சென்னை: சென்னை சந்தோம் அருகே தற்காலிக டிரைவர் இயக்கிய மாநகரப் பேருந்து மோதி பைக்கில் சென்ற இளைஞர் உயிரிழந்தார். செங்கல்பட்டில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர். சாந்தோம் அருகே விபத்தில் சிக்கி உயிரிழந்த இளைஞரின் பெயர் அஜீத்குமார் என்பதாகும். 18 வயதான இவர் பட்டினப்பாக்கத்தில் வசித்து வந்தார். இருசக்கர வாகனத்தில் தனது நண்பர்களுடன் வந்த போது சாந்தோம் அருகே வேகமாக வந்த அரசு மாநகர பேருந்து மீது மோதினார். சம்பவ இடத்திலேயே அஜீத்குமார் உயிரிழந்தார். அவரது நண்பர்கள் காயமடைந்தார். விபத்தை தொடர்ந்து சாந்தோம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சம்பவம் நடந்த இடத்தில் அஜீத்குமாரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் 4வது நாளாக இன்று தொடரும் நிலையில், பேருந்து மோதி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்தை ஏற்படுத்தியவர் தற்காலிக டிரைவரா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் தற்காலிக டிரைவர்தான் என்பது தெரியவந்துள்ளது.

தற்காலிக டிரைவர்களால் ஏற்படும் விபத்துகள் அதிகரித்து வருவது பொது மக்களிடையே பீதியை ஏற்படுத்தி வருகிறது. விருத்தாசலம் அருகே தற்காலிக ஓட்டுனர் ஓட்டிய பேருந்து மோதி 37 வயதான சியான் என்பவர் உயிரிழந்தார். மேலும் 7 வயது சிறுமி சாரா, சாமுவேல் ஆகியோர் பலத்த காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செங்கல்பட்டில் தற்காலிக பேருந்து ஓட்டுனர் ஓட்டிய பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர். செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அருகே 2 கார்கள் மீது பேருந்து மோதியது. கார் மீது மோதியதில் பேருந்துப் பயணிகள் 5 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தற்காலிக டிரைவர்கள் இயக்கும் பேருந்துகள் நேற்று சிறு சிறு விபத்துகளில் சிக்கிய நிலையில் இன்று பயணிகள் உயிரிழக்கும் அளவிற்கு விபத்துக்கள் ஏற்பட்டுள்ள பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் இதற்கு முதல்வரும், போக்குவரத்து அமைச்சரும்தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

பகிர்