ஓபிஎஸ் டெல்லி பயணம் ஏமாற்றத்தில் முடிந்திருக்கிறது! எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு மோடியை அழைக்க விரும்பியிருந்தபோதும், ‘அப்பாய்ன்மென்ட்’ இல்லை.
ஓ.பன்னீர்செல்வம், சில மாதங்களுக்கு முன்பு வரை ‘டெல்லி’யின் செல்லப்பிள்ளையாக கருதப்பட்டார். அதிமுக.வில் இருந்து பிரிந்து அவர் ‘தர்மயுத்தம்’ தொடங்கியபோது அவருக்கு பெரும் பலமாக உதவியது மத்திய அதிகார வட்டாரங்கள்தான்!
ஓ.பன்னீர்செல்வம், மத்திய பாதுகாப்பைக் கேட்டதும் உடனே கிடைத்தது. அந்தப் பாதுகாப்பு அணிகள் இணைந்து, அவர் துணை முதல்வர் ஆனபிறகும் இன்னும் தொடர்கிறது. இதையெல்லாம் தாண்டி, அதிமுக.வின் அதிருப்தி அணி தலைவராக, சாதாரண ஒரு எம்.எல்.ஏ.வாக மட்டுமே இருந்தபோது நினைத்த நேரத்தில் எல்லாம் டெல்லிக்கு சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் ஓபிஎஸ்.
ஓ.பன்னீர்செல்வத்தை இந்தியாவே ஆச்சரியமாக பார்த்தது அப்போதுதான். தமிழகத்தில் அத்தனை எதிர்க்கட்சிகளும் சேர்ந்து விவசாயிகள் பிரச்னைக்காக கேட்டும் கிடைக்காத பிரதமரின் அப்பாய்ன்மென்ட், ஓபிஎஸ்.ஸுக்கு மட்டும் அவ்வளவு சுலபமாக கிடைத்ததும் சர்ச்சை ஆனது. இதுபோக, தேர்தல் ஆணையத்தின் அத்தனை நகர்வுகளும் ஓபிஎஸ் அணிக்கு சாதகமாக சுழன்றது, அரசியல் ரீதியாக ஓபிஎஸ்.ஸை வலிமைப்படுத்தும் வகையில் வருமான வரித்துறையின் ரெய்டுகள் அமைந்தது… எல்லாமே ஓபிஎஸ்.ஸின் டெல்லி செல்வாக்கை உணர்த்தின.
ஆனால் ஓபிஎஸ்-இபிஎஸ் இணைந்தபிறகு, ஓபிஎஸ்.ஸுக்கு அப்படி பிரதமரின் ‘அப்பாய்ன்மென்ட்’ வாய்க்கவில்லை. துணை முதல்வர் பதவியேற்றதும் ஒரே ஒருமுறை மைத்ரேயன் சகிதமாக சென்று பார்த்ததோடு சரி! அதன்பிறகு தமிழ்நாட்டுக்கு பிரதமர் வந்தபோது ஓரிரு முறை கூட்டத்தோடு கூட்டமாக பார்த்ததுதான்!
நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த 16-ம் தேதி மாலையில் டெல்லிக்கு சென்றார் ஓ.பன்னீர்செல்வம். அவரது டெல்லி பயணத் திட்டம் குறித்து அதிகாரபூர்வமாக முன்கூட்டியே அரசு தரப்பில் எதுவும் கூறவில்லை. ஆனால் ஓபிஎஸ் தரப்பைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சிலரே, ‘சென்னையில் நடைபெற இருக்கும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில் பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆகியோரின் பங்கேற்பை உறுதி செய்யவே ஓபிஎஸ் டெல்லி செல்கிறார்’ என தகவலை கசிய விட்டனர்.
ஜனவரி 16-ம் தேதி இரவே டெல்லிக்கு சென்றுவிட்ட ஓபிஎஸ், மறுநாள் அருண் ஜெட்லி தலைமையில் நடைபெற்ற மத்திய பட்ஜெட் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். தொடர்ந்து ஜனவரி 18-ம் தேதியும் டெல்லியில் முகாமிட்டிருந்த அவருக்கு அன்று அதிகாரபூர்வ அலுவல் எதுவும் இல்லை. ஆனால் எதிர்பாராத விதமாக அங்கு மர்மமான முறையில் மரணம் அடைந்த மருத்துவ மேற்படிப்பு மாணவர் சரத் பிரபு உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.
இரு நாட்கள் டெல்லியில் ஓபிஎஸ் தங்கியிருந்தபோதும், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு அமையவில்லை. இதே நாட்களில் நரேந்திர மோடியும் டெல்லியில்தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் தமிழக அரசு சார்பில் சென்னையில் நடைபெற இருக்கும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் மோடி பங்கேற்பது இன்னும் உறுதி செய்யப்படாமல் இருக்கிறது.
ஓபிஎஸ்.ஸுக்கு மட்டுமல்ல, ஓகி புயல் நிவாரணம் உள்ளிட்ட சில அம்சங்களுக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமியே பிரதமரை சந்திக்க விரும்பியதாகவும், அதற்கான அப்பாய்ன்மென்டுமே கிடைக்கவில்லை என்பதாகவே டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. ஓகி புயல் நிவாரணம் தொடர்பாக பேச, கவர்னர் பன்வாரிலால் புரோஹித்துக்கு பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களின் அப்பாய்ன்மென்ட் கிடைத்தது இங்கு நினைவு கூறத்தக்கது.
அண்மையில் தமிழக சட்டமன்றத்தில் அரங்கேறிய கவர்னர் உரையிலும் இதை பன்வாரிலால் புரோஹித் பதிவு செய்தார். இது எல்லாமே தமிழக ஆட்சியாளர்கள் மீது டெல்லி உச்சகட்ட அதிருப்தியில் இருப்பதற்கான அடையாளங்கள்தான்! டெல்லியில் மேலிடத் தலைவர்களை சந்தித்த ஆளுனர் பன்வாரிலால் புரோஹித், தமிழக ஆட்சியாளர்கள் குறித்து நல்லவிதமான ‘ரிப்போர்ட்’ கொடுக்கவில்லை என்றே தெரிகிறது.
தவிர, இவ்வளவு ஆதரவு கொடுத்தும் ஆர்.கே.நகரில் டிடிவி தினகரனை ஜெயிக்க விட்டதில் இபிஎஸ்-ஓபிஎஸ் மீது டெல்லி அடியோடு நம்பிக்கை இழந்துவிட்டதாக கூறுகிறார்கள். அதன் எதிரொலிதான் குருமூர்த்தியின், ‘இம்பொட்டன்ட்’ விமர்சனமும் என்கிறார்கள், விவரம் அறிந்தவர்கள்!
டிடிவி தினகரனை அமோகமாக ஜெயிக்க விட்டது, 13 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு இடைத்தேர்தலில் ஆளும்கட்சி தோற்றது மட்டுமல்ல… மக்களின் அதிருப்தியை பெற்றிருந்த சசிகலா குடும்பத்திற்கு எதிராக அவ்வளவு நடவடிக்கைகள் எடுத்தும் ஆர்.கே.நகரில் நோட்டாவைவிட பாஜக குறைவான வாக்குகள் வாங்கியதை மேலிடம் ரசிக்கவில்லை. இவ்வளவு குறைவான வாக்குகளுக்கு காரணம், தமிழக ஆளும்கட்சிக்கு ஆதரவாக மத்திய அரசு இருப்பதை மக்கள் விரும்பவில்லை என்பதாக டெல்லிக்கு ரிப்போர்ட் போயிருக்கிறது.
இதன்பிறகே தமிழக ஆளும்கட்சியுடன் இடைவெளி பேண டெல்லி விரும்பியிருக்கிறது. நடிகர் ரஜினிகாந்தின் விறுவிறு அரசியல் ‘மூவ்’கள் அதன்பிறகே ஆரம்பிக்கின்றன. ‘ரஜினியும் பாஜக.வும் இணைந்தால் தமிழகத்தில் திராவிடக் கட்சிகளுக்கு வேலையில்லை’ என குருமூர்த்தி உள்ளிட்டவர்கள் கருத்துகளை விதைக்க ஆரம்பிக்கிறார்கள்.
தமிழக ஆட்சிக்கு டெல்லி முட்டுக் கொடுக்கவில்லை என்கிற சூழலில், இந்த ஆட்சியின் ஸ்திரத்தன்மையும் கேள்விக்குறியே! காரணம், டிடிவி அணியின் 18 எம்.எல்.ஏ.க்கள் (பதவி நீக்கம் செய்யப்பட்ட) விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் விவாதம் முடிந்துவிட்டது. ஜனவரி 22-ம் தேதி அந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது, தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
18 எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் ஒருவேளை டிடிவி அணியினருக்கு சாதகமாக உத்தரவு வந்தால், மார்ச்சில் பட்ஜெட் கூட்டத் தொடரை தாண்டுவதே இபிஎஸ் அரசுக்கு பெரும் சவாலாக போய்விடும். எனவே விறுவிறு திருப்பங்களை எதிர்பார்க்கலாம்….!!!
3 comments
Or use one of these social networks