போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில், உடன்பாடு எட்டப்படவில்லை. இந்த பேச்சுவார்த்தையில், 2.57 காரணி ஊதிய உயர்வு வழங்க, போக்குவரத்துத் தொழிலாளர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், 2.44 காரணி ஊதிய உயர்வு, என்ற அரசின் அறிவிப்பை ஏற்க தொழிற்சங்கத்தினர் மறுத்துவிட்டனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள், ஆங்காங்கே பேருந்துகளை நிறுத்திவிட்டு, போராட்டத்தில் குதித்தனர். அரசின் ஊதிய உயர்வு அறிவிப்பு, தொழிலாளர்கள் இடையே ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும் என்பதால், வேலைநிறுத்தம் தொடரும் என்று அறிவித்துள்ள தொழிற்சங்கத்தினர், பொதுமக்கள் அவதிப்படுவது குறித்து, அரசுக்கு கவலையில்லை என்றும் குற்றம்சாட்டினர். காலவரையற்ற வேலைநிறுத்தம் காரணமாக, தமிழகம் முழுவதும், அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் பேருந்துகளை ஆங்காங்கே நிறுத்திவிட்டு, நடுவழியில் பயணிகளை இறக்கிவிட்டதால், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.
இதனால், பல்வேறு இடங்களில், பயணிகள் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெரும்பாலான இடங்களில் அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடைபெறும் போதே, சில தொழிற்சங்கத்தினர் பேருந்துகளை நடுவழியில் நிறுத்திவிட்டனர். ஊதிய ஒப்பந்தத்தை ஏற்று பேருந்துகளை இயக்க வேண்டும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறியுள்ளார். மக்களுக்கும், அரசுக்கும் சிரமம் ஏற்படுத்தாமல் ஊழியர்கள் அமைதியான முறையில் பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதால் வீட்டிற்கு செல்ல முடியாமல் பயணிகள் பெரும் அவதியடைந்துள்ளனர்.
இதனிடையே பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் ரயில் நிலையங்களுக்கு படையெடுத்துள்ளனர். மக்களின் கூட்டத்தால் சென்னை புறநகர் ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. வீடு திரும்ப மக்கள் அவதிப்படுவதை பயன்படுத்தி வழக்கம்போல் ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. பல மணி நேரம் காத்திருந்த மக்கள் சாலை மறியல் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இதே நிலை நீடீத்தால் காலை பள்ளி மற்றும் அலுவலகம் செல்வோர் நிலைமை மிகவும் சிரமமாகிவிடும் என்பது மட்டும் நிதர்சனம். ஜெயலலிதா இறப்பு முதலே செயலிழந்த தமிழக ஆட்சி, தற்போது குருமூர்த்தியின் கூற்றுபடி இம்பொடண்ட் ஆக மாறியுள்ளது. இந்த பட்டியலில் போக்குவரத்து துறையும் இணைந்துள்ளதாக பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த அப்பாவி கப்சா பயணி கூறினார்.
பகிர்