நடிகர் ரஜினிகாந்த்தின் புதிய கட்சி அறிவிப்பும், அவரது அரசியல் பிரவேசமும் இந்திய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கட்சியில் சேர நினைப்பவர்கள் மாற்றத்தை விரும்புபவர்கள் தங்களை உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்த ரஜினி அதற்காக புதிய இணையதள முகவரி ஒன்றையும் அறிவித்தார். இதன் மூலமாக பொதுமக்கள் சிலர் ரஜினி மன்றத்தில் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்து பதிவு செய்து வருகிறார்கள். இதுவரையில் 50 ஆயிரம் பேர் இணையதளம் மூலமாக ரஜினி மன்றத்தில் இணைந்துள்ளனர். ரஜினி பெயரில் போலியான இணையதள முகவரிகளும் வலம் வரத் தொடங்கி உள்ளன.
செல்போனில் பிளே ஸ்டோரில் சென்று ரஜினி மன்றத்துக்காக செயலியை பதிவிறக்கம் செய்து அதில் தங்களை இணைத்துக் கொள்ள சிலர் ஆர்வம் காட்டி வருகிறார்கள். தமிழகம் முழுவதும் 22 ஆயிரம் பதிவு செய்யப்பட்ட ரஜினி மன்றங்கள் உள்ளன. 30 ஆயிரம் மன்றங்கள் பதிவு செய்யப்படாமல் உள்ளன. மதுரையில் மக்கள் தலைவன் ரஜினிகாந்த் தலைமை நற்பணி மன்றம் என்ற பெயரில் 1977-ல் முதல் மன்றம் தொடங்கப்பட்டது. இதன் பின்னர் தொடர்ச்சியாக மதுரை மாவட்டம் முழுவதும் 1400 மன்றங்கள் தொடங்கப் பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த மன்றங்களை கணக்கெடுக்க கிளம்பியா ஜெயலலிதா அரசுக்கு எதிராக தான் ‘படையப்பா’ நீலம்பரி கதாபாத்திரம் உருவாக்கப்பட்டது. ரஜினியின் மன்றங்களை எல்லாம் ஒருங்கிணைத்து ஒரே குடைக்குள் கொண்டு வரவும் தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி சென்னையில் உள்ள ரசிகர்மன்ற மூத்த கப்சா நிர்வாகி ஒருவர் கூறும்போது, பூர்த்தி செய்து கொடுக்கக் கூடிய விண்ணப்ப படிவங்களை கொடுத்தால் வெளிப்படையாக மன்றத்தில் மக்களை சேர்க்க வேண்டி வரும். அதற்கு டிடிவி தினகரன் போல் செலவு செய்ய வேண்டும் என்பதை தலைமையிடம் எடுத்துச் சொல்லி அவர்களின் ஒப்புதலோடு அது போன்ற உறுப்பினர் சேர்க்கையிலும் விரைவில் தீவிரம் காட்டுவோம். இதன் மூலம் ஆயிரக்கணக்கில் டிக்கட் கொடுத்து கபாலி படம் பார்த்த எங்களுக்கு ஓரளவுக்கு வருவாய் கிட்டும் என்று தெரிவித்தார்.
வெறும் 50,000 பேரே பதிவு செய்திருக்கும் நிலையில் ஊடகங்கள் 50 லட்சம் என அடித்துவிடுவது, பாட்ஷா படத்தில் வந்த ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்னா மாதிரி என்ற பன்ச் வசனத்தை கேவலப்படுத்துவது போன்றது எனப் பல மண்சோறு கிழ ரசிகர்கள் வருத்தப்பட்டனர்.. அத்தகைய உடான்ஸ் ரஜினியின் பிம்பத்தை மிகைப்படுத்த அல்ல, மாறாக அவர் பெயரைச் சொல்லி ஹிட்ஸ், டி ஆர் பி கூட்டமுடியும் என்ற நம்பிக்கை தான் என்கிறார்கள். அரசியல் புரட்சி செய்யப்போகிறேன் என்று டுபாக்கூர் அறிக்கை விட்டார் ரஜினி. “கருணாநிதிக்கு கால் விழுந்து விட்டதாலும், ஜெயா காலாவதி ஆகி விட்டதாலும் தற்போது மாற்றம் தேவைப்படுகிறது, இது எதிர்கால சந்ததிக்கு பலன் தரும்.” என்றார். செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்த்து வந்த ரஜினி, அரசியலில் களமிறங்கியதால், அவர்களை எப்படி கையாளுவது என்று தவிக்கிறார். கூட்டத்தை கூட்டிவிட்டு அறிக்கையை வாசித்து விட்டு கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் எஸ்கேப் ஆகிவிட்டார்.
பகிர்