சென்னை: திராவிட இயக்கத்தை பாதுகாப்பதற்காக திமுகவுடன் ஏற்படுத்திய கூட்டணி வருங்காலங்களிலும் தொடரும். இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: பரபரப்பான அரசியல் பின்னணியில் 2018ம் ஆண்டு தொடங்கியிருக்கிறது. மதிமுகவின் யுக்திகள் மாறலாமே தவிர, நாங்கள் கொண்ட அடிப்படை கொள்கைகளில் இருந்து மாறியது இல்லை. தமிழகத்தின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவேண்டியதை தொடர்ந்து எங்களது கடமையை நாங்கள் செய்துவருகிறோம். பணம் தான் எதிர்கால அரசியல் தீர்மானிக்கிறது என்பது கவலை அளிப்பதாக உள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த ஆர்.கே.நகர் தேர்தல் முடிவையும் பணம் தான் தீர்மானித்தது. இதில், எந்தவித மாற்று கருத்தும் இருக்க முடியாது. பணம் கொடுத்து வாக்குள் பெற்றிருப்பது நிரூபிக்கப்பட்டால் வேட்பாளர் தகுதி நீக்கம் செய்யப்படவேண்டும். மத்திய அரசு, மாநில அரசை மதித்து நடப்பதில்லை. மாநில அரசுகளின் உரிமைகளை நசுக்குகிறது. பசுமை தீர்ப்பாயங்களை மூடும் முடிவில் இருப்பது கவலை அளிப்பதாக உள்ளது. முத்தலாக் சட்ட மசோதா குறித்து மத்திய அரசு, இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்தவர்களுடன் கலந்து ஆலோசித்திருக்கவேண்டும். இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு சுதந்திர தமிழ் ஈழம் தான் தீர்வு. இதற்காக தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

அதிமுக, திமுகவுக்கு இருக்கும் வாக்கு வங்கிகள் இன்னும் குறையவில்லை. புதிதாக கட்சியை யார் தொடங்கினாலும் அவர்களது வாக்குகளை பெறுவது கடினம். அது, எல்லோருக்கும் பொருந்தும். ஆர்.கே.நகர் தேர்தலில் தி.மு.க.வோடு கூட்டணி அமைத்தோம். திராவிட இயக்கத்தை பாதுகாப்பதற்காகத்தான் கூட்டணிக்கு சென்றிருக்கிறோம். எனவே திமுகவோடு ஏற்படுத்திய கூட்டணி வருங்காலங்களிலும் தொடரும். திமுகவில் இருந்த போதும், திமுக கூட்டணியில் இருந்தபோது பல முறை நான் வேட்பாளர்களுக்கு வெற்றியை தேடி கொடுத்திருக்கிறேன். இதற்காக திமுக தலைவர் கருணாநிதியும் என்னை பல முறை பாராட்டியிருக்கிறார்.

என்னை பொறுத்தமட்டில் எந்த அணியில் இருக்கிறோமோ, அந்த அணியின் வெற்றிக்கு முழுவதுமாக பாடுபடுவேன்.
மக்கள் நலக்கூட்டணி எனும் மாற்று முயற்சி வெற்றிப்பெறவில்லை உண்மைதான். இளைஞர்கள் நினைத்தால் எதிர்காலத்தில் அந்த மாற்றம் ஏற்படலாம். ஆனால் உடனடியாக ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை.

பகிர்