நாளை (ஜனவரி 6) மலேசியாவில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நட்சத்திர கலை விழா பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இவ்விழாவில் கலை நிகழ்ச்சி, நடனம், நகைச்சுவை நிகழ்ச்சி மற்றும் புகழ்பெற்ற நடிகர்களின் பேச்சு என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தவிர ஆறு அணிகள் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. இந்த கிரிக்கெட் போட்டிக்கு வழக்கம் போல் சூர்யா, விஷால், கார்த்தி, ஜெயம் ரவி, ஜீவா ஆகியோர் தலைமை தாங்குவர். நடிகர்கள் ரஜினி, கமல் உள்பட 100-க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளார்கள். இந்நிகழ்வில் மலேசிய நடிகர்கள் பங்கேற்கும் கால் பந்து போட்டி ஒன்றும் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் மலேசிய நடிகர்கள் தமிழ் சினிமா நட்சத்திரங்களுடன் மோதவுள்ளனர். எதிர்காலத்தில் மலேசிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தமிழ்ப் படங்களில் பணியாற்ற வாய்ப்பு எற்படுத்தித் தரப்படும். இந்நிகழ்ச்சி மலேசிய அரசின் உதவி மற்றும் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடைபெறவுள்ளது.

நிகழ்ச்சிகளில் மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் கலந்து கொள்வதற்கு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விழாவுக்கு அவர் தலைமை தாங்குவார். மலேசியாவில் உள்ள புக்கிஜாலி அரங்கில் விழா நடைபெறும். இதில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. நட்சத்திர கலை விழாவையொட்டி, ஜனவரி மாதம் 5 மற்றும் 6 ஆகிய இரு தினங்களில், தமிழ்த் திரைப்படப் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் அரசியல் பரபரப்புகளுக்கு இடையில் நட்சத்திரக் கலை விழாவில் கலந்துகொள்ள நேற்றிரவு மலேசியா புறப்பட்டுச் சென்றார் ரஜினி. ஜனவரி 6-ம் தேதி நடைபெறும் விழாவில் 2.0 பட டீசர் வெளியிடப்படும் என்றும் அறியப்படுகிறது.

மலேசியா சென்ற ரஜினிக்கு விமான நிலையத்தில் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஜினியைக் காண விமான நிலையத்துக்குப் பலர் வந்திருந்தார்கள். இதனால் பாதுகாவலர்களின் துணையுடன் ரஜினியும் அவரது மனைவி லதா ரஜினிகாந்தும் அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

பகிர்