சென்னை: தமிழர்களை இந்துகளாக அணிதிரட்டும் முயற்சி நிச்சயம் எடுபடாது என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்து. தமிழகத்தில் பாஜக நேரடியாக காலூன்ற முடியாத அளவுக்கு எதிர்வினை இருந்து வருகிறது. இதனால் மறைமுகமாக பல்வேறு சக்திகளின் துணையோடு தமிழகத்தில் காலூன்ற பாஜக கடுமையாக முயற்சிக்கிறது. ஆண்டாள் விவகாரத்தை முன்வைத்து ‘இந்துக்களாக’ தமிழர்களை அணிதிரட்டும் ஒரு அரசியலையும் பாஜக நூல் விட்டுப் பார்ப்பதாகவே தெரிகிறது. ஆனால் இது சொந்த காசில் சூனியம் வைப்பது போல என்று விவரம் தெரிந்தவர்களுக்குப் புரியும்.

தமிழகத்தின் அடிப்படை வரலாற்று போக்கை புரிந்து கொள்ளாமல் தமிழர்களை இந்துக்களாக ஒன்றுபடுத்த பாஜக பார்ப்பது என்பது மொட்டை பாறையில் மோதி மண்டையை உடைத்துக் கொள்ளும் செயலாகவே பார்க்கப்படுகிறது. வடக்கே ஆரியம் வேர்பிடித்த காலங்களில் சமணம், பவுத்தம்தான் தமிழகத்தில்

ஐவகை நிலங்களில் முன்னோர் வழிபாடும் இயற்கை வழிபாடும் இருந்தது. தமிழின் ஐம்பெருங்காப்பியங்களே சமண, பவுத்த காப்பியங்கள்தான். உலகப் பொதுமறையாம் திருக்குறள் சமண காப்பியம்தான். சமணம், பவுத்தம், இயற்கை வழிபாடு, முன்னோர் வழிபாடு இவைதான் தமிழர்கள் பின்பற்றிய சோ கால்ட் ‘ஆன்மீக’ம் என்பது.

மன்னர்கள் துணை கொண்டு ஆரியமும் வேதங்களும் செல்வாக்கு பெற்ற காலங்களில் அனல் புனல் வாதங்களால் பழம் பெரும் தமிழர் காப்பியங்களை நீரில் ஓடவிட்டு அழித்தனர்; தீயிலிட்டு எரித்தனர்; உச்சமாக கழுவேற்றி படுகொலை செய்தனர். இதனால் இந்த நிலப்பரப்பில் சமணமும் பவுத்தமும் சுவடே இல்லாமல் போனது.

சமண, பவுத்த விகாரைகள் ஆரிய வழிபாட்டு கோவில்களாக உருமாற்றம் பெற்றன. எஞ்சிய வழிபாட்டு முறையை ஆரியத்துடன் இணைத்துக் கொண்டனர். ஆரியத்தை ஏற்காதிருந்த சைவ மடங்களை குகை இடி கலகங்களில் நிர்மூலமாக்கினர். பின்னர் சைவத்தையும் வைணவத்தையும் ஒருங்கிணைத்து இந்து மதமாக அதில் தங்களை உயர்வானவர்களாகவும் தங்களுக்கு சேவகம் புரிந்தோரை இரண்டாம் நிலையினராகவும், மூர்க்கமாக எதிர்த்த பூர்வகுடிகளை சூத்திர பஞ்சமர்களாக நடத்தியது ஆரிய

தமிழ் மக்களுடன் கலக்காமல் தங்களை தனித்தே ஆரியவாதிகள் அடையாளப்படுத்திக் கொண்டனர். ஆரியத்தை கடுமையாக எதிர்த்த சித்தர்கள் மரபே இல்லாது ஒழிக்கப்பட்டது. இந்த பின்னணியில்தான் நூறாண்டுகளுக்கு முன்னர் எழுந்த திராவிடர் இயக்கம் அத்தனை அடிமைத்தனங்களையும் உடைத்து போட்டு ஆரியத்தின் மேலாதிக்கத்தைத் தகர்த்தது.

திராவிடத்தின் உக்கிரத்தால் உயிர்ச்சத்துடன் மண்ணை விட்டு டெல்லிக்கும் கொல்கத்தாவுக்கும் அகதிகளாக ஓடினர்கள் ஆரியவாதிகள். எஞ்சியவர்கள் வாய்மூடி மவுனிகளாக இருக்க வேண்டிய கட்டாயம் உருவானது. சைவ மடங்கள் கூட நாத்திகம் பேசிய திராவிடர் இயக்கத்துடன் தாயாக பிள்ளையாக பயணித்தது. இஸ்லாமியர்களும் கிறித்துவர்களும் மாமன் மச்சான்களாக இணைந்தே திராவிடர் இயக்க துணையுடன் பாதுகாக்கப்பட்டனர்.

இப்போது திராவிட இயக்கம் வலிமையான தலைமை இல்லாத நிலையில் இருக்கிறது. திராவிடத்தின் பெயரிலான அரசியல் கட்சிகளிலும் வலிமையான தலைமை இல்லை. மாற்றம் ஒன்றே மாறாதது என்பது எல்லா இயக்கத்துக்கும் பொருந்தக் கூடியது.

எதிர்முனையில் ஆரியம் என்பது இந்துத்துவா சக்தியாக இந்திய மாநிலங்களில் விஸ்வரூபமெடுத்து நிற்கிறது. மத்தியில் அதிகாரத்திலும் இருக்கிறது. அதன் அரசியல் முகமாக பாஜக தீவிரமாக இருக்கிறது.

திராவிட இயக்கத்தின் பெயரால் மீண்டெழுந்த தமிழகம் தங்களது வரலாற்று எதிரியான ஆரியத்தின் பிடிக்குள் இந்து என்கிற பெயரில் அப்படியே ஓடி வந்துவிடும் என்பது கற்பனையின் உச்சம். திராவிடத்தின் மறுதலிப்பாக, திராவிடத்தின் நீட்சியாக இங்கே தமிழ், தமிழ்தேசியம் என்பதுதான் யதார்த்தமான ஒன்றாக இருக்க முடியும்.

அதுதான் இங்கே நடந்து கொண்டிருக்கிறது. ஏனெனில் இந்துத்துவா சக்திகள் தமிழர்களின் மொழி உரிமை, வழிபாட்டு உரிமை, வாழ்வுரிமை என அத்தனைக்கும் எதிராகத்தான் நிற்கின்றன. உச்சகட்டமாக தமிழர்களின் மீது நீட் போன்ற போரை தொடுத்துக் கொண்டு மூர்க்கமாக நிற்கிறது.

தமிழர்கள் இங்கே பெருங்கோபத்தில் இந்துத்துவாவை முன்வைக்கும் பாஜக மீது இருக்கின்றனர். குறிப்பாக ஆண்டாள் விவகாரத்தில் இந்துக்களாக அணி திரட்டப்பட்டவர்கள் வைரமுத்துவுக்காக அல்ல என்பதை அவர்களது பேச்சுகள் எளிதாகவே அம்பலப்படுத்தி இருக்கின்றன.இத்தனை காலம் பேசாமல் இருந்தோம்.. இத்தனை காலம் அமைதியாக இருந்தோம் என ஆரியத்தின் வழிவந்த இந்துத்துவா நேசர்கள் கொந்தளிக்கிறார்கள். இந்துக்களாக ஓடி வாருங்கள் என தமிழ்ச் சமூகத்தின் அடையாளங்களில் ஒருவருக்கு எதிராக அணிதிரட்ட முயற்சிக்கிறார்கள். இதன்விளைவுதான் எங்களுக்கு ஏது மதம்? ஆண்டாள் எங்கள் தமிழச்சி; என்கிற எதிர்கேள்விகள். இந்துக்களாக ஓட்டரசியலுக்கு பாஜக அழைக்கும் தமிழர்களின் மொழியை நீச பாஷை என்றது இந்துத்துவா. தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும் என கோவில்களில் எழுதி இழிவை சுமக்க சொன்னது இந்துத்துவா. தமிழ் மறைகளை ஆலயங்களில் பாட முயன்ற சிவனடியார்களைத் தாக்கியது இந்துத்துவா. அப்போது சிவனடியார்களை தோளில் சுமந்து சென்றது நாத்திகம் பேசுகிற, கம்யூனிசம் பேசுகிற சித்தாந்தவாதிகள் என்பதையும் கவனிக்க வேண்டும்.
தமிழர்களின் வழிபாட்டு உரிமைக்காக போராடியதும் போராடுவதும் நாத்திகம் பேசிய திராவிடர் இயக்கம். இந்து அரசியல், இந்துத்துவ அரசியல் என்பது இம்மண்ணுக்கான அன்னிய மொழிச் சொற்கள். பல்லாயிரம் ஆண்டுகால லெமூரியா கண்ட வரலாறும் கீழடி நாகரிகமும் நீடித்திருக்கும் பண்பட்ட பண்பாட்டு சமூகமான தமிழர்களிடம் நாக்கை வெட்டு, தலையை வெட்டு என மூர்க்க அரசியலை முன்வைப்பதை ஏற்க மாட்டார்கள். வட இந்தியா முழுவதும் விரவிக் கிடக்கும் அம்மண அகோரி ஒருவரையாவது தமிழகத்தில் நடமாடவிட முடியுமா? நிர்வாண சமண துறவிகளே தமிழ் மண்ணில் நடக்க அச்சப்படுகிற அளவுக்கு இங்கே வளமையான பண்பாடு இருக்கிறது. இன்றைய இந்துத்துவா, அன்றைய ஆரியத்தால் தமிழர்கள் பட்ட பட்டுகொண்டிருக்கிற துயரங்கள் வரலாறு நெடுகிலும் இருக்கிறது. ஆகையால் முகமூடிகளின் பெயரால் மூக்கை நுழைக்க முடியுமே தவிர உண்மை முகத்துடன் ஒருநாளும் தமிழ்நாட்டில் இந்துத்துவா அரசியலும் சரி, இந்துக்களே ஒன்றுபடுங்கள் என்கிற முழக்கமும் எடுபடவே எடுபடாது.

Credit: OneIndia

பகிர்