சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்காத விஜயேந்திரருக்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். விஜயேந்திரர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வைகோ கூறியுள்ளார். சென்னையில் நேற்று நடந்த சமஸ்கிருத அகராதி நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது காஞ்சி மடத்தின் இளைய அதிபர் விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் உட்கார்ந்து இருந்தார். இது பெரிய சர்ச்சையை கிளப்பியது.

விஜயேந்திரரின் செயலுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் ”சமஸ்கிருத அகராதி நூல் வெளியீட்டு விழாவின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது, நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உள்ளிட்ட தலைவர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்தி இருக்கிறார்கள். ஆனால், அங்கிருந்த காஞ்சி சங்கரமடத்தின் இளைய பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி அவர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்தாமல், தன் இருக்கையில் அமர்ந்திருக்கிறார். ” என்றுள்ளார். மேலும் ” நிகழ்ச்சியின் நிறைவாக நாட்டுப் பாடல் இசைக்கப்பட்டபோது எழுந்து நின்று மரியாதை செலுத்தி இருக்கிறார். தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டபோது அமர்ந்திருந்த செயல் தமிழ் மொழியையும், தமிழர்களையும் அலட்சியப்படுத்தி, அவமானப்படுத்திய செயலாகும்.” என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல் ”கடவுள் நம்பிக்கையில் மாறுபட்ட கருத்துள்ள தந்தை பெரியார் அவர்கள்கூட தான் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் கடவுள் வாழ்த்து பாடப்பட்டபோது எழுந்து நின்று மரியாதை செலுத்தி இருக்கிறார். நாட்டுப் பாடல் இசைக்கப்பட்டபோது அதுபோன்றே எழுந்து நின்று மரியாதை செலுத்தி இருக்கிறார்.” என்றுள்ளார்.

இந்நிலையில் விஜயேந்திரரின் செயலுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து அவர் கூறியுள்ளதாவது : கவிஞர் வைரமுத்து சொல்லியது போல தேசிய கீதம் என்பது தாய்நாட்டை மதிப்பது தமிழ்த்தாய் வாழ்த்து என்பது தாய்மொழியை மதிப்பது இரண்டும் சம அளவில் மதிக்கப்படவேண்டியவை. தமிழ் மொழி தாய் மொழி அந்த மொழியை போற்றுகின்ற பாடலை பாடும் போது எழுந்து நிற்பது மரபல்ல என்று சொல்வது கண்டனத்திற்குரியது.

Image credit: Sankar A

பகிர்