின் ஆதரவு ஏற்கனவே 22ஆக இருக்கும் நிலையில் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சந்தித்து ஆதரவு தெரிவித்தால், எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தினகரன் சட்டசபைக்குப் போகும் முன்னே அதிமுக எம்எல்ஏக்கள் கூடாரம் வெலவெலக்கத் தொடங்கியுள்ளது.
Credit OneIndia

பகிர்