
சென்னை: வீட்டின் மீது கற்களை வீசி தாக்குதால் நடத்தியதாக நாடகமாடிய விவகாரத்தில், கார் டிரைவர் ராஜா கைது செய்யப்பட்டதை கண்டித்து ஜெ.தீபா காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா சென்னை தி.நகரில் உள்ள சிவஞானம் தெருவில் வசித்து வருகிறார். இவர் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்ற பெயரில் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். தீபா வீட்டிலேயே கட்சியின் தலைமை அலுவலகமும் இயங்கி வருகிறது.
கடந்த 25ம் தேதி நள்ளிரவு ஆட்டோவில் வந்த மர்ம கும்பல் ஒன்று தனது வீட்டின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகவும், கட்சியின் முன்னாள் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் இ.சிஆர். ராமச்சந்திரன் தான் இதற்கு காரணம் என்றும் தீபா மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து, தீபா வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த மணிமாறன், விஜயகுமார் மற்றும் தொண்டர் படையை சேர்நத் ஞானபிரகாசம் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். வீட்டின் அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று ஆய்வு செய்தனர். அப்போது கடந்த 25ம் தேதி நள்ளிரவு கற்கள் வீசி தாக்குதல் நடத்தியது போல் எந்த காட்சிகளும் பதிவாக வில்லை. அதேநேரம் சம்பவம் நடந்ததாக கூறப்பட்ட நேரத்தில் தீபாவின் கார் டிரைவர் ராஜா பாதுகாவலர்களிடம் பேசி கொண்டிருப்பது போன்ற காட்சி பதிவாகி இருந்தது.
இதனால் அரசியல் விளம்பரம் வேண்டி கார் டிரைவர் ராஜா ஆலோசனைப்படி புகார் அளிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, மணிமாறன், விஜயகுமார், ஞானபிரகாசம் ஆகிய மூன்று பேரைவும் போலீசார் கைது ெசய்து சிறையில் அடைத்தனர். ராஜா ஆஜராகாமல் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த ராஜாவை மாம்பலம் போலீசார் நேற்று கைது செய்தனர். தகவல் அறிந்த தீபா தனது ஆதரவாளர்களுடன் மாம்பலம் காவல் நிலையத்திற்கு சென்று திடீர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார். அப்போது, ‘‘ராஜாவுக்கு தொடர்ந்து மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகிறது.
இதனால், ராஜாவை பாதுகாக்கும் வகையில் கட்சியில் இருந்து நீக்கினேன். தற்போது அவரை போலீசார் திட்டமிட்டு கைது செய்துள்ளனர்’’ என வாக்குவாததில் ஈடுபட்டார். இதையடுத்து போலீசார் அவரை சமாதானப்படுத்தினர்.ஆனால், ராஜாவை விடுதலை செய்தால் தான் இங்கிருந்து செல்வேன் என்று கூறி தொடர்ந்து முற்றுகைபோராட்டத்தில் ஈடுபட்டார். தொடர் பேச்சுவார்த்தைக்கு பிறகு தனது போராட்டத்தை கைவிட்டார். இதனால், மாம்பலம் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பொய் வழக்கு பதிவு
தீபா அளித்த பேட்டியில், ‘‘ராஜா மீது பொய் வழக்கு பதிவு செய்ய கோரி போலீசாருக்கு தொடர் அச்சுறுத்தல் வருகிறது. இந்த நிலையில், இன்று(நேற்று) ராஜா கார் விபத்து ஏற்படுத்தியதாக பொய் வழக்கு ஒன்றை பதிவு செய்ததுடன் இரவில் அவர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து கைது செய்துள்ளனர். இதை வன்மையாக கண்டிக்கிறேன். ஒரு நண்பராக ராஜாவை விடுதலை செய்ய அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்’’ என்றார்