எம்.எல்.ஏ. டிடிவி தினகரன் தமிழகம் முழுவதும் ‘மக்கள் சந்திப்பு புரட்சிப்பயணம்’ என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

டிடிவி தினகரனின் ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் தேனியில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் பேசிய தங்க தமிழ்ச்செல்வன், “7000 ரூபாய் சம்பளம் வாங்குபவர்கள் மாதம் 3000 ரூபாயை பஸ் கட்டணத்துக்கு கொடுத்துவிட்டு எப்படி வாழ்வது?. தோல்வியை ஏற்க மறுத்துள்ள அவர்கள் மீசையில் மண்ணு ஒட்டினாலும் கீழே விழவில்லை என நடிக்கின்றனர். ஓ.பி.எஸ்சை அமைச்சராக்கி, முதல்வராக்கி அழகு பார்த்தது டிடிவி தினகரன்தான் என்பதை ஓபிஎஸ் மறுக்க முடியுமா?

18 சட்டமன்ற உறுப்பினர் தகுதி நீக்க வழக்கில், இன்னும் 10 நாட்களில் தீர்ப்பு வரும். தீர்ப்புக்கு பிறகு நாம்தான் அதிமுக, நாம்தான் ஆட்சி, இரட்டை இலை நமக்குதான். அதுவரை டிடிவி தினகரன் அணி அதிமுக அம்மா என்ற பெயரில் செயல்படும். ஜெயலலிதா பிறந்த நாளுக்குள் புதிய பொறுப்பாளர்கள் மாநில, மாவட்டம், ஒன்றிய, நகர வாரியாக நியமிக்கப்படுவார்கள். ஒரு சில மாதங்களில் டிடிவி தினகரன் தொகுதி தொகுதியாக ஊர் ஊராக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்” என்று தங்க.தமிழ்ச்செல்வன் தெரிவித்தார். இதனிடையே டிடிவி தினகரனின் அதிமுக அம்மா அணியில் புதிய உறுப்பினர்களை சேர்க்க தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் விண்ணப்பங்களும் விநியோகம் செய்யப்பட்டன.

இந்த நிலையில், டிடிவி தினகரன் தமிழகம் முழுவதும் ‘மக்கள் சந்திப்பு புரட்சிப்பயணம்’ என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முதற்கட்டமாக பிப்ரவரி 2ம் தேதி முதல் திருவிடைமருதூர், குடந்தை, பாபநாசம் திருவையாறு தொகுதிகளில் தனது சுற்றுப்பயணத்தை தினகரன் தொடங்க உள்ளார்.

பகிர்