சசிகலா மற்றும் தினகரனை அ.தி.மு.க-வில் இருந்து ஒதுக்கி வைத்துவிட்டதாகக் கூறிக் கொண்டாலும், இரு தரப்புமே இந்த விஷயத்தில் கண்துடைப்பு நாடகம் ஆடுவதாகக் கூறுகிறார்கள் அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள். மத்திய பி.ஜே.பி அரசையும், பொதுமக்களையும் ஏமாற்றும் வகையில், எடப்பாடி தரப்பும், தினகரன் தரப்பும் கபட நாடகமாடி வருவதாகவே பலரும் தற்போது உணரத் தொடங்கியிருக்கிறார்கள்.
மத்திய பி.ஜே.பி. அரசின் கட்டுப்பாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு செயல்படுவதாகப் பரவலான குற்றச்சாட்டு நிலவுகிறது. பி.ஜே.பி-யை வெளிப்படையாக எதிர்த்ததாலும், எடப்பாடி தலைமையிலான தமிழக அரசை வீட்டுக்கு அனுப்புவோம் என்று கூறி வாக்கு கேட்டதாலுமே ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் வெற்றிபெற்றார் என்றெல்லாம் ஒருபுறம் பல்வேறு தரப்பிலும் தெரிவிக்கப்படுகிறது. தமிழக அரசியலில் இதுவரை நடந்தது என்னவென்பதை இங்கே பார்ப்போம்.
2016 ஏப்ரல் மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு, அப்போது எடப்பாடி அணியின் சார்பில் தினகரனுக்கு ஆதரவாக அமைச்சர்கள் களமிறங்கி பிரசாரம் செய்ததுடன், அதிகளவில் பணப்பட்டுவாடா நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, கடைசி நேரத்தில் அப்போது ஆர்.கே.நகர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், கடந்த டிசம்பர் மாதம் தேர்தல் நடத்தப்பட்டது. ஆனால், இந்தமுறை களநிலவரம் வேறு நிலையை எட்டியிருந்தது.
ஓ.பன்னீர்செல்வம் தரப்பும், எடப்பாடி தரப்பும் இணைந்து சசிகலா, தினகரன் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை அ.தி.மு.க-வில் இருந்து ஓரங்கட்டிவிட்டதாகவும், இரட்டை இலைச் சின்னம் கிடைத்ததும், எடப்பாடி அரசின் சார்பில் வேட்பாளர் நிறுத்தி வெற்றிபெற்று விடுவோம் என்றும் உறுதியளிக்கப்பட்டது. அதன்பேரிலேயே தேர்தல் ஆணையத்தின் சார்பில், எடப்பாடி அணிக்கு இரட்டை இலைச் சின்னம், அ.தி.மு.க பெயர், கொடி ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற நிலை உருவானது. எனினும், அ.தி.மு.க. சார்பில் ஓ.பி.எஸ். ஆதரவாளர் இ.மதுசூதனனே மீண்டும் போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக ஒட்டுமொத்த தமிழக அரசின் அமைச்சர்களும், கட்சியின் நிர்வாகிகளும் களமிறங்கி பிரசாரம் மேற்கொண்டனர். இந்த முறை தினகரனுக்கு தொப்பி சின்னத்துக்குப் பதிலாக, ‘பிரஷர் குக்கர்’ சின்னம் ஒதுக்கப்பட்டபோதிலும், அவருக்கு ஆதரவாக அவரின் ஆதரவாளர்களும், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ-க்களும் களமிறங்கி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டனர். தேர்தல் முடிவு வெளியான நாளில், முதல் சுற்றிலிருந்தே தினகரன் முன்னிலை வகித்தார். முடிவில் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் வெற்றிபெற்றார். இரண்டாமிடத்தில் மதுசூதனனும், மூன்றாமிடத்தில் தி.மு.க-வின் மருதுகணேஷும் வந்தனர். எனினும், தி.மு.க வேட்பாளர் டெபாசிட் தொகை பெறவில்லை.
தினகரனுக்கு இந்த வெற்றி எப்படிச் சாத்தியமாயிற்று என்று அ.தி.மு.க. வட்டாரங்களில் சற்றே உன்னிப்பாகக் கேட்டறிந்தோம். அப்போது கிடைத்தத் தகவல்கள் பெரிதும் அதிர்ச்சியளிக்கக்கூடியதாகவும், அதே நேரத்தில் சிந்திக்க வேண்டியதாகவும் அமைந்தது.
தற்போது எடப்பாடி அணியில் உள்ள அ.தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர், “தினகரன் பெயரளவுக்குத்தான் ஒதுங்கியுள்ளார். அவர் சொல்வதுபோல், அரசுத் தரப்பில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பது, அதிகாரபூர்வமற்ற முறையில் அவருக்கும் சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட சிலருக்கும் தெரிவிக்கப்பட்டுவருகின்றன. இன்னும் சொல்லப்போனால், ஏற்கெனவே தேர்தல் ஒத்திவைக்கப்படுவதற்குக் காரணமான அமைச்சர் தரப்பிலிருந்துதான், இந்த முறையும் தினகரனின் சின்னத்துக்கு வாக்களிக்க கேன்வாஸ் செய்து, பணம் வழங்கப்பட்டது. ஆட்சி அதிகாரத்தில் உள்ள மேலிடத்துக்கும் சம்பந்தப்பட்ட அமைச்சர்தான் பணம் அளித்தார் என்பது தெரியும். மத்தியில் பி.ஜே.பி. மேலிடத்தின் பார்வையில் சசிகலா, தினகரன் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் ஒதுங்கியிருப்பதாகக் காட்டிக்கொண்டாலும், பல அமைச்சர்கள் இன்னமும் சசிகலா குடும்பத்தினருடன் நெருக்கமாகவே உள்ளனர்” என்று போட்டுடைத்தார்.
மேலும் அவர், ”மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பெயரில் செயல்பட்டு வந்த, அ.தி.மு.க. அறக்கட்டளை, தற்போது சசிகலா குடும்பத்தினர் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது. கட்சியின் அறக்கட்டளை பெயரில் இருந்த சொத்துகள் அனைத்தும், உடல்நலக்குறைவால் நடராஜன் மருத்துவமனையில் இருந்தபோது, பரோலில் அவரைப் பார்க்க சசிகலா சென்னை வந்திருந்தபோது, மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது” என்றவர் தொடர்ந்து, “பத்திரப்பதிவுத் துறை உயர் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் துணையில்லாமல், எம்.ஜி.ஆர். அறக்கட்டளை சொத்துகள் மாற்றம் நடைபெற்றிருக்க வாய்ப்பில்லை. அப்படியானால், அரசுத் தரப்பில் சசிகலா குடும்பத்தினருடன் இணக்கமான போக்கு நீடிக்கிறது என்பதுதானே அர்த்தம்” என்று வினவினார்.
மேலும் அவர், ”டிசம்பர் மாதம் ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்கு முந்தையநாள் ஜெயலலிதா சிகிச்சைகுறித்த வீடியோவை, தினகரனின் ஆதரவாளரான வெற்றிவேல் வெளியிடுகிறார். ஆனால், அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பெயரளவுக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு, உயர் நீதிமன்றத்தில் வெற்றிவேல் முன்ஜாமீன் பெறும்வரை அவரைக் கைதுசெய்யாமல், இந்த அரசு பாதுகாக்கிறது. ஆர்.கே.நகர் தேர்தல் முடியும்வரை, ‘இந்த அரசை வீட்டுக்கு அனுப்புவோம். ஜெயலலிதா விட்டுச் சென்ற பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்வோம்’ என்றெல்லாம் பேசிவந்த டி.டி.வி.தினகரன், தற்போது அரசை வீட்டுக்கு அனுப்புவது பற்றிப் பேச மறுக்கிறார். செய்தியாளர்கள் இதுபற்றிக் கேட்டால், வேறு ஏதோதோ சொல்லிக் குழப்புகிறார்.
வீடியோவை வெளியிடுவதுபோல் வெளியிடுகிறார்கள். இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா,ஊடகங்களுக்குப் பேட்டியளித்தபோது, தினகரனுக்கு எதிராக ஓரிருநாள் பேசினார். பின்னர் வீடியோ வெளியானது தொடர்பான சர்ச்சை அடங்கிவிட்டது. தினகரன் ஒவ்வொரு முறையும், ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ். இருவரைப் பற்றியும், அவருக்குப் பதிலளிக்கும் அமைச்சர் ஜெயக்குமாரைப் பற்றி மட்டுமே பேட்டியின்போது விமர்சிக்கிறார். மற்ற அமைச்சர்களைப் பற்றி அவர் வாய் திறப்பதில்லை. மூத்த அமைச்சர் செங்கோட்டையன் உள்பட எந்தவோர் அமைச்சரும் தினகரனைப் பற்றியோ அல்லது சசிகலா குடும்பத்தினரைப் பற்றியோ விமர்சிப்பதைத் தவிர்க்கின்றனர்.
‘மத்திய அரசுக்கு இணக்கமாக இருப்பதுபோல், நீங்கள் செயல்படுங்கள். நான், மத்திய அரசை எதிர்ப்பதுபோல் செயல்படுகிறேன்’ என்று எடப்பாடியுடன் ஒரு ‘டீல்’ பேசி விட்டாரோ தினகரன் என்றுகூட எண்ணத் தோன்றுகிறது. தற்போது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ஆர்.பி.உதயகுமார், ஆர்.காமராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், ஓ.எஸ்.மணியன் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களுமே சசிகலாவின் ஆசியோடு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டவர்கள்தான். தற்போது வேறு வழியில்லாமல், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளித்துவருகிறார்கள்.
‘சுயேச்சை எம்.எல்.ஏ-வாக இருந்துகொண்டே, தமிழக அரசை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து விடலாம்’ என்றரீதியில்தான் தினகரனின் செயல்பாடும், எடப்பாடி அரசின் நடவடிக்கையும் உள்ளது. அண்மையில் நடந்த சட்டசபைக் கூட்டத்தொடரிலும் தினகரனை எதிர்த்து, எந்தவொரு அமைச்சரோ அல்லது அ.தி.மு.க உறுப்பினர்களோ பேசவில்லை. ‘தனக்குப் பேச அனுமதி இல்லை’ என்ற காரணத்தினாலேயே தினகரன் வெளிநடப்பு செய்ததாகக் கூறினார். இதன்மூலம் பத்திரிகையாளர்களையும், பொதுமக்களையும் ஏமாற்றும் வேலையில் எடப்பாடி அரசும், தினகரனும் செயல்படுகிறார்கள் என்பதை நன்கு உணர முடிகிறது” என்றார் அவர் மிகத் தெளிவாக.
பி.ஜே.பி. தலைவர் அமித் ஷாவும், பிரதமர் மோடியும் மற்ற மாநிலங்களில் கைதேர்ந்த அரசியலை மேற்கொள்கிறார்கள் என்று கூறப்படும் நிலையில், மத்திய அரசையே ஏமாற்றும் கபட நாடகமாகத்தான், எடப்பாடி – ஓ.பி.எஸ் – தினகரன் செயல்படுகிறார்களோ என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
From: Vikatan