ஆண்டாளுக்காக, தமிழகமெங்கும் வைணவர்கள் கிளர்ந்தெழுந்து போராட்டங்களில் இறங்கியுள்ளனர். பல இடங்களில், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என்று ஆயிரக்கணக்கான வைணவர்களை காண முடிகிறது.  இன்று வீதியில் இறங்கி ஆண்டாளின் மானம் காக்க போராட்டம் நடத்தும் இந்த வைணவ பார்ப்பனர்கள், இது நாள் வரை, மக்களை பாதிக்கும் எந்தவொரு விஷயத்துக்காகவும், குரல் கொடுத்ததில்லை, போராடியதில்லை, வீதிக்கு வந்ததில்லை. போக்குவரத்து தொழிலாளர்களோ, அரசு ஊழியர்களோ, ஆசிரியர்களோ, பட்டாசுத் தொழிலாளர்களோ, யார் போராடினாலும், அந்த செய்தியை தினமலரில் படித்து ஒரு நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொள்வார்கள். அப்படிப்பட்டவர்கள், ஆண்டாளின் மானம் காக்கவாவது வீதிக்கு வருவது உள்ளபடியே மகிழ்ச்சி. நிற்க. வைரமுத்து சொன்ன ஒரு வார்த்தையால் ஆண்டாளின் மானம் போய் விட்டது என்று இன்று உரத்து குரல் எழுப்புவோர், வீட்டிலும், கோவிலிலும் மந்திரங்களை உச்சரிப்பதைத் தவிர்த்து ஒரு துரும்பையாவது கிள்ளிப் போட்டிருக்கிறார்களா என்றால் இல்லை. குறைந்தபட்சம், திருப்பாவையை, உரையோடு மலிவுப் பிரதியாக அச்சடித்து மக்களிடம், ஆண்டாளின் பெருமையை பரப்ப முயற்சி எடுத்துள்ளார்களா என்றால் இல்லை. (உரையோடு வெளியிட்டால், காவல்துறையினர், அதை சரோஜாதேவி என்று கருதி பறிமுதல் செய்யவும் வாய்ப்பு உள்ளது).
பிரளயமே நடந்தாலும், வீதிக்கு வராத இந்த வைணவர்கள் ஆண்டாளின் மானங்காக்க வீதிக்கு வருவதை, மக்கள் புன்னகையோடு ரசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்கள் போராட்டம் தொடரட்டும். இவர்கள் யாருக்கானவர்கள், இவர்களின் நோக்கம் யாருக்கானது என்பது மக்களின் முன் அம்பலப்படும். இந்நிலையில் பாரதிராஜா, சீமான் போன்றவர்களால் இது சினிமா பிரபலங்களின் பிரச்சினையாகவும், தேவர், வைணவர் இடையிலான சாதி மோதலாகவும் உருவெடுத்துள்ளது.
ஆண்டாள் சர்ச்சையில் புதிய திருப்பமாக கேப்டன் பேட்டி அளித்தார்: சென்னை கோயம்போடு நூறடி ரோட்டில் உள்ள என் (விஜய்காந்தின்) மனைவியின் ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தின் அருகே புதிய மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டது. இதற்காக மண்டபத்தின் ஒரு பகுதியும், இந்த பகுதியில் உள்ள 40க்கும் மேற்பட்டவர்களின் கட்டிடங்களும் இடிக்க முடிவு செய்யப்பட்டது. ஆண்டாள் அழகர் திருமண மண்டபம் உள்ளிட்ட நிலங்களுக்கு நஷ்ட ஈடு பணத்தை வழங்க முடிவு செய்யப்பட்டு, அதன்படி மண்டபத்துக்கு ரூ. 8.55 கோடி நஷ்ட ஈடு வழக்கப்படும் என்றும், அதை காஞ்சிபுரம் வருவாய்துறை அதிகாரி அலுவலகத்தில் டிசம்பர் 18ம் தேதி பெற்று கொள்ளலாம் என்றும் என் மனைவி பிரேமலாதவுக்கு வருவாய்த் துறை சார்பில் ஒரு நோட்டீஸ் அனுப்பட்டது. கடந்த சட்டசபைத் தேர்தலில் தேமுதிக தனியாகப் போட்டியிட்டு 8.33 சதவீத ஓட்டுக்களைப் பெற்றது. இவ்வளவு வலுவான எங்கள் கட்சியின் தலைமை அலுவலகம் ஆண்டாள் அழகர் கல்யாண மண்டபத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த மேம்பாலத்தை கட்டுவதற்கு நாங்கள் மாற்றுத் திட்டத்தை வழங்கினோம். அதை வேண்டும் என்றே நிராகரித்து விட்டனர். அப்போது எங்கள் மண்டபத்தில் திருமணத்திற்கு அட்வான்ஸ் கொடுத்திருந்த பத்தினிப் பெண்கள், தகப்பனார்களின் சாபம் தான் இப்போது ஆண்டாள் பிரச்சினை வடிவில் வைரமுத்து விஷயத்தில் வெடித்துள்ளது. இது எனக்கு முன்பே அசரீரியில் ஆண்டாள் வந்து சொன்னது. நெட்ட்சன்களின் மீம் தீனிக்கு ஆளாகமல் இருக்கவும் உடல் நிலை பாதிப்பால் சிங்கப்பூர் செல்லவிருந்ததாலும் சொல்லவில்லை. மேற்கொண்டு பத்திரிகையாளர்கலை ‘த்தூ’ என்று துப்பிய வழக்கில் ஆஜராக வேண்டி இருந்தது.” என்றார்.
சினிமாவுக்கு வருவதற்கு முன் இசை அமைப்பாளர் தேவா பக்தி பாடல்களும், ஐயப்பன் கேசட்டுகளும் போட்டு பிழைப்பு நடத்தி வந்தார். அப்படிப்பட்டவர் சினிமாவில் அறிமுகமானதும் ஆண்டாளையும் இந்து கடவுள்களையும் தூஷிக்கும் விதமாக நடந்து கொண்டதும் ஒரு காரணம். ரஜினி படங்களுக்கு இசை அமைத்தவர் தற்போது சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் இருப்பதும் அதனால்தான். பிப்ரவரி 1997 வெளியான ‘காலமெல்லாம் காதல் வாழ்க’ படத்தில் ஆண்டாளை இழிவுபடுத்தும் விதத்தில், அண்ணா நகரு ஆண்டாளு, அயனாவரம் கோபாலு, ஐசிஎப்புல எடுக்குறான்டா தண்டாலு என்று இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர் சபேஷ் ஒரு பாடல் எழுதி, ஆண்டாளை இழிவுபடுத்தியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. குறிப்பாக, அது நம்மாளு, வேணாண்டா கோபாலு என்ற வார்த்தை மிகவும் மோசமாக உள்ளது என்று வைணவ ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். அதே பாடலில் வரும் வரிகளான, ஜிஞ்சினக்கா ஜிஞ்சினக்கா ஜினுக்குத்தான், உன் ஜீன்ஸ் பேன்ட்டு மேல ஒரு கணக்குத்தான் என்பதும், பஞ்சகச்ச வேட்டி உடுத்தும் பழக்கம் உள்ள வைணவர்களை இழிவுபடுத்துவதாகவே உள்ளது என்பதால், வைணவ சமுதாயத்தினர் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். இந்த விபரங்களை கேள்விப்பட்ட ஜீயர், தனது அடுத்த போராட்டத்தில், தேவாவின் சகோதரர் சபேஷும், ஆண்டாள் சன்னதி முன்பாக, ஜீன்ஸ் பேன்ட் போடாமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க உள்ளார்.
Credt: Shankar A.
பகிர்