சென்னை : ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக சொல்லப்பட்ட கார் ஓட்டுனர் ராஜா ஜெ. தீபா பேரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளரான ஜெ. தீபா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பேரவையின் கொள்கைகள் மற்றும கோட்பாடுகளை மீறி ராஜா செயல்படுவதாக குற்றம்சாட்டி இருக்கிறார். தொடர்ந்து பேரவைக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால் இன்று முதல் பேரவையின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து ஏ.வி.ராஜா நீக்கப்படுவராக அறிவித்துள்ளார். ராஜாவுடன் பேரவையின் கட்டுப்பாட்டை மீறி யாரும் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று தீபா அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த அறிக்கையை தீபா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வருவதாக அறிவித்தது முதல் அவரை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்று அனைவராலும் சொல்லப்பட்டவர் தான் இந்த ராஜா. தீபாவின் நண்பரும், கார் ஓட்டுனருமான இவரால் பல சமயங்களில் தீபாவிற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பேரவையில் இவருக்குப் பதவி வழங்கியதால் தான் அதிருப்தியில் தீபாவின் கணவர் மாதவன் வீட்டை விட்டு வெளியேறி தனிக்கட்சி தொடங்கினார்.
இதே போன்று கடந்த ஆண்டில் தீபக் வரச் சொன்னதாக போயஸ் கார்டன் சென்று அங்கு அடிதடி களேபரங்கள் அரங்கேறக் காரணமாக இருந்ததும் இந்த ராஜா தான் என்று அப்போதே சொல்லப்பட்டது. தன்னை தீபக் மிரட்டப்பார்த்ததாக சொன்ன போது தீபாவை போயஸ் கார்டனில் இருந்து வெளியேற்ற ராஜா முயற்சித்தது ஊடகங்களில் வெளியாகி இருந்தது. தற்போது கணவருடன் மீண்டும் சேர்ந்துள்ள தீபா, அவருடனேயே பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வரும் நிலையில், ராஜாவை பேரவையில் இருந்து நீக்கி அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார். இந்த நடவடிக்கைக்கு இனியாவது பேரவை மக்களை சென்றடையட்டும் என்று பலரும் கருத்து போட்டு வருகின்றனர்.

பகிர்